Friday, April 25, 2008

எனவே, நான், வேண்டாம். - 1.

Chapter 2.
Chapter 3.
Chapter 4.
Chapter 5.

***

நான் சந்த்ரு.

வெள்ளி இரவு ஸ்ப்ளெண்டரை எடுத்துக் கொண்டு, ஈ.சி.ஆர் ரோட்டில் வேகமாய்ப் பறந்து, பாண்டியில் சரக்கடித்து, பின்னிரவில் வீட்டுக்கு வந்து தூங்கி, சனி அரைநாளில் எழுந்து, இரவு டாஸ்மாக் சரக்குகளை மிக்ஸ் செய்து அடித்து விட்டு, ஞாயிறு எப்படிப் போகின்றது என்றே தெரியாமல் போய், ஸ்பென்ஸரிலோ, அல்சா மாலிலோ, சிட்டி சென்டரிலோ. இஸ்ஃபானியிலேயோ கூட்டத்தில் கலந்து, அடுத்த நாள் காலை எலெக்ட்ரான் எழுத்துக்களைப் பீச்சியடிக்கும் எந்திரத்தின் முன் தொலைந்து போகும் கணிப்பொறி அடிமைகளில் ஓர் இந்தியப் பிரஜை நீங்கள் என்றால், நான் உங்களால் புரிந்து கொள்ளப்படுவேன்.

இது என்னைப் பற்றிய கதை அல்ல.

என்னைப் பற்றியும் சொல்லிக் கொள்ள சில பத்திகள் உள்ளன. மீ இளம் வயதில் மெரீனா அலைகளில் தொலைந்து போக இருந்தது, கிராமத்துக்குச் சென்ற ஒரு மாத லீவில் கிணற்றில் இருந்து வரிசையாக எடுக்கப்பட்ட ஒரு குடும்பப் பிணங்கள், காலேஜின் சிம்லா டூரில், ஓர் இரவின் குளிருக்கு கம்பளிப் போர்வையின் உள் சூடு ஏற்றிக் கொண்ட லாட்ஜ் இரவு...

இது அழகர்சாமி பற்றிய கதை.

அ.சாமி யார்? சொல்கிறேன். எங்கும் போகப் போவதில்லை நான். இன்று லீவ் சொல்லி விட்டேன். எதற்கு? உங்களுக்கு இந்தக் கதை சொல்ல. அவ்வளவு அவசரமா? ஆம். ஏன்? தெரியவில்லை. சொல்லி விடுகிறேன். அழகர்சாமி என் வாழ்வில் வந்தது முதல், அவனுக்கு இருந்த நோயை நான் கண்டறிந்தது, (நோய் என்று சொல்லலாமா, Mental Disorder எனலாம். நன்றி : விக்கிபீடியா.), அவன் இப்போது அடைந்துள்ள நிலைமை...! அனைத்தும் சொல்கிறேன். சென்னைக்குப் போக 6 மணி நேரம் ஆகும். அதுவும் பெங்களூரின் தெருவின் கோலிக் குண்டு ட்ராஃபிக்கில் இருந்து மீண்டு...!

அழகர்சாமி மதுரையில் இருந்து வந்தவன். கேட்டால் அப்படித் தான் சொல்லுவான். 'எனக்கும் மதுரை தெரியும். தெற்கு மாசி வீதியில், கல்யாணி கவரிங் ஒட்டிய சந்தில் தான் என் நண்பன் சந்திரசேகரன் வீடு என்று சொல்லுங்கள். உடனே சினேகமாவான். பின் சொந்த ஊர் மானாமதுரை என்பான். அங்கே எந்த மாசி வீதியையும், எந்த சுந்தரபாண்டியனையும், சொக்கநாதனையும் தெரியாததால், நான் அதற்கு மேல் வற்புறுத்திக் கேட்கவில்லை. உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் கேட்டுப் பார்க்கலாம். கூட வருகிறீர்கள் தானே? நல்லது.

சென்னையின் அழுக்கான வடபழனி டிப்போ பின்புறம் உள்ள முத்தம்மாள் காலனியின் அடுக்கு வீடுகளில் பிறந்து வாழும் சந்த்ருவுக்கும், மதுரை தந்த மாணிக்கம் அழகர்சாமிக்கும் எப்படி தொடர்பு?

இந்த இடத்தில் என் வேலையைப் பற்றி சொல்லி விடுவது அவசியமாகிறது. வேளச்சேரியின் இடுக்குகளில் உள்ள ஓர் 'அழைப்பு மையத்தில்' பணியாற்றுகிறேன். Call Center என்று சொன்னால் என் மேல் தார் பூசவும், எனது கொடும்பாவி எரிக்கவும் சிலர் எப்போதும் தயாராக இருப்பதாக தகவல்!

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஒரு Customer Products கம்பெனியின் Customer Support Division, இந்த Call Center -உடன் ஓர் ஒப்பந்தம்! அவர்களது மைக்ரோ அவன், ஃபிரிட்ஜ், குண்டூசி, பின்னூக்கு, காண்டம் வரைக்கும் ஸப்போர்ட் செய்கிறோம்.

உதாரணத்திற்கு சில கஸ்டமர் Queries -ம், அதற்கு எங்கள் Solutions -ம் என்று சொல்லி, உடனடியாக இந்தக் கதைக்கு A முத்திரை குத்திக் கொள்ள நான் விரும்பவில்லை.

