Monday, April 21, 2008

ரெண்டு ரெண்டு பேராத் தான் போகணும், என்ன?

"ல்லாரும் அமைதியா இருங்க..! யாரும் பேசக் கூடாது..! எங்க போறதா இருந்தாலும் ரெண்டு ரெண்டு பேரா தான் போகணும். என்ன புரிஞ்சுதா?" கல்யாணி டீச்சர் கேட்டார்.

"எஸ் மிஸ்..!" எல்லோரும் கோரஸாய் சொன்னோம்.

மொட்டை வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. செயின்ட் பால் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் என்று எழுதப்பட்டிருந்த துணி காற்றில் பறந்து கொண்டிருந்தது. மொட்டை வெயிலில் மகாபலிபுரத்திற்கு வந்து சேர்ந்திருந்தோம். ப்ரின்சிபால் தேவசகாயம் சாரும், பவா மிஸ்ஸும் டிக்கெட் கவுண்டருக்கு சென்றிருந்தார்கள். நானும், ஆனந்தும் சண்டை போட்டுக் கொண்டிருந்தோம்..

"அருண்! சிப்ஸ் பாக்கெட் எனக்குடா..?"

"போடா.. இது எங்க அம்மா எனக்காக வாங்கிட்டு வந்து குடுத்தாங்க..! உனக்குத் தர மாட்டேன் போ!" சிப்ஸ் பாக்கெட்டை தூர நகர்த்திக் கொண்டேன்.

"அப்ப உனக்கு இந்த ஜெம்ஸ் வேணாமா?" ஜெம்ஸ் பக்கெட்டை காட்டினான். புது ஜெம்ஸ் பாக்கெட். அம்மா வாங்கியே தர மாட்டாங்க. கேட்டா,பல் எல்லம பூச்சி வந்திடும். நைட் தூங்கும் போது, அந்த ஜெம்ஸ் எல்லாம் குச்சி எடுத்து குத்தும் அப்படினு சொல்லி இருக்காங்க. ஆனா இங்க தான் அம்மா இல்லையே.

"சரி..! இந்தா உனக்கு சிப்ஸ். நான் ஒரு சிப்ஸ் தருவேனாம். நீ ஒரு ஜெம்ஸ் தருவியாம்! என்னா?"

"ஹை! ஆசையப் பாரு! உன்னோட சிப்ஸ் பாக்கெடில தான் நெறைய சிப்ஸ் இருக்கே! என்கிட்ட கொஞ்சம் ஜெம்ஸ் தான இருக்கு! அதனால் நான் ஒண்ணு தருவேன். நீ ரெண்டு சிப்ஸ் தரணும் ஓ.கே.வா?"

"ஓ.கே.டா" என்றபடி நான் சிப்ஸ் ரெண்டு கொடுக்க, அவன் ஒரு ஜெம்ஸ் கொடுத்தான்.

உய்ய்ய்ய்ய்ய்ய்...

விசில் சத்தம் கேட்டது. பி.டி.சார் தான் ஊதி இருக்கிறார். இது எங்களுக்கு பழக்கமான சத்தம் தான். ஒரு விசில் அடித்தால் எல்லோரும் பஸ்ஸிலிருந்து இறங்கி ரெண்டு ரெண்டு பேராக நிற்க வேண்டும். இரண்டு விசில் அடித்தால், எல்லோரும் பஸ்ஸில் ஏறுவதற்கு வந்து நின்று விட வேண்டும்.

இப்போது எல்லோரும் இறங்கிக் கொண்டோம்.

"அருண், ஆனந்த்.."

"எஸ் ஸார்.." என்றோம் இருவரும். பின் இரண்டு இரண்டு பேராக கூப்பீடுக் கொண்டே வந்தார். எல்லோரும் வரிசையக நின்றோம். நான் அருணின் இடது கையையும், அவன் என்னுடைய வலது கையையும் பிடித்துக் கொண்டோம். மற்ற கைகளில் ஜெம்ஸும், சிப்ஸ் பாக்கெட்டும் இருந்தன.

"டியர் சில்ட்ரன் எல்லோரும் இப்படியே போகணும், என்ன? யானை, பஞ்சபாண்டவாஸ் ஸ்கல்ப்டர், எல்லாத்தையும் பார்த்திட்டு அஃப அன் அவர்ல இங்கயே வந்து நிற்கணும். நிர்மலா மிஸ் நீங்க உங்க டீமை கூட்டிட்டு போங்க..."

நாங்கள் ஒரு பத்து பேர் நிர்மலா மிஸ் டீமில் இருந்தோம். நடந்தோம்.

வெயில் கொஞ்சம் குறைவாக இருந்தது. ஒரு குடையை எடுத்து மிஸ் பிடித்துக் கொண்டார்கள். நாங்கள் ஏற்கனவே சொல்லி இருந்த படி, கர்ச்சீப்பை எடுத்து தலையில் போட்டுக் கொண்டோம். மிஸ் பிடித்திருந்த குடையைப் பார்த்தவுடன் எனக்கு அம்மா ஞாபகம் வந்தது. அம்மாவும் இதே போன்ற ரோஸ் கலர் குடை தான் வைத்திருப்பார்கள். எனக்கு திடீரென்று எப்போ இந்த டூர் முடியும் என்று தோன்ற ஆரம்பித்தது.

ஆஃப் ஏர்லி எக்ஸாம் முடிந்ததும் டூர் போவது என்பது எங்கள் ஸ்கூலில் பழக்கம். ஒவோரு வருடமும் பெங்களூர், மைசூர், கன்யாகுமரி என்று கூட்டிப் போவார்களாம். நான் இது வரைக்கும் போனதில்லை. இது தான் ஃபர்ஸ்ட் டைம். எங்கள் ஃபோர்த் ஸ்டாண்டர்ட்க்கு இப்போ தான் ஃபர்ஸ்ட் டூர். இந்த தடவை மெட்ராஸ், மகாபலிபுரம், வேளாங்கன்னி என்று டூர் ப்ரோக்ராம் போட்டிருந்தார்கள். அதன்படி இப்போது இங்கே!

நைட் இங்கேயே ஒரு டூரிஸ்ட் ரிசார்டில் ரூம் போட்டிருந்தார்கள். எல்லோரும் பாடினோம். மலர் என்று ஒரு கேல் இருக்கிறாள். அவள் தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். நன்றாக டான்ஸ் ஆடினாள். நான் ஒரு பாட்டு பாடினேன். பாதிப் பாட்டிலே குரல் இழுத்து விட்டது. எல்லாம் மதியம் சப்பிட்ட ஜெம்ஸ் தான் காரணம். சளி பிடித்து விட்டது. அவள் கேலியாகச் சிரித்தாள். எனக்கு கோபம் வந்து விட்டது. இனிமேல் உங்கூட டூ என்று சொல்லி விட்டு வந்து விட்டேன்.

ஒரு பெரிய ஹால் இருந்தது. எல்லோரும் அதிலேயே படுத்துக் கொண்டோம். அப்படியே தூங்கிப் போனோம்.

திடீரென்று தூக்கம் போய் விட்டது. கையில் இருந்த மிக்கி வாட்சில் டைம் கேட்டேன். 'தி டைம் நவ் இஸ் ஃபைவ் தேர்டி' என்றது. பக்கத்தில் திரும்பிப் பார்த்தேன். ஆனந்த் இல்லை. எங்கே போனான்?

எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தேன். அரை இருட்டில் அவனைக் காணவில்லை. மெதுவாக எழுந்து ஹாலைத் தாண்டி, வெளியே வந்தேன்.

லைட் ஹவுஸின் லைட் மட்டும் சுற்றிச் சுற்றி விழுந்து கொண்டிருந்தது. கொஞ்சம் தூரத்தில் அலை சத்தம் கேட்டது. அங்கேஅவன் நின்றிருப்பது போல் தெரிந்தது. வாட்ச்மேன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். சத்தமே இல்லாமல் நடந்து நானும் பீச்சுக்கு வந்தேன். ஆனந்த் தான்.

"ஆனந்த்! என்னடா பண்ற இங்க?" என்று கேட்டேன்.

தடாரென்று திரும்பிப் பார்த்தான். "ஒண்ணும் இல்லடா..!"

"மிஸ் என்ன சொல்லி இருக்காங்க? எங்க போனாலும் ரெண்டு ரெண்டு பேராத் தான் போகணும்னு சொல்லி இருக்காங்கல்ல..? நீ பாட்டுக்கு இப்ப என்ன விட்டுட்டு தனியா உக்காந்திட்டு இருக்க...?" கேட்டேன்.

"எனக்கு வீட்டுக்கு போகணும் போல இருக்கு எப்படா டூர் முடியும்?"

"எனக்கும் அப்படித் தான்டா இருக்கு..! சீக்கிரம் முடிஞ்சிடும். கவலைப் படாத என்ன? இன்னிக்கு நைட் நாம கிளம்பிரலாம்..."

"சாரிடா..! நான் உனக்கு ஜெம்ஸ் குடுத்ததனால தான நீ இன்னிக்கு சரியா பாட முடியாம போய்டுச்சு..! எல்லாரும் சிரிச்சாங்கள்ள...?"

"அத விடு! இப்ப நான் பாடறேன்..! நீ டேன்ஸ் ஆடறியா..?"

"சரிடா.." என்றான்.

"அப்படிப் போடு..! அப்படி போடு..! பாடினேன். ஆனந்த் ஆடினான். எங்களோடு சேர்ந்து பீச்சும் ஆடினது போல் இருந்தது.

"டேய்.. டேய்..! அங்க பாரேன்...!" ஆனந்த கை காட்டின இடத்தைப் பார்த்தேன்.

கடலில் இருந்து பெரிய பெரிய அலைகள் வந்தன. பெரியதாக.. எங்க வீட்டுத் தோட்டத்தில தென்னை மரம் இருக்கும். அந்த உயரத்துக்கு அலைகள் வந்தன.

நாங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

***


வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

2 comments:

PPattian said...

டச்ச்சிங்... சுனாமியா? ரெண்டு பேரும் சேந்தே போய்ட்டாங்களா? :((

இரா. வசந்த குமார். said...

புபட்டியன் சார்... அதை சொல்ல மாட்டோமே...!