ழகர்சாமியை ஒரு சாதாரண நாளில் - எந்த ராக்கெட்டும் ஏவப்படவில்லை, இந்திய அணி ஜெயிக்கவில்லை, மின்சாரம் தடையின்றிப் பாயவில்லை, காற்று ஒலிப்பான்களை நகர எல்லையில் உபயோகிக்காமல் இல்லை - மிகச் சாதாரண நாளில் சந்தித்தேன். எங்கே? என் அலுவலகத்தின் வாசலில்! பூப்போட்ட பிளாஸ்டிக் பேக், நீலம் பரவிய ஒரு ஃபுல் ஹேண்ட் சட்டை, ஒட்டிய உடலோடு, இறுக்கப் பிடித்த பழுப்பு பேண்ட், கண்டக்டர் ஷூ, நகரத்தின் பிரம்மாண்ட வெளிச்சப் புள்ளிகளை, வெறியோடு ஓடும் பெட்ரோல் பூச்சிகளையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

"யார் நீங்க? இங்க என்ன பண்றீங்க..?" கேட்டேன்.

மிரண்டான். எனது அலங்காரம் அவனுக்கு கொஞ்சம் பயத்தைத் தந்திருக்க வேண்டும். பளிச்சென்ற ஷேவ் செய்த முகம், இன் செய்த அயர்ன்ட் மெரூன் ப்ளெய்ன் ஷர்ட், ரோஸ் நிற பக்கிள் இறுக்கத்தில் ஹோலோகிராம் மின்னலில் பெல்ட், பேண்ட், கட் ஷூ என்றதோடு இல்லாமல், அலுவலகத்தின் நாய்ப் பட்டையும் அணிந்து, நகரத் திமிர் திகழும் 21-ம் நூற்றாண்டின் நாகரீக வேலைக்காரனைக் காணும் கிராமத்தானின் மிரட்சியை அட்சர சுத்தமாகக் காட்டினான்.

"சார்! நான் இங்க வேலைக்கு இண்டர்வ்யூக்கு வந்தேன்! கிடைக்கல! அதான் என்ன பண்றதுன்னு தெரியாம நிக்கறேன்!"

"ஊருக்கு கிளம்ப வேண்டியது தான்! வேறென்ன செய்றது? எந்த ஊர் நீ?" வேலை இல்லாதவன் என்றதும் திமிர் எகிறியது. 7 பாராக்களுக்கு முன் படித்துப் பாருங்கள் தயவு செய்து! அந்த பதிலைத் தான் சொன்னான். எனக்குப் பாவமாக இருந்தது.

"விவசாயம் இல்லை! நெலம் எல்லாம் காஞ்சு போச்சு! ஊருல என்ன சார் இருக்கு இனிமேல! ஒண்ணும் இல்ல! ஏதோ கொஞ்சம் படிச்சிருக்கேன்! அமெரிக்கன் காலேஜ்! பி.ஏ., ஹிஸ்டரி! எதுவும் வேலை கிடைக்கல! மெட்ராஸ்ல கால் சென்டர்ல தான் கொத்துக் கொத்தா ஆள் எடுக்கறதா கேள்விப்பட்டேன். அதனால தான் இங்க வந்தேன்! வேலை கெடைக்காம ஊருக்குப் போனா... அது மரியாதையா இருக்காது சார்!" என்றான்.

எனக்கு கொஞ்சம் பரிதாபமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது. இது போன்ற வாழ்க்கை தேடி கிராமத்தில் இருந்து வருபவனுக்கு உதவி செய்வதன் மூலம், நானும் சமூக அக்கறை உள்ளவன் என்று சொறிந்து கொள்ள நினைத்தேன்.

"சரி! உனக்கு நான் ஒரு ஹெல்ப் பண்றேன்! உனக்கு வேலை கிடைக்கற வரைக்கும் என் வீட்டுல தங்கிக்கலாம். ஜாப் கிடைச்சதுக்கு அப்புறம் உன் வசதிப்படி மாறிக்கலாம். நான் இப்ப தனியா தான் இருக்கேன். பேரண்ட்ஸ் ரூர்கி போய் இருக்காங்க! அக்கா ஹஸ்பண்ட் யூனிவர்சிட்டு ப்ரொபஸர். அக்கா ப்ரெக்னன்ட். டெலிவரிக்கு ஹெல்ப் பண்ண போயிருக்காங்க! எங்கூட இருக உனக்கு ஓகேவா?"

"சார்! ரொம்ப தேங்க்ஸ் சார்!"

"உனக்கு ஊர்ல யார் இருக்கா?"

"யாரும் இல்ல சார்! ஒரே ஒரு பாட்டி மட்டும் தான்!" என்றான்.

"சந்த்ரு! அங்க என்ன பண்ணிட்டு இருக்க? ஹெட் கூப்பிடறார் பாரு!" மதி இரைந்தான்.

இவனிடம் சொல்லலாமா என்று நினைத்தேன். சட்டென்று மாற்றிக் கொண்டேன். கம்பெனியில் ரிஜக்ட் பண்ணப்பட்ட ஒரு கேண்டிடேட்டை எம்ப்ளாயி கூட தங்க வைத்துக் கொண்டால், அது ஏதாவது பிரச்னையாக ஆக்கப்படலாம்.

எனவே, வேண்டாம்!

"நத்திங் மதி! கொஞ்சம் வீடு வரைக்கும் போய்ட்டு வர்றேன்! ஒரு ஆஃப் அன் ஹவர் மட்டும் என் டெர்மினல்ஸ்க்கு Stand By போடச் சொல்லு! இல்லாட்டி ட்ரெய்னிங் பேட்சில் ராஜாராமன் இருப்பான் பார்! அவனை பார்த்துக்கச் சொல்! நான் வந்திடறேன்!"

படை வீரர்களைப் போல் நின்றிருந்த இரட்டைக் கால் குதிரைகளில் இருந்து, பல்ஸரை உருவினேன்.

என் பல்ஸர்.

(தொடரும்.)

***

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

No comments: