Monday, December 17, 2018

சுழலில் இறங்கும் சிற்றிலைகள்.

னிக்கூரைப் பாறை என்றெண்ணிப் பற்ற விழைந்தது போல் ஒரு காதலைப் பற்றிக் கொண்டு இப்பேராழியைக் கடந்து சென்று விட முயன்றேன். தொடத் தொட விலகி வேறொரு கிளையில் அமரும் பட்டுப்பூச்சியைப் போல் அது கிட்டும் என மாயம் காட்டி கிட்டாது எட்டிப் பறக்கிறது.
பொற்காசுகள் குவிந்து கைபடாமல் கிடக்கும் ஆழப்புதையல் போல் ஓர் பேரன்புக் குவியலை யார் கண்படாமலும் எங்கோ பதுக்கி வைத்திருக்கிறேன். வளை தோண்டும் எலி போலாவது வந்து கொறித்துச் சென்றாலென்ன நீ?

சேர்த்தணைத்துக் கொல்லும் இரு கரங்கள் போல் முளைத்து வளர்ந்து எழுந்த ஓரன்பு, ஒரு பிரியம், ஓர் ஆதுரம் உருவு கொண்டு பிறவிகள் தோறும் எனைப் பற்ற வருபவள் என்று ஒரு கணமேனும் நாம் அறிந்திருந்தால், அச்சொல் வந்து அன்று விழுந்திருக்குமா?

சுடறேற்றிய பின் தூர எறியும் கருகிய தீக்குச்சியைப் போல் ஒரு சொல் அணைந்து சென்று விட்டது. அச்சுடர் கல்லில் செதுக்கியது போல் புயல் காற்றுக்கும் பெருமழைக்கும் கடும் குளிருக்கும் அசையாது ஒலித்துக் கொண்டிருக்கின்றது, அச்சொல்லின் ஒலியை.

நீரில் மிதக்கும் நிழல்கள் வீசும் காற்றுக்கும் அலையும் அலைகளுக்கும் ஏற்ப அசைந்து கொண்டிருக்கின்றன. மேலெழும்பியும் கீழே தாழ்ந்தும் அக்கரு உருவங்கள் வான் ஒளிக்கு மண்ணுக்குக் காட்டும் நம் எதிர்வினைகளோ? பொலியும் அவ்வொற்றைக் கதிருக்கு முன் உருகிச் சென்று விடாமல் நம் அகத்தை ஆழக் கவ்வியிருக்கும் ஆணவத்தின் நீள் கூர் நகங்களை வெட்டித் தூரப் போடும் வாள் எங்கே? உன் விழிப்பார்வை தானோ?
சென்ற காலங்களின் நினைவுகள் என நிகழ்ந்தவை அனைத்தும் சென்று சேரும் அப்புள்ளியை அமர்ந்து காக்கும் பெரும்பூதமாய் இருப்பது தான் எது? காலக்குடுவையின் சிறுதுளையில் சொட்டிக் கொண்டிருக்கும் மணற்பருத்துகள்கள் போல் நம் சொற்களும் அங்கு சென்று சேர்ந்து கொண்டேயிருப்பனவோ? சொல் தேவி எங்கோ இருந்து நமட்டுச் சிரிப்புடன் அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில் வாய் மூடி மெளனமாய் நம்மால் இருப்பதும் தான் இயல்வது எங்ஙனம்?


***

இது போன்ற இருபது கவிதை கட்டுரைகளைத் தொகுத்து அமேஸான் தளத்தில் ’செம்பொற்சுடரொளிர் சிறகு’ என்ற பெயரில் நூலாகக் குறைந்த விலையில் வெளியிட்டுள்ளேன். இணைப்புகள் இடது பக்கமும் உள்ளது.

வாங்கிப் படித்துத் தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். 

Thursday, October 11, 2018

நான் ஒரு பொன்னோவியம்...

ளையராஜாவின் ஒரு ரத்தினம், இப்பாடல். அதற்கான என் வரிகள்.




ஆண்:
ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

ஆண்:
ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ
பாடிவரும் பூங்குயிலோ
பால்நுரை வந்தாடிடும் வஞ்சிக் கொடியோ
பார்க்கையில் பூமரம் பழகிடும் இருதயம் பருகிடும் (ஆயிரம்)

ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியும் வரும் தணுமை

சரணம்.1:
ஆண்:
நானும் அழைத்திட நாணம் தடுத்திட
நாடகம் ஆடிடும் நாயகியே
நானும் அழைத்திட நாணம் தடுத்திட
நாடகம் ஆடிடும் நாயகியே

பெண்:
மேகமும் கூட்டியது குளிர்
மோகத்தை மூட்டியது

ஆண்:
சிறுதூறல் பெருஞ்சாரல்
மழையாதல் மதுஊறல்
துணைதேடல் உனைச்சேரல்
மகவாதல் மயங்கிடும் பொழுதிதுவே

பெண்:
சிறுமணி சிணுங்கிடும் சிலைலயம்
சிவந்த முகத்தில் சிதறும் சிரிப்பில்

ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

சரணம்.2:
பெண்:
ராகம் இசைந்திட தாளம் இணைந்திட
ராஜனின் ராஜ்ஜியம் ராத்திரியில்
ராகம் இசைந்திட தாளம் இணைந்திட
ராஜனின் ராஜ்ஜியம் ராத்திரியில்

ஆண்:
பொன்மணி ஓவியங்கள் சொல்லும்
பூந்தமிழ்க் காவியங்கள்

பெண்:
விழிபேசும் விளையாடும்
உடல்கூசும் உறவாடும்
ஒருவேகம் உருவாகும்
ஒருபோதும் விலகிட விழையாதே

குழு:
எழுதிய இசையது எழுப்பிடும்
எமது மனதில் அமைந்த அழகின்

ஆண்:
ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

சரணம்.3:
ஆண்:
வந்தோம் தினம்தினம் தந்தோம் சுகம்சுகம்
வந்ததும் தந்ததும் நானல்லவோ
வந்தோம் தினம்தினம் தந்தோம் சுகம்சுகம்
வந்ததும் தந்ததும் நானல்லவோ

பெண்:
விடையது தெரிந்ததுவே உங்கள்
விருப்பமும் புரிந்ததுவே
விடையது தெரிந்ததுவே உங்கள்
விருப்பமும் புரிந்ததுவே

ஆண்:
மனம்தேடும் உனைநாடும்
மொழிமாறும் துணைசேரும்
பகலோடும் இரவாகும்
உறவாகும் உனைத்தொடும் விழியிதுவே

பெண்:
உருகிடும் உடலிதில் உறைந்திடும்
உமது உயிரில் உணரும் உருவில்

ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

ஆண்:
பாடிவரும் பூங்குயிலோ
பால்நுரை வந்தாடிடும் வஞ்சிக் கொடியோ

பெண்:
பார்க்கையில் பூமரம் பழகிடும் இருதயம் பருகிடும்

ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

***

Saturday, October 06, 2018

நிழல்வேகப் பயணி.

ன்று இந்த இரவுடன் கழியட்டும் இந்தக் குளிர், நாளை வருவது மற்றொரு குளிர். தலைக்கு மேல் விரிந்திருக்கும் கருங்கூந்தலில் எண்ணி முடிக்கவியலா தொட்டறியா முடியா இந்த மின்னும் மல்லிகை மொட்டுகளை, நாளை இரவில் வேறொரு இடத்தில் காண்போம். இந்த நறுமணம் மிதக்கும் தென்றல் இத்தோடு கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளட்டும், நாளை வீசட்டும் மற்றொரு ஈரக்காற்று.

இந்தத் தொடுகை இந்த இரவுடன் அடங்கட்டும், நாளை தொடங்குவது வேறொரு தீண்டல். இந்தக் கோதல், இந்த மென்சூட்டு முத்தம், இந்த தடவல், இந்த கலைந்த விரிப்புகள் இந்த ஒற்றை நிலவின் அடியில், சில்லிடும் மரநிழல்களுக்கிடையில், சரசரக்கும் பாம்புகள் போல் பின்னிக் கிடக்கும் இந்தப் பிணைப்புடன் முடியட்டும், நாளை இரவில் துவங்கட்டும் மற்றொரு பிணையல்.

இந்தக் கிசுகிசுப்பு, இம்முணுமுணுப்பு, இம்முனகல், இவ்வியர்வை, இவ்வெம்மை, இந்த நடுக்கம் இன்று இந்த பின்னிரவின் கடிகாரச் சத்தத்துடன், இந்த சுவர்ப்பல்லியின் ரீங்காரத்துடன், இந்த சில்வண்டுகளின் ஊதலுடன், இந்த நீர்த்தவளைகளின் உரையாடலுடன், வந்து குழுமியிருக்கும் கருமுகில் கூட்டங்களின் இடியோசையுடன் இணைந்து கொள்ளட்டும்.

துளிக்குருதி பூக்கும் இந்த நகக்கீறல்கள், இந்த சுவைக்கும் பற்பதியன்கள், இந்த திசையறியாப் புரளல்கள், இந்த சில்லறை முடித்தூறல்கள் இந்த மெளனத்துடன் சேர்ந்து கொள்ளட்டும். நாளை மிஞ்சட்டும் சில சொற்களும் சில பார்வைகளும் சில உதட்டுச்சுளிப்புகளும் சில கண்காட்டல்களும் அவை மீட்டுக் கொண்டு வருகின்ற மற்றுமொரு நாடகத்தையும் அதன் உணர்வேகங்களையும்.

Thursday, September 20, 2018

அகமெழு சந்தம்.



தேவி,

சொற்சுழலில் மிதக்கும் ஒற்றை இலை, நீர் தாங்காது மிதக்கும் வெளி இது. மின்னல் ஒளியின் கணத்தில் ஓர் அறிதல், இம்முத்தம். பேரருவிக் கீழ் எப்போதும் ஒரு குளிர்ச்சி. பெருகும் ஆற்றங்கரையில் நகரும் நண்டின் கீறல் இவ்விரவு. போதும்...மோதும் என முட்டிக் கொள்ளும்  கொழுத்த முகில்களின் மின் அதிர்வு இக்கூடல்.

சிறு சிறகுகளால் உரசிக் கொள்ளும் சிட்டுக்குருவிகள் அலகு கோதும் அனல் இம்மாலை. தேடிச் சேர்த்த செல்வம் மேலேயே உறங்கும் கஞ்சன் கைநழுவ விடும் காசு இச்சொற்கள். வானவில் எழும்பும் எதிர்வானம் இவ்வூடல். முதல் குரலின் முதிர்மை இவ்விலகல். மழைக்காட்டின் மண் கவ்வும் அடிமர வேர் இத்தழுவல். கிளை வளர்ந்த மரம் மேல் படரும் கொடி இவ்விறுக்கம். கூழாங்கற்கள் பதிந்து கிடக்கும் பாதை இவ்விழி அழுத்தம்.

தேங்கிய வனத்தின் தேன் சுரங்கம் போன்றது இளமை முளைத்த முதல் சேர்த்த இவ்விருப்பம். மலை மூதூரும் மின்மினி கண்ட அளவில் இம்மேனி அறிதல். அடியாழப் பாறை மிதக்கும் சூடான மலைக்குழம்பின் அடர்த்தி இப்பார்வை. நீர் சுமக்கும் கலயம் போல் ஒரு தளும்பல். பின்னிரவுக் குளுமை போல் ஒரு தீண்டல். முன்மாலை மல்லிப் பாத்தியில் நடத்தல் போல் ஒரு தூண்டல். நீள் நகங்கள் எழுதும் முடியாக் காவியமொன்றின் அறியா அசைவுகள், குன்றா இவ்விசைவு.

திரும்பல் இல்லாக் காலநதி சுழித்துப் பெருகியோடும் இவ்வெளியில் ஒரு படகென உனை நினைத்து தினம் எழும் அடங்கும் இம்மனம் நிறைய, குழலென குழலிசையென நீள்சுருள் குழல் வந்துத் தீண்டித் தீண்டி மணங்காட்டும் ஒரு கனவுக்குள் விழிக்கிறேன்.

திசைகள் எல்லாம் மலர்களென மலர்ந்திட, வானும் நிலமும் வசந்தங்களால் நிறைந்திருக்க, உன்னிரு பாதத்தூளிகளைக் கண்டு சிரம் கொண்டு அதில் முட்டி, செங்குருதியால் நகங்களைக் கழுவ சித்தம் கொண்டு தேடியலைகிறேன்.

சிலையென நின் தேகம் செதுக்கிச் செதுக்கி பாறையிலிருந்து எடுத்த வெண்ணைக்குழைவென நிற்கும் வளைவெழிலில், தேவி, என் மனக்கன்று சுற்றிச் சுற்றி வருகிறது. பாதமுதல் சிரம்வரை ஒவ்வொரு கணுவிலும் அழகு பூத்த பசும்பொழில் அரசி நீ.

பாதமென எழுந்த இரு பூங்கொத்துக்கள் இம்மண்ணில் வைக்கின்ற நொடிகளில், என் மனதில் எழும் முதற்சொற்களால் அவற்றை அர்ச்சித்து நிரப்புகிறேன். பத்து மொட்டுகள். பத்து மகுடங்கள். ஐந்தைந்தாய்க் குழு அமைத்த புறாக்குஞ்சுகள். வைக்கின்ற ஓவ்வோர் அடியிலும் அலைகளை அமைதிப்படுத்தி, அருள்கின்ற அமுதக்கட்டிகள். கனிந்த கரைந்த செழுந்தொடைகள். தேவி, நீ பிறப்பிக்கும் இப்பிரபஞ்சத்தின் மூலம் உனதேயல்லவா. நீள்சுடர். அணைப்பின் வெம்மையின் ஊற்று. தீரா சுழல். கனிந்துருகும் கனல். அள்ளி எரிக்கும் அனல். முத்தியெடுக்க ஈரம் பதிகின்ற முத்துத்துளி. திகட்டா மணம். 

Monday, September 17, 2018

பர்வதி மலைக்கு ஒரு சிற்றுலா.



பூனாவிற்கு வந்து முதன்முறையாக வெளியே சென்றேன்.

பர்வதி மலை என்பது அதன் பெயர். பேஷ்வாக்களின் தர்பார் நிகழ்ந்த பகுதி அது. ஒரு சிறு குன்றாக உள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட படிக்கட்டுகளைக் கொண்டது. மேலே சென்றால் சில கோயில்களும், தர்பாரும், ஒரு அரும்பொருட்காட்சியகமும் உள்ளன.

ஒரு சனிக்கிழமை அங்கே சென்று வரலாம் என்று முடிவெடுத்துக் கிளம்பினேன். அங்கே தான் தவறு நிகழ்ந்தது.முந்தின வெள்ளி இரவு தான் கடைசியாகச் சாப்பிட்டது. சனிக்கிழமை விரதம் என்று இருந்து விட்டேன். எனவே அன்று மாலை நான்கு மணிக்கு அறையிலிருந்து கிளம்பும் போது, நான் சாப்பிட்டு இருபது மணி நேரங்கள் ஆகி விட்டிருந்தன.

ஹடப்ஸரிலிருந்து ஆட்டோ பிடித்தேன். (ஏனெனில் பேருந்துகள் இன்னும் பிடிபடவில்லை). கிளம்பி ஸ்வர்கேட் வழியாகச் சென்று பர்வதி மலை அடிவாரத்தில் நிறுத்திய போது மீட்டர் 120 எனக் காட்டியது. இங்கெல்லாம் மீட்டர் மட்டுமே கேட்கிறார்கள்.

அடிவாரத்தில் பூ, மாலை, தேங்காய்க் கடைகளுடன் சின்ன உணவுப்பொருட்களும் விற்றார்கள். வியப்பாகப் பார்த்தேன். பிறகு புரிந்தது ஏன் என்று. மலையேறத் தொடங்கினேன். அகலமான படிக்கட்டுகள் தான். ஆடுகள் தாவித்தாவி ஓடின. அங்கேயே வாழும் சிறுவர்கள் பம்பரம் சுழற்றிப் பறக்க விட்டனர். பாறைக் குழுமமே மலை என்றாயிற்று.

கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்கச் சாப்பிடாதது, எக்கச்சக்கமாய் ஊதிப்போயிருந்த உடல் எல்லாம் சேர்ந்து.. ஆம், அதே தான். பத்து, பதினைந்து படிக்கட்டுகள் ஏறுவதற்குள்ளாகவே புஸ்..புஸ்ஸென்று மூச்சு வாங்கியது. உடலின் அனல் ஊற்று கிளம்பி வந்தது. ஓரக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்றேன். கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. எப்போதும் மலையேறுகையில் தோன்றும் அதே நினைப்பு. ‘ஆகா.. சாகப் போகிறோம். மொழி தெரியாத ஊரில் செத்து இங்கேயே ஆவியாக ஆலைய வேண்டுமா? ஆவியானாலும் சொந்த ஊரில் ஆவியாவேன்..’ என்று உறுதி கொண்டு, கொண்டு வந்திருந்த நீர் பாட்டிலில் நீரருந்தி தாகம் தணிவித்தேன்.

இந்த நிலையில் எந்த பெருமிதமும் பார்க்கக் கூடாது என்று, படிக்கட்டிலேயே அமர்ந்து கொண்டேன். மூச்சு சீரடையும் வரை எழுந்திருக்கவே கூடாது. அதற்கு அரை நாள் ஆனாலும் சரி என்று. பிறகு, நான் மட்டுமல்ல பெரும்பாலானவர்கள் அமர்ந்து அமர்ந்து தான் மேலேறுவதைக் கண்டு ஓர் அல்ப சந்தோஷம் வந்தது. இப்படியே சென்று, ஒரு வளைவு திரும்பியதும், ஒரு சின்ன மண்டபம் போல ஓரத்தில் இருந்தது. அங்கும் ஒரு சிறு அமரல். அதை ஒட்டி, ஒரு கல் திட்டில் ஒரு பெண்மணி சிறு குழந்தையுடன் அமர்ந்திருந்தார். மறு ஓரத்தில் அமர்ந்து மீண்டும் நீர். பசி மயக்கம் வேறு. மண்டபத்திலிருந்து உச்சி வரை சின்னப் பையன்களும் பெண்களும் ஏறி, இறங்கி ஓடிப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். பயிற்சியாளர் விசிலடித்துக் கொண்டு அவர்களை கவனித்தார். விசுக்..விசுக்கென்று மின்மினிப் பூச்சிகளைப் போல பறந்த இளையோர்களைப் பார்க்கையில் எழும் பெருமிதமும் பெருமூச்சும்.

கடும் பசி. தண்ணீர் மட்டுமே குடித்துக் குடித்து அனலவிக்கையில், உச்சியில் இடது புறமாக ஒரு உணவகம். தெய்வமே நேரில் தோன்றியது போல். ‘ஒரு ப்ளேட் போகா’ என்றேன். அது வருவதற்குச் சற்று நேரமாகும் என்பது போல் தோன்ற, காத்திருக்க இயலாது என்று ஒரு லெமன் சர்பத். உப்பும் எலுமிச்சையும் கலந்த அக்குளிர்ந்த நீர் நா தீண்டி உள்ளே இறங்குகையில் தான் எத்தனை குளிர்ச்சி..! கண்களில் ஒளி வந்தது. காதுகள் திறந்து கொண்டன. உலகம் எனக்குள் நுழைந்தது.

கீழே நகரின் வாகனங்களின், மக்களின், பாடல்களின், வீசும் காற்றின், பறவைகளின் அத்தனை ஓசைகளும் கேட்கத் தொடங்கின. வந்த பாதையை விட மற்றுமொரு கடும்பாதையும் அருகில் இருந்தது. அங்கே அவ்வளவாக மக்கள் வராததால், ஆம்... காதல் இணைகள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். காத்திருந்து வந்த போகாவையும் உண்டு விட்டு தெம்பாக, மதிலுக்குக் கீழே எட்டிப் பார்த்தேன். குழந்தைகளும் சிறார்களும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். மேலேறினேன்.

நுழைவாயிலுக்கு நேராய் பாண்டுரங்கர் கோயில். அதை ஒட்டி இடது புறத்தில் அருங்காட்சியகம். அதையும் தாண்டிச் சென்றால், தர்பாரும், முருகன் கோயிலும் விஷ்ணு கோயிலும் வருகின்றன. இரு கோயில்களுக்கு நடுவில் ஒரு வெட்ட வெளி. அதன் நடுவில் வட்டமாய்க் கூரையிட்டு, தியானம் செய்யலாம் என்று போர்ட் இருந்தது. மக்கள் அங்கே தான் சிதறிச் சிதறி அமர்ந்திருந்தனர்.

நான் முதலில் விஷ்ணு கோயிலுக்குச் சென்றேன். சரியாக நான் உள்ளே நுழைவதற்குள், பூசகர் வெளியே வந்து கதவுகளைப் பூட்டினார். கதவுகளில் தெரிந்த இடைவெளியில் கும்பிட்டு விட்டு, முன் நின்ற கருடரையும் தொழுதேன். இந்தக் கோயில்களின் கோபுரம் வங்கக் கோயில்கள் போல் தாமரை மொட்டுகள் போல் கூம்பிக் கூம்பிச் சென்று அமைகின்றன. கோயிலைச் சுற்றுகையில் மராத்தியர்கள் கட்டி வைத்த கோட்டைச் சுவர்களில், வீரர்கள் நின்று தொலைதூரத்தை நோக்கும் இடைவெளிகளில் எல்லாம், இன்றைய காதலர்கள் அப்பியிருந்தனர்.

வெளியே வந்து, அந்த தியான வெளிக்குச் சென்றேன். அதை ஒட்டி மலை விளிம்புக்குச் சுவர் கட்டி வைத்திருக்க, அந்தக் கொஞ்சம் சரிந்த பகுதியில் பலர் நின்று தற்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். மாலை வேகமாக மங்கிக் கொண்டே வந்தது. தூரத்தில் தெரிந்த சஹ்யாத்ரி மலை மடிப்புகள் மஞ்சள் காற்றில் மிதந்தன. காலடியின் கீழ் நகரின் ஒரு பகுதி வீடுகளாலும், வாகனங்களாலும் இயங்கிக் கொண்டிருக்க ஸீவேஜ் போர்டு கேம்பஸை ஒட்டி ஒரு சிறு நதி புகுந்து நுழைந்து எங்கோ சென்றது. அபார்ட்மெண்டுகள் நின்றெழுந்து வானைத் தீண்டின. தெருக்கள் நாய்களாலும் வானம் பறவைகளாலும் இரைச்சல் கொண்டிருந்தன.

வெளி வந்து மேடேறி, கார்த்திகேயன் ஸந்நிதிக்குச் சென்றேன். நம் அழகன் இங்கெ கரிய  திருமேனியில் மின்னினான். வேண்டி விட்டு, சுற்றி வருகையில் ஆறுமுகனின் அவதாரமும் ஆற்றிய வினையும் ஓவியங்களாக வரையப்பட்டிருந்தன. அதில் முருகன் என்றும் அவன் சொல்லப்ப்ட்டிருக்க, சிலிர்த்தேன். முருகு என்றால் அழகு என்று தமிழ் கூறும். கேரளத்தில் கூட அவனை ‘ஸூப்ரம்ண்யன் ஸந்நிதி’ என்றே சொல்கிறார்கள். மராட்டிய மண்ணில் இவர்கள் ஆட்சி நிகழ்ந்த  பகுதியில், குமரனை முருகன் என்று சொல்லியிருப்பது கண்டு உளமகிழ்ந்தேன். தஞ்சையை ஆண்ட போது இது வந்திருக்கலாம் என்று ஓர் எண்ணம்.தொடர் படங்களில் கார்த்திகைப் பொய்கை இல்லை, ஆனால் கங்கையில் பிறந்ததாகச் சொல்கின்றனர். சூரபத்மனைக் கொல்லும் வரை படங்கள் இருந்தன. சுற்றி விட்டு, மேல் காற்று திரண்டு பாய்ந்த சூழ்ந்த அம்மதில் சுவர்கள் பல நூற்றாண்டுகளைக் கண்டிருந்தன.

முருகன் கோயிலை ஒட்டி பேஷ்வாக்களின் தர்பார். அவர்களின் படங்கள், முகலாயர் காலத்திலும் அதற்குப் பின்பும் மராத்திய சாம்ராஜ்யத்தின் பரப்பளவு, மன்னர் வருகை, போர்கள் முதலியன வரையப்பட்டிருந்தன. பார்த்து விட்டு, வாசலைக் காத்து நின்ற ஊமைச் சிறு பீரங்கிகளைத் தடவி விட்டு, முன்னே வந்தேன். அருங்காட்சியகத்திற்கு அப்புறம் போகலாம் என்று பாண்டுரங்கர் கோயிலுக்குப் போனேன். கரிய திருமேனிகள். பளபளப்பாய் இருந்தனர்.

இன்னும் கொஞ்சம் மேலே படியேறிப் போனால், மயக்கும் இரு விழிகளோடு மோகினியர் வாயிலைக் காக்க, ஆலவாயன் இறைவன் கோயில், குடும்பத்தினருடன். லிங்க ரூப நாயகன் கோயிலில் ஒரு பெண் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார். வணங்கி விட்டு இடதுபுறம் பிள்ளையார், சுற்றி வருகையில் பவானி மாதா, முன்புறம் பெருமாள் சிற்றாலயங்கள். வணங்கி விட்டு, ஒட்டியிருந்த சிறு திண்ணைப் பகுதியில் அமர்ந்து சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். வெளிவந்து அருங்காட்சியகம் சென்றேன். நுழைவுக் கட்டணம் 10 ரூ.

தரைத்தளமும் முதல் தளத்திலுமாக இருந்தது. கீழே மையத்தில் பெரும்பல்லக்கும், மத்தளங்களும், பெரும் சாமான்களும் இருக்க, சுற்றிலும் கண்ணாடி பத்திரங்களுக்குள் அரசர்கள் பயன்படுத்திக் கிடைத்தவை வைக்கப்பட்டிருந்தன. சமையல் பாத்திரங்கள், வாட்கள், ஆயுதங்கள், நகைகள், நாணயங்கள், புகைப்படங்கள், ஆடைகள், தலைப்பாகைகள், ஓவியங்கள், மினியேச்சர் பொம்மைகள். வரலாறு எனும் பெரும் நதியைச் சல்லடைகள் வழியாக அள்ளிப் பார்ப்பது போல் இருந்தது. கைக்குக் கிடைத்த இந்தச் சின்னத் துளிகளைக் கொண்டு அந்த நதியை நாம் நிரப்பிக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. இடையில் நமது அழுக்குகளையும் கலந்து விட்டால், கலங்கிய நதி ஆழத்தில் எதையும் காண விடாது, குழைசலை மட்டுமே காட்டுகின்றது.

‘தொடாதீர்’ என்று எழுதப்பட்டிருந்த மத்தளங்களைச் சிறுவர்கள் அடித்தனர். குறு வாட்களை ஆண்கள் நுண்ணிப்பாகப் பார்த்தனர். அவர்களின் கண்களுக்குள் போர் நிகழ்ந்து அவை குருதி சொட்டிக் கொண்டிருக்கும். கிளுகிளுத்த குரலில் மங்கையர் நகைகளையும் அவற்றின் பெட்டிகளையும் ஆடைச் சுருக்கங்களையும் பார்வையால் நீவினர்.

வெளியே வந்து மலையிறங்கத் தொடங்கினேன். மண்டபத்து வளைவில் இறங்குகையில் ஒரு தம்பதி சினத்துடன் ஆனால் உரத்த ஒலியின்றி சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அவர் ஒரு செல்போனை ஓங்கி வீசி எறிந்தார். யாருடையது என்று தெரியவில்லை. அது கல் படிக்கட்டுகளில் விழுந்து அதிர்ந்து உருண்டு மோதி உடைந்து இறங்கிக் கொண்டிருந்த என் கால்களைக் கடந்து சிதறியது. ஒரேயொரு கணம் நின்று விட்டு தொடர்ந்தேன்.

அடிவாரத்தில் ஒரு குளிர்நீர்பானக் கடைக்குப் போய் லஸ்ஸி கேட்டால், அப்போது தான் தீர்ந்தது என்றார். எதிரேயிருந்த அனுமார் கோயிலுக்குச் சென்றேன். எண்ணெயும் பூக்களும் வாங்கி சனீஸ்வரருக்கு எண்ணெய் சாத்தி, அனுமனை வேண்டிக் கொண்டு வெளிவந்தால், பொங்கல் பிரசாதம் போய்க் கொண்டிருந்தது. சுடச்சுட வாங்கி கிடைக்காத லஸ்ஸியை மறந்து கிடைத்த பொங்கலைச் சுவைத்து கைகழுவினேன்.

அப்புறம் ஒரு மாதிரி பல திசைகளில் நடந்து, பஞ்சமி என்ற உணவகம் இருக்கும் காரணத்தாலே ‘பஞ்சமி நிறுத்தம்’ என்று பெயர் பெற்று விட்டிருந்த புள்ளியை அடைந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஹடப்ஸர் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்து வெறும் சிவாஜி நகர் ரயில் நிலையம் செல்லும் வண்டிகளாகவே பார்த்து வெறுத்துப் போய், பின் வந்த வேனில் ஏறி பதினைந்து ரூபாய்க்கு ஹடப்ஸர் வந்தடைந்தேன். மணி 10:15 இரவு.












Wednesday, September 12, 2018

முழுப் பைத்தியமாவதற்கு முன்...2.

சென்றடங்கும் இச்சொல்வெளியில் நுழைந்து விடுவதற்குத்தான் எத்தனைப் பெரும்பாடு? கண்டதையும் படித்து காணாததைக் கற்பனை செய்து, சொல் பொருள் உணர்ந்து காலாதீதமாய் உள்ள இம்மொழியின் களத்திற்குள் சென்று விட எத்தனை தான் எழுத வேண்டியிருக்கின்றது.  ;(

தேடித்தேடி ஓடிக் கண்டடைய வேண்டிய பாதை மெல்ல மெல்ல அகன்று முழுத்தலையும் வெட்டவெளிப்பாழ் என ஆன பின்பு, பதுங்கிக் கொள்ளவோ, ஓய்வெடுத்து உறங்கவோ ஒற்றை முடிகூட இல்லாத வழுக்குப்பாறையிலிருந்து வழுக்கி வழுக்கி விழுந்து கொண்டேயிருக்கின்றது ஏதோ வெறி இரவில் எவளிடமிருந்தோ தொற்றிக் கொண்டு வந்த பேன் தலைமுறையின் கடைசிக்குட்டி ஒன்று.

மீன்கள் நீருக்குள் அழுவதை யார் அறிவார் என்கிறார்கள். அவை நீருக்குள் சிறுநீர் கழிப்பதைக் கூடத்தான் எவரும் அறிவதில்லை. வாய் திறந்து மூச்சு விட்டு, வாய் திறந்து உண்டு இட்டு, வாய் திறந்து பேசிக் கொண்டு, வாயாலேயே முத்தங்கள் கொடுத்து விட்டு, வாயாலேலே தூண்டிலைக் கவ்விச் செத்துப் போகின்றன.

கதவுகள் அடைந்து விட்ட பின்பு நள்ளிரவில், பகலில் புழங்கிய சாலைகள் அனைத்தும் தெருநாய்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகின்றன. அவை ஊளையிடுகின்றன; அவை கடித்துக் குதறுகின்றன; அவை சண்டையிடுகின்றன; வெறி கொண்டெழுந்து கூட்டமாய்ப் பிற நாய்களைத் தாக்குகின்றன; எச்சில் ஒழுகும் கூரிய பற்களை நீட்டிக் கொண்டு மென் சதையோ, காய்ந்த எலும்போ கிடைக்கும் எந்த உணவையும் துளைத்துக் குருதி சொட்ட உண்கின்றன. குளிர் இறங்கும் இரவின் காற்றுக்குள் அவை அதிகாரத்தோடு அரசாள்கின்றன. நட்சத்திரங்கள் மட்டும் மினுக்கும் பொழுதில் குரைத்துக் கொண்டேயிருக்கின்றன. புலரி விடிந்த பின், வாலைப் பின்னங்கால்களுக்கு இடையில் சுருட்டிக் கொண்டு,  முன்னங்கால்களை முன் நீட்டி அதன் மேல் வியர்வை ஈரத்துடன் மூக்கைப் பதித்து முகம் நினைவுகளில் ஊறுவது போல் கண்களை மூடிக் கிடக்கின்றன.

பூமரக்குன்று ஒன்று கனவுகளில் அவ்வப்போது வருவதுண்டு. உடல் முழுதும் விரிந்த மலர்கள். வர்ணக்குவியல்கள். வாசனைப்பொழிவு. வேர் பிடித்து, நீர் உறிஞ்சி, கிளை விரித்து, வானை அள்ளத்துடிக்கும் அத்தனை செடிகளும் நுனியில் ஒற்றை மலரைக் கொண்டிருந்தன. தேன் மலையைச் சுமந்து பாரம் தாளாமல் சரிந்த மென் மலர்கள் மண் நோக்கி, கவிழ்ந்து எதிர் நோக்கிக் காத்திருந்தன. எழிலையெல்லாம் சொற்களாக்கி எழுதுவதென்றால், ஒரே ஒரு மலருக்கு இம்மொழியின் அத்தனை சொற்களும் போதுமா? கனவுகள் மொழிபெயர்க்கப்படுகையில் இழக்கும் அழகு தான் எத்தனை? கனவுகளைக் கைமாற்றி விடுவது மட்டுமே காண்பவன் செய்ய வேண்டிய ஒன்று. வெவ்வேறு கண்கள் வழியாக அதே பூவனக்குன்று எழுந்து வந்தால், நாம் காணும் ஒரே கனவென அது விண்ணப்பிக்கப்படுமல்லவா? எங்கோ அமர்ந்து நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் அவனுக்கு அது கேட்குமல்லவா? 

முழுப் பைத்தியமாவதற்கு முன்...1.

ன்றெழுந்தது. இன்றுமிருப்பது. என்றும் சொற்களில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த வெண்ணிலவில் ஒரு பாதயாத்திரை போய் வந்தால் என்ன? காவியங்களில் காலடி வைத்து நடக்கும் பேற்றை விரும்பார் யார்? ஆம், அவளிடம் கருங்குழிகளும், மென் சேற்றுப்புதைவுகளும் இருக்கும். தடம் பதித்து மிதந்து, காலூன்றி, தடுமாறி, விழுந்து, உருண்டு, புரண்டு, கையூன்றி, எழுந்து, நின்று மீண்டும் அந்த ஒளியுடலில் பரவுதல் என்பது தான் இவ்வுடலின் நோக்கமாய் இருக்கலாம்.

தேர்ப்பூக்களும் சரம் கலைந்த மாலைகளாய் தேவி தோளிலேறி கல் மார்புகள் மேல் படிந்து பூத்து மணந்த வெண் மலர்களும் செம்பூக்களும் கோர்த்த கனமான அவை, இதோ தெரு மூலைகளில் எறியப்படும். அல்லது, நுரை சுழித்தோடும் ஆற்றின் நீர்ப்பரப்பின் மேல் தூக்கி வீசப்படும். எவரெவர் தோட்டத்திலோ முளைத்துப் பூத்த ஒவ்வொரு மலரும் இவ்வூரின் நதிச்சுழலில் மிதந்து எவ்வூரின் மண்ணிற்கோ சென்று சேர்ந்து உரமாகும். அதன் விதி வாழ்க.

சாலைகள் மறந்த நதிகள் பொங்கிப் பெருகி ஓடும் கடுமழைக்காலத்தில், கனமான தார் ஆடைகளுக்கு அடியில் இன்னும் உயிர்ப்பைத் தக்க வைத்துக் காத்திருக்கும் செம்மண் பூமி, விதைகளை வீசும் அந்த உறுதியான விரல்களுக்காக இனி காத்திருக்கும். ஊழிப் பிரளயம் நடந்து முடிந்து பூமிப்பந்து புரட்டிப் போடப்பட்ட பின்பு, மேற்பரப்புக்குக் கீழே கொதித்துக் கொண்டிருக்கும் தீக்குழம்பு பிரவாகித்து, எங்கும் கொப்பளித்து அடங்கிய பின், குளிர் மழை யுகயுகங்களாய்ப் பெய்து மண்ணின் அசுரம் தணிந்த பின், முதற்புல் முளைப்பது எப்புள்ளியில்? இன்று அங்கு எவர் நடந்து கொண்டிருப்பர்?

சன்னல் கம்பிகள் மேல் எப்போதும் வந்தமரும் அந்தச் சின்னக் குருவியை இன்னும் காணோம். கையளவு அரிசிக் குவியலை எடுத்து வைத்துக் காத்திருக்கிறேன். அதன்நெல்மணிக் கண்கள், சாம்பல் வண்ணக் குறுஞ்சிறகுகள், வேலிக்காத்தான் முள்ளென அலகு.. இன்று அதற்கு வேறு எவரேனும் உணவிட்டு விட்டார்களா, அல்லது வேறு எவருக்கேனும் அது உணவாகி விட்டதா என்று தெரியவில்லை. இரவுகளில் மட்டும் நடைபயிலும் அந்த உருண்ட பூனையை ஐயப்படுகிறேன். வெருண்டு உற்று நோக்கும் அதன் சொல்லற்ற கரும் கண்களின் கீழே விடிகாலைக் கதிர்க் கோடு போல் நீளும் கூர்மீசைமேல் குருதித்துளிகளைக் காணலாம் இன்று. குருவிகள் குருதி கொண்டிருக்குமா என்ன?

பாறைகள் கிடந்தன. இணைந்து மலைகளாயின. மலைகள் முளைத்துக் காடாகின. காடுகள் அழிந்து ஊராகின. ஊர்கள் இணைந்து நகராகின. நகர்கள் இணைந்து பெருநகரங்களாகின. நாடுகளாகின. நாடுகள் எல்லை கொண்டன. கோடுகளுக்குள் திசைகள் அறியாது திரிந்து கொண்டிருந்த விலங்குகளைப் பிடித்துக் கொண்டு வந்து கூண்டுக்கம்பிகளுக்கு உள்ளே அடைத்து வைத்து , ஆயிரம் அடையாளங்களோடு அலைகின்ற மனிதர்களுக்குக் காட்டின. விட்டு வந்த பாறைகளையும், நீர் கழித்து தம் எல்லை எனச்சுட்டிய பெருங்காடுகளையும் மறக்காத மிருகங்கள், மிருகக்காட்சி சாலைகளிலும் தமக்கென எல்லைகளைக் கட்டி வைத்து தூங்கிக் கொண்டே இருக்கின்றன. 

Tuesday, September 11, 2018

பூனைகள் நடக்கின்ற இரவுகளில்...

முன் மதியம் ஒன்றில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தேன். யாரோ கைப்பிடித்து வைத்த செம்மண் கொத்துகள் இறுகிக் கெட்டிப்பட்டு மலைகளாகச் சூழ்ந்த வெளுத்த  நிலப்பரப்பில் யாருமே இல்லை. வானுக்கும் மேலே பிசிறு மேகமும் இன்றி கூசச்செய்யும் ஒளி நீலம். முகடுகளில் கழுகுகளும் வல்லூறுகளும் அனல் நதியில் உருகி வழிந்து விழும் பிணங்களை, வியர்வை படர்ந்த அவர்களின் மேல் கோட்டுகளில், கலைந்த தாடியில்,புழுதி படிந்த தொப்பிகளில், மண் ஊறிய தோல் காலணிகளில் தளர்ந்து விழுகின்ற ஜீவனை, அங்கே உச்சிகளில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கும். இன்று அவைகளும் இல்லை. காற்றில் அடர்ந்து அசைந்து கொண்டிருக்கின்ற காய்ந்த புதர்களின் அடியே வளை தோண்டி பதுக்கி வைத்திருக்கும் கொட்டைகள், பூக்கள், களி மண் உருண்டைகள் உடைந்து, வெடித்து சிலந்திப் பூச்சிகள் தின்னக் கொடுத்து எங்கோ தப்பித்துப் போய் விட்டன மலை எலிகள். சபிக்கப்பட்ட இச்சாலையில் தலைக்கு மேலே பல லட்சம் கொடும் வாட்களுடன் தணல் அலைகளைப் பரப்பி வியாபித்துள்ளான் பாலை அரசன். கானல் பிழைகள் மினுங்கும் மேடு பள்ளங்களில் வெக்கை புழுங்கிக் கொண்டிருந்தது. எங்கோ தொடங்கி எங்கோ செல்லும் இக்கறுப்பாற்றில் தன்னந்தனியாக நடந்து கொண்டிருந்தேன்.

இவ்வழியே முன்பு பல காலங்களாய், பல தலைமுறைகளாய்ப் பலர் நடந்து சென்றிருக்கிறார்கள். பிறந்து சில நாட்களே ஆன பிஞ்சுகளை முதுகில் கட்டிக் கொண்ட அன்னையர், முதுமையடைந்து, உடலோடு குடலும் எலும்புகளும் ஒட்டிப் போன பெரிய கண்கள் தளர்ந்து போய், ஒவ்வொரு காலாய் எடுத்து வைப்பதற்குத் தடுமாறித் தடுமாறி நடை குலைந்து நடக்கும் வயதான குதிரைகளின் கடிவாளத்தைப் பிடித்து நடக்கும் கிழவர்கள், அவர்களுடைய தோல் பாக்கெட்டுகளில் மனக் கட்டுப்பாட்டுடன் சேகரித்து வைத்த வேர்க்கடலைகள், வழியில் சந்திக்க நேரும் பாம்புகளை எதிர்க்கத் துப்பாக்கிகள், பழைய காலணிகள், சுருக்கங்கள் நிறைந்த கிழவிகள். மின்னும் கூர்நுனிகள் கொண்ட வேல்களை இறுக்கமாகப் பிடித்துப் பழுப்புக் குதிரைகள் மேல் அமர்ந்து படை படையாய் வரிசைகள்.

இப்பாதையைப் பற்றிய நாடோடிப் பாடல் ஒன்று உள்ளது.

இன்னும் நெடுங்காலத்துக்கு முன்பு ஓர் அக்காவும் ஒரு தம்பியும் இப்பாதை வழியே நடந்திருக்கிறார்கள். அவள் பெயர் மினா என்றும் அவன் பெயர் மிசி என்றும் நாடோடிப் பாடல் ஒன்று சொல்கின்றது. உயிர்களே அற்றுப் போன வெளியானாலும் காற்று இருக்கும் வரை எவனோ ஒருவன் பாடி வைத்த பாடல்கள் இங்கே உலவிக் கொண்டேயிருக்கின்றன. மினாவும் மிசியும் ஒரே ஒரு குடைக்குள்ளே ஒண்டிக் கொண்டே வெயில் தளும்பிய வேளையொன்றில் நடந்திருக்கின்றார்கள்.  மினா பனிரெண்டு வயதிலும் மிசி எட்டு வயதிலும் ஊரில் மவுண்ட் என்ற துறவி கொடுத்த வெண்ணிறக் குடை ஒன்றில் அடைந்து வந்தார்கள். வறண்ட பாறைகள் மட்டுமே விழுந்து கிடந்த மண்பாதையில் அவர்கள் ஒன்றும் பேசாமல் நடந்தார்கள். மிசிக்கு கேட்பதற்குக் கேள்விகள் நிறைந்திருந்தன. ஏன் இங்கே யாருமே இல்லை? ஏன் வானம் இவ்வளவு அமைதியாய் இருக்கின்றது? ஏன் காற்றில் இத்தனை புழுக்கம்? ஏன் நம் எதிரே யாருமே வரவில்லை? கேள்விகள் நிரம்பித் தளும்பும் சிறு மூளை கொண்டவனாய் நடந்தான். மினாவுக்குச் சொல்வதற்கு பதில்கள் ஒன்றும் இல்லை. அவளுடைய மனம் அங்கே நீலவெளியில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அங்கே எண்ணங்களே இல்லை. மதியத்தில் வீசிய காற்றில் இதழ்கள் உதிர்ந்து போய் காலியான ஒரு மலரைப் போல அவள் நடந்தாள்.

அவளுடைய சிறு விரல்களில் எப்போதோ பறித்த மஞ்சள் பூக்கள் கொத்தாக சரிந்திருந்தன.

வெகுதூரம் அவர்கள் நடந்து வந்த பின்பு ஒரு இறுகித் தாளிடப்பட்ட பழைய வீடு ஒன்றை முள்வேலி சூழப் பார்த்தார்கள். வேலி மேலெல்லாம் புழுதி அப்பியிருந்தது. வீட்டின் வாசலில் தூக்கில் ஏற்றப்பட்ட எலிக்குஞ்சைப் போன்ற ஒரு விளக்கு தொங்கியது. அதன் திரி கருகியிருந்தது. கூரையின் மேல் புகைக்கூண்டிலிருந்து கரும்புகை ஒரு துணி உதறலைப் போல வெளிவந்தது. உள்ளே யாரோ இருக்கிறார்கள். மினி வேலியின் கதவை மெல்லத் தள்ள, அவர்கள் நுழைந்தார்கள். வேலிக்கதவு சாத்திக் கொண்டது. மண் படர்ந்த மரப் படிக்கட்டுகளில் தாவி மேலே சென்று கதவைத் தட்டினார்கள். 

Monday, September 03, 2018

Happy Birthday Kannan.

காலடி மலரென கதிசேர்ந்திட நான் ஓடி வந்தேன் கண்ணா...
உந்தன் கள்சொல்
என்மேல் விழுந்தால் என்ன கனிந்தே போகும் என் உள்ளம் - அழகுனை
அணிந்தே போகும் கண்ணா...  (காலடி)

உன்னை அணைத்திட வேண்டுமடா
உன்னுள் அடங்கிட வேண்டுமடா..
உன்னை அணைத்திட வேண்டுமடா
உன்னுள் அடங்கிட வேண்டுமடா..

பெண்ணைப் பேதை ஆக்கினாய்
என்னைச் சேரும் நாளெதுவோ?
பண்ணைப் பாடிடும் பொழுதிலெல்லாம்
கண்ணன் நாதக் குழலொலி கேட்கின்றேன். மின்னும் (காலடி)

மண்ணில் ஓரடி வைக்கின்றாய்
விண்ணிலும் ஈரடி பதிக்கின்றாய்
மண்ணில் ஓரடி வைக்கின்றாய்
விண்ணிலும் ஈரடி பதிக்கின்றாய்

என்னிலே மூவடி வைத்திருந்தால்
பொன்னடி தாங்கிப் பூத்திருப்பேன்
மன்னா மயிலெழில் மகுடத்திலே
முன்னால் சூட்டிய முதலமுதே. வண்ணக் (காலடி)

***

எழில் முதல்வனுக்குத் தமிழ்ப்பரிசு.

Monday, August 27, 2018

வேனில்தரை மழை.

ண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற 'கீத கோவிந்தம்' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் இடம்பெற்ற 'இன்கேம்..' என்ற பாடலுக்குத் தமிழ் வரிகள் கோர்த்த போது.



ததிகின தகஜனு
ததிகின தகஜனு
தரிகிட ததரின
ததம் தீமத ஆனந்தம்

வந்தான் இங்கே
கண்டான் உன்னை
தந்தேன் என்னை
என்றே சொன்னான்
பெண்ணே உன்னுள்
பொங்கும் இன்பம்
இன்றும் என்றும் பேரின்பம்


உன்னை அன்றி கண்கள் பார்க்காதே
மயிலே... இள வெயிலே...
உன்னை விட்டு எங்கும் போகாதே
ஒயிலே... எழில் குயிலே...


மின்னல் வெட்டும் வேகம் ஆளாச்சே..உன்
மின்னுமிரு கண்கள் வேலாச்சே...
பக்கம் நின்றால் வெக்கம் வேறாச்சே.. நீ
பார்த்துச் சொல்லும் சொற்கள் கேட்க
பாலும் தேனும் போலாச்சே... (உன்னை)

மாலைவரும் நிலவென அழகா
மருண்டுவரும் மானென உருவா
வேளையிது விழும்பனி கனவா
விடைதர விரும்பி வா...

மீனுமது விரும்பிடும் விழியா
மீட்டுவது கரும்பெனும் மொழியா
மீறுவதில் மகிழ்வது வருமா
மிளிரொளி பரவி வா...


நான் நடக்கும் நிலமதைத் தொடருமுன் பார்வை...
நான் முகிழ்க்கும் சிரிப்பதில் மலர்வாள் பாவை... (உன்னை)

காதலினில் கலந்திடும் பொழுதா
காத்திருக்கும் கணங்களும் பழுதா
காலைவரை அணைத்திடு முழுதாய்
கடும்குளிர் கரைக்க வா..


கோபமென எழுவதும் உனதா
கோதைமனம் விழைவதும் எனதா
கோலமிடும் விரலிடை மனதா
கொழுமலர் கனிந்து வா...

வேண்டுமென விரைந்துனைத் தழுவிடும் போது...
வேனில்தரை மழையெனக் கரைவாள் மாது... (உன்னை)

Tuesday, August 21, 2018

உடைந்த மூக்கு.

ணையதளத்தில் துளித்துளியாய் ஆடை விலக்கி பரிநிர்வாணம் அடைபவள், அன்று உடைந்த மூக்குடன் தோன்றினாள். ‘ஜென்னி, என்ன ஆயிற்று உன் மூக்கிற்கு?’ என்று வந்த 7713 பேரும் கேட்டார்கள். ‘உடற்பயிற்சிக்கூடத்தில் தவறி விழுந்து விட்டேன்’ என்று அனைவருக்கும் சொன்னாள். ‘மூக்கைத் துணியால் மறைத்துக் கொள். என் கற்பனைக்கு அது இடைஞ்சல் செய்கிறது’ என்றான் ஒருவன். ‘மூக்கு சரியாகும் வரை பின்புற போஸ் மட்டும் காட்டு’ என்றான் மற்றொருவன். ‘கேமிராவைக் உதட்டுக்கு மேல் கொண்டு போய் விடாதே’ என்றான் இன்னொருவன். பார்வையாளர்கள் எண்ணிக்கை சட்டென 5320 ஆனது. ‘ஜென்னி, இப்போது தான் நீ இன்னும் அழகாய் இருக்கிறாய். மேகங்களில் மிதந்து கொண்டிருந்த பொன்புறா, மரக்கிளைமேல் வந்தமர்ந்தது போல். கைக்கெட்டும் அளவான அழகில்.’ என்றான் 4517-ல் மிஞ்சிய ஒரு கவிஞன். அவனுக்கு மட்டும் இரு முத்த எமோஜிகளும் ஒற்றைத் துளி கண்ணீர் எமோஜியும் அனுப்பினாள். யாரும் ‘டேக் கேர்’ சொல்லவில்லை.

ஒரு கோப்பை தேநீர்.

வா...
ஒரு கோப்பை தேநீர்
அருந்திக் கொண்டே
நாம் பேசலாம்..’
என்று அழைக்கிறாய்.

ஒரு கோப்பை தேநீர்
தீர்வதற்குள்
அதன் நுரை அடங்குவதற்குள்
அதன் வெம்மை அணைவதற்குள்
அதன் ஒவ்வொரு துளியையும் விழுங்குவதற்குள்
அதன் அடியாழத்துக் கசடைத் தவிர்ப்பதற்குள்
பேசி முடிப்பவை தானா
நம் சிக்கல்களும்
நம் கருத்து வேறுபாடுகளும்
நம் கோபங்களும்
நம் வெறுப்புகளும்?

எனினும்
என்னை அலங்கரித்துக் கொண்டு
என் கைப்பையை நிரப்பி விட்டு
சென்ற பனியுருண்டை விழாவில்,
என் உடனிருப்புக்கு
நீ
பரிசளித்த
பழுப்பு நிற தணப்பு ஷூ அணிந்து கொண்டு
உன்னுடன்
கைகளைக் கோர்த்துக் கொண்டு
புன்னகை சூடிக் கொண்டு
எதிர்ப்படுவோரின் ‘நல்ல மாலை’க்கு
மெல்லத் தலையசைத்து
நடந்து வருகிறேன்.

தேநீர் கடை
இன்னும்
எவ்வளவு தூரம்?

Friday, August 17, 2018

முல்லை.

ங்கிப் பெருந்திசைகளை அளக்கும் விருட்சங்கள் நிறைந்த இப்பெருங்காட்டில், குகை முகடுகளில் தேன் நிறைந்து ஓயாமல் சொட்டிக் கொண்டிருக்கும் தேன் கூடுகள் அடர்ந்த இவ்விருள் பொழுதில், இடிகளும் மின்னல்களும் வான் நிறைக்கும் இப்பின் மாலை நேரத்தில், உன் காலடித்தடம் பதியும் எனச் சேற்றுக்குழைசல் கலங்கி வழியும் ஒற்றையடிப் பாதையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மதியத்தில் துவங்கிய தூறல் பின் விரைவுற்று, பெருந்துளிகளாகி, சரங்களாகி, ஊற்றி இன்னும் நில்லாமல் பெய்து கொண்டிருக்கிறது. ஒரு சாக்கு மூட்டையைக் கவிழ்த்துக் கொண்டோ, இறுகப் பின்னிய கூடைக்குள் ஒளிந்து கொண்டோ நீ வருவாய் என, ஈரம் மறைக்கும் வெளியைக் காத்திருக்கிறேன்.

முல்லை மணம் மட்டுமே கிளர்ந்திருந்த ஒரு நாளில் நாம் இருவரும் உச்சிக்குச் செல்லலானோம். அப்பாதை, பசித்து வரையாட்டை விழுங்கிப் பின் களைத்துத் தளர்ந்து படுத்திருக்கும் ஒரு மலைப்பாம்பைப் போல் வளைந்து சுருண்டு சென்று கொண்டிருந்தது. விட்டு விட்டு தூறல்கள் விழுந்து கொண்டேயிருந்தன. ஓரங்களில் எல்லாம் துளிகள் சுமக்கின்ற பசும்புற்கள். விளிம்புகளில் புதர்களும், கொத்துகளுமாய் பச்சையின் பல ரகங்கள். பெயரறியாப் பறவைக் குரல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. பாதை சற்று வழுக்கலாக இருந்தது. விரல்கள் பின்னிக் கொண்டபடி நடந்தோம்.

விரைந்து செல்லும் மேகங்கள் முகட்டு நுனியைத் தொட்டுத் தொட்டுச் சென்றன. சட்டென ஒரு கொத்து மழையைச் சிந்தி விட்டு அகன்றன. அங்கும் சில சில் மரங்கள் முளைத்துக் காடாகியிருந்தன. அவற்றை நோக்கிச் செல்கையில், பாதையில் கொஞ்சம் குழைந்திருந்த சேறு வழுக்கிச் சரியப் பார்த்தாய். பின்னிய விரல்கள் இன்னும் இறுக்கமாகி, இடை வளைத்து நிறுத்தினேன். கொஞ்சம் மூச்சைச் சரி செய்து கொண்டு, நிதானித்து, விழ வாய்ப்பிருந்த அடிபாதாளத்தை ஒரு கணம் கண்ணுற்று, கண்களைப் பார்த்து மென் புன்னகை செய்தாய். தொடர்ந்தோம்.

கோடானு கோடி தவளைகள் ‘கொரக்..’, ‘கொரக்...’ என்று சொல்லிக் கொண்டிருப்பதை சற்று நேரம் கழித்தே கேட்டேன். எங்கோ பாறை ஒன்று முழுதருவி ஒன்றுக்குள் யுகயுகமாய் நனைந்து கொண்டிருந்தது; எனினும், முழுதும் கரைந்து விடவில்லை. தடாலென ஒரு பேரிடி. எங்கோ அருகில் மின்னல் இறங்கியிருக்க வேண்டும். வேகமாய் ஒரு மழை வந்து நம்மை முழுதணைத்து முழுதாய் நனைத்தது. தடவி விட்டுப் போகும் ஒற்றை மயில் தோகைப் பிசிறு போல் இம்மழை விலகவில்லை; மாறாக, கொத்துக் கொத்தாய்ச் சின்ன ஊசிகளால் தைத்து தைத்து எடுப்பது போல், கூர் நுனித் துளிகள் குத்திக் குத்திச் சென்றன.

நடுக்கம் மிகை கொள்ள, என்ன செய்தலென்று யோசித்தோம். மீண்டும் வழுக்கல் செறிந்த இறங்கு முகம் வழி சென்று, நாம் பத்திரமாய் அடைந்து கொள்ள அக்குடில் அறைக்குள் விட்டு வந்த கலைந்த படுக்கை போர்வைக்குள் புகுந்து கொள்ளலாம். அன்றேல், இன்னும் கொஞ்ச தூரமே என நெடுநேரம் போக்கு காட்டும் அம்முடியை அடைந்து, நம் பாதங்களுக்கு அடியில் விரியும் பசுங்கிராமங்களையும் விட்டு வந்த தொலை நகரத்தையும் ஒரு கடவுள் பார்வை பார்க்கலாம். இரண்டில் ஒன்று என்றேன்.

நீள் கரும் கூந்தல் திரித்திரிகளாய் நனைந்து ஒட்டி ஒட்டி சொட்டிக் கொண்டிருக்க, ஒரே ஒரு மச்சம் மட்டும் பதிந்த முகத்தில் மழை மச்சங்கள் சொட்டிக் கோடாகி விழுந்து கொண்டிருக்க, ஒற்றை மெல்லிய பொன் செயின், நிறைந்த இரு மார்புத் திரள்களுக்கிடையில் தத்தளித்துக் கொண்டிருக்க, உடலொட்டிய உடைகளோடு, உரசுகையில் சப்தித்து எச்சரிக்கும் வளையல்கள் வளைத்த அவ்விரு கைகளையும் முன் நீட்டி, ‘இனியும் நனையாதது எது?’ என்று கேட்டாய். நா நுனி வரை வந்த சொல்லைத் தவிர்த்து, ‘எதுவும் இல்லை’ என்றேன். ‘நீ நினைத்ததை அறிவேன்’ என்பது போல் ஒரு விஷமப் புன்னகை செய்து, முகட்டைச் சுட்டிக் காட்டினாய். மேல் நோக்கி நடந்தோம்.

மரங்களும் சிறு செடிகளும் ஒட்டுண்ணிகளாய்க் கொழுகொம்பை வளைத்து வளர்ந்திருந்த கொடிகளும் தரைப்புற்களும் அடர்பச்சை நிறக் காய்களுமாக, காடு தன் பசும் அரசுக்குள் பல்லாயிரம் பறவைகளும் பல்லாயிரம் விலங்குகளும் பலகோடி பூச்சிகளுக்குமாய் மழைப்பால் அருந்தியது.  பின்மதியம் என்று ஒரு பேச்சுக்குச் சொல்லலாம் எனினும் கதிரின் ஒரு கரம் கூட உள் இல்லை. விரிந்த அகன்ற இலைகள் சுமந்த கொத்துப்புதர்கள் விளைந்த ஓரங்களில், மழைத்தண்ணீர் சிறு ஓடைகளாகிச் சலசலத்துச் சென்றது. அதன் தூய்மையும் செம்மண் நிறமும் வடிந்த குளுமைக்குள் கரைந்திருந்தன. பருத்த அடிமரங்களின் மேலே விரிந்த பேரிலைகள், சேகரித்த துளிகளை இன்னும் சேர்த்து ஊற்றிக் கொண்டிருந்தன.

ஒரு வளைவுக்குப் பின் வலப்பக்கம் திரும்பினோம். ஆம், உச்சியை அடைந்தோம்.  நிறைய கால் படாத புற்களும் கைபடாத பூக்களுமாக மழை வசந்தத்தின் கீழே நாமிருவர் தனித்துக் கிடந்தோம், ஒரு பெரு நாழிகை நேரம். குளிர் மேகங்கள் வந்து வந்து தீண்டிக் குளிரூட்டின. ஈரம் கசகசக்கும் ஆடைகள் சென்றடைந்தன ஓர் ஓரம். மீண்டும் பிள்ளைகள் போல் யாரும் காணவியலா அந்நெடுங்காட்டின் அந்த உயரமான முனையில், பசுந்தரை மண் சேறுகள் உடலொட்ட, மழைக் குளியலுக்கு உள்ளே மெல்ல கரைந்து கொண்டோம்.

Friday, July 20, 2018

நீலாம்பல் நெடுமலர்.39.



ரு மலரின் மலர்மை என்பது தான் என்ன? சூழ் இதழ் மெல்லப் பிரிந்து வளைந்து உள் மகரந்தம் காட்டுமே அதுவா? நறு சுகந்தம் காற்று வெளியில் தூவிப் பரப்புமே அதுவா? ஒற்றைக் காம்பில் மண் ஊன்றி மொட்டவிழ்ந்து சூரியப்பொழிவை அள்ளி அள்ளி அருந்துமே அதுவா? மலர்மையின் உச்சம் என்பதென்ன? அதன் ஒரு நாள் வாழ்க்கையில் அதன் ஆனந்தத் திளைப்பின் பெருங்கணம் என்பது தான் எது? அதை அடையத்தான் சிற்றணுவிலிருந்து முளைத்து வந்ததா அது? அதை அடைந்த பின் உடனே கீழிறங்கத் தொடங்குமா? இனி மீண்டும் அது அடையவே முடியாத அந்த களிப்புத்துளி நீண்டு நீண்டு வாழ்வெல்லாம் திகட்டாதா? உச்சத்தின் பீடத்திலேயே வீற்றிருக்கும் அம்மலர் தான் எது?

எழும் அனலின் அனல்மை என்பது தான் என்ன? சூழ் அனைத்தையும் எரித்துத் தன்னுள் கரைத்து தானாகிச் சுடர்ந்தெழும் கரைதலா? தீண்டும் இன்பம் திகட்டும் இனிமை கொதிக்கக் கொதிக்கக் கட்டியணைத்து உடன் எரிதலின் பதற்றமா? பொற்கட்டி உருகி வானோக்கிச் சுழலும் மஞ்சள் நிலவு தானா? தீச்சுடரின் நுனி நா சொட்டும் நாக நஞ்சின் குளுமை கொண்டிருக்குமா? நீலத்தணல், நெடும் உயரத்தில் நிலை கொண்டலையும் செழும்பிழம்பு தன்னைச் சுற்றிப் பரப்பியிருக்கும் ஒளிர்மை தான் என்ன? செம்பருந்து விழிக்கூர், வனம் விழுங்கும் பூந்தணல், புதுமுளை துளிர்க்கும் காட்டெரி, பொசுக்கிச் சாம்பல் உதிரும் மென்னுடல், நடுக்குறப் பாயு வெம்மை நதியின் வெள்ளம் விழுங்கும் பசி தான் என்ன? அந்நெருப்பின் வழிகுழம்பு பரவி வழிய இப்பூமிப்பரப்பு போதாமல், வானெங்கும் நிறை கதிர்கள் தான் எத்தனை எத்தனை?

மலர்மையும் அனல்மையும் பிணைந்து எடுத்த உருவென்று ஒன்றிருப்பின் அதன் இலக்கணம் தான் என்ன? கதிருண்ட மலரின் அனலும் நீரணைத்த நெருப்பின் குளிரும் வீசும் இரு விழிகள் கொண்ட செம்முகம் அது என்றமையுமா?  முகிலுறைக் குளிர் துளிகளாய்ப் பொழிந்து தெறித்தல் போல் பார்வை மலர் விழிகளென மலர்ந்திருக்குமா? சதைகிழி வாளின் கூர் முனை சுழலும் நாசி என சரிந்திருக்குமா? முற்காலையின் பனித்துளி ஈரம் சுமக்கும் மலரிதழ்களென முத்தியெடுக்க சிவந்திருக்குமா?  தீ அணைக்கும் மென் பஞ்சுக் குழுமமென கன்னம் எழுந்திருக்குமா? சொல்லென முளைக்கும் செந்தேன் துளிகளை ஏந்திச் சுவைக்கும் மடலிரு செவிகளென கிளைத்திருக்குமா? அமுது நிறை இரு குவலயங்கள் துளிர்த்து முகிழ்த்து மெல்ல கனிந்தமைந்த எழிலென நிலை கொள்ளுமா?  செந்தாமரையும் அக்கமலத்தின் மடி தவழ ஒரு குழவியும் தாங்க வழியுங் கொப்பூழென விழுந்தெழுமா? அருளும் அணைக்கும் அணையும் அன்புறும் நெடுங்கரங்கள் அன்னையென அழல் தணிக்குமா? ஊறும் கேணி இறைக்க இறைக்க நிரம்பா தொல்நிலம் முற்றா இளம்புல் மேய் மூதாதைக்கென முளைத்திருக்குமா? தாங்கும் வாங்கும் துயர்க் கரைக்கும் செழுந்துடை வலுவென நின்று உடல் தாங்கியிருக்குமா? பத்துச் சிமிழ் விளக்குகளின் அசையாச் சுடரென இரு தாள் முனைகளில் எழுந்தருளுமா?

தேவி, அனலெழுந்தோனும் நீரரவில் துயில்வோனும் முகத்திற்கொரு சொல் உதிர்ப்போனும் உன் பேரெழில் முன் நிலை மறப்பின், மானுடனென உள இவ்வுயிர் குனிந்து பாதத்துளிகளை முத்தமிடுகையில் பிழையென ஏதுமுண்டா? மலர் கனிதலும் அனல் குளிர்தலும் தளிர் மணத்தலும் தணல் அடங்கலுமாய் இப்பொழுதுகளில் நகரட்டும் இவ்வாழ்வு.

Saturday, July 14, 2018

காலணி திருத்துனர்.

டைபாதையில்
காலணி திருத்துனர்
கால் மடித்து
எப்போதும்
தலை குனிந்து
அமர்ந்திருக்கிறார்.

கடந்து செல்பவர்களின்
கால்களை மட்டுமே
கவலையுடன்
பார்க்கிறார்.

அறுந்து போன வார்கள்,
கிழிந்த தோலணிகள்,
ஊக்கு குத்தியவை,
ஓரம் விடுபட்டவை,
சேற்றிலூறி வாய் பிளந்தவை...

பிழைகளை ஏந்தி
அப்பிழை ஏந்தி வரும்
கால்களை மட்டுமே
அவர் தேடுகிறார்.

வெறும் கால்களை
மட்டும்
கொண்டவர்களை
அவரும் கூட
விரும்புவதில்லை.

தையல் போட்டுப் போட்டு
நூல் கண்டாய் மட்டும்
தோன்றும்
அவ்விரு இணைக் காலணிகளுக்கு
மட்டும்
இலவசமாய்
இன்னுமொரு
தையல்
இட நினைக்கிறார்.
வயிற்றனல் விடுவதில்லை.

இளமென் சிவப்பு நிறத்தில்
மையத்தில் மலர் சேர்த்து
இரு
பிள்ளை செருப்புகளைத்
தைத்து
நெடுங்காலமாய் வைத்துள்ளார்.
தன் பெயரென்ன,
தான் உணவு உண்டேனா
என்று கேட்கும்
முதல் குரலுக்குப்
பரிசாய்க் கொடுக்க.

அவரிடம் வீசுமுன்
காலால் எத்தும் முன்
விரைவுபடுத்து முன்
கொஞ்சம் புன்னகையையும்
அவரிடம் வீசலாம்,
குறைவில்லை.

Thursday, July 12, 2018

நரகுசூழ் பாதை.

சிரிப்புகளாலும் மகிழ்ச்சிகளாலும்
நிரப்பப்பட்டிருக்கும்,
தன்னால் வெல்லப்பட
முடியாதவர்களின்,
தன்னை வென்றவர்களின்.

நுரைத்து நுரைத்தெழும்
ஆனந்தப் பேரலை
அடித்துக் கொண்டிருக்கும்,
தன்னை இகழ்ந்தவர்களின்,
வாயிலில் நிறுத்தித்
துரத்தியவர்களின்.

திருவிழாக்களும்
திசையெங்கும் வண்ணங்களும்
திரண்டிருக்கும்,
தினம் எண்ணிப் புகைப்போர்க்கும்,
கணம் கூட மறவாதோர்க்கும்.

கெடுநாற்றமும்,
வேகும் நெருப்புக் கொந்தளிப்பும்
மழைச்சாணிக் குழைசலும்
கூர் நுனிமுட்களும்
நிரம்பிய
புராணப் பாதைபோல்
இருக்கலாமெனில்,
அது மேலல்லவா,
வருந்திச் சிந்தக் கண்ணீரும்
தோள் வருடி ஆறுதலிக்க
இரு கரங்களும்
கூட கேள்!

சிலுவையிலிருந்து
பிய்த்தெடுத்து
வழிகுருதி துடைத்து,
நீட்டித் துயர் துடைப்பான்,
அவன்.

Saturday, July 07, 2018

A Stray Dog.

Once upon a time in the park
When the sky turned into dark
I tried my bicycle to park,
Alas, I could not hear a single bark.

"Oh stray dogs, where did all you go?
My poor soul wants that to know.
Had you all been caught?
Say atleast one of you, "No, not!"

Did you go behind a beauty?
Did you do all the naughty?
Did you have set of babies?
Did you start spreading rabbies?"

"When the cloud opens,
We dont have shelter to hide
When the sun shines,
We dont get water to tide.

We are orphans roaming in the road
We are creatures have none to feed
We draw our borders in the street
Whoever comes, we look their feet

We speak eachother, we fight eachother
We cuddle eachother, we kill eachother
Oh Man! whenever you hear when we speak,
You term it in a single word as bark

After the last dog dies because of starvation
You will feel the painful silence as salvation
With the help of a stray dog's instinct
I say, one day we all will go into extinct

Until then, why don't you feed me
Until then, why don't you care me
Until then, why don't you share a kiss
Until the mighty dark fall upon all of us"

"Oh stray dog! you opened my eyes
Further I will treat you as much as nice
Now, like the sun rays kill the chill fog
Clear the silence and bark like a true stray dog"

Lol..Lol...Lol...

Friday, June 29, 2018

வா..வா..காமா..




சென்றெதிர் கொள் இப்பனி இரவு முழுதையும்!
குளிர் நீர் துளைக்கும் எலும்புகள் நடுங்க, மூழ்கி அடி காண்!
மென்மல்லி மணம் முகர்ந்தறி!
பிறை வளைவு தடவி பிறவிப் பலன் அடை!
முள் காட்டில் முன் சென்று குருதித்துளி பூத்திடு!
கூம்பிய தாமரை மொட்டு மலர்த்தி மகரந்தம் சுவை!
பின்னலிட்ட கிளைகளைப் பிரித்து சிற்றிலைக் கீழ் உருண்ட சிறு செங்கனி கடி!
வான் நிறை மீன்களை எண்ணி முடி!
வாடைக்காற்று தூண்டும் சூட்டைத் தணி!
நடுங்கிக் கொண்டே நில்லாது நகர்!
கணுக்கால் ஊன்றி மாடத்து விளக்கை அணை!
மழையென்றொன்றைப் பெய்து உலர் தரை நனை!
திரண்ட முகில்கொத்துகளை ஈரம் சுரக்கச் செய்!
பேரரவு ஊரும் தடம் பதி!
வெயில் அருவிக் கீழ் வேர்த்த சுனை ஆகு!
திரை விலக்கி நாடகம் உணர்!
திசைகள் தெரியா தீ எழுந்தெரிக்கப் புணர்!


Tuesday, June 12, 2018

நீலாம்பல் நெடுமலர்.38.



செங்கனல் தொடல், வெள்ளெருது முட்டல், உறைபனி உண்ணல், கடும்புளி நக்கல், நின் மறைநகை காணல்.

பொழி நிலவுப் பொழில் அரசிலை ஊறித் ததும்பி இலைக்குழி நழுவிச் சொட்டி இறங்கி மண் ஊறிற்று. தென் திசைக் குளிர்த்தென்றல் கிளைகளைக் குலுக்கி உலுக்கி உதிர்த்த முன்மலர்கள் பாதைகளில் பூத்துப் பழுத்து இதழ் சுருட்டி கூம்பிச் சரிந்து இரவின் வருகைக்குப் பாதை இட்டன.

தேவி, நின் சுயம்பிழம்பென செந்நெருப்பிட்ட கோலத்திருவுரு பூமியில் ஒரு கால் வைத்து அண்டப்பேரண்டமெங்கும் தீக்குழல் பரப்பி விரித்து எண் திசைகளிலும் கரம் நீட்டி மயக்குறு இரு விழிகளிலும் அமுது வடிய ஜகம் நிலைகொண்டாய். நீ நிற்கும் இவ்வோர் காலடி சூரிய சந்திரர்களை நிறுத்தியது. வாயு திகைத்து பாதம் பணிந்தான். வருணன் நீராட்டினான். அக்னி சிகை ஏறினான். பேரொளி சுமக்கும் ஆகாயப் பொற்கோலம் நின்புன்னகை தருவித்த மதுர கணம்.

பிறவி ஏழிலும் துணை வரும் பேரன்புப் பெரு விழியே! நீங்கா நிழலென நின் தீண்டல் என் ஆயிரம் பாதைகளிலும் தொடர்ந்து வருகின்ற செம்மையே! வானாயிர மீன்களிலும் இல்லா இரு மீன் உருளும் தவிக்கும் மயக்கும் கொஞ்சும் கெஞ்சும் துஞ்சும் விழியே! நீலப்பீலி ததும்பும் மென்மாலைப்பொழுதில், நீரலை உந்தும் கரைநுரை போல் மனம் நிரம்பும் பேரன்புப் பெருங்கனியே! தீதென்றும் நன்றென்றும் இரண்டிமை எனைத் தீண்டாப் பூங்கரம் நினதல்லவா! பேசாப் பூஞ்சுழலே! வெறும் திசைகள் சூழ் இவ்விரவின் கனம் எனையழுத்தி நொறுக்கித் துகளாக்க முயல்கையில், மென்கீற்று மின்னல் போல் ஒளிர்ந்து காத்தாய், மதுமலி செந்துறைக் கரைச் சிறு காம்புத் தீஞ்சுவை அமுதே!

மைத்துளி தீட்டித் தீட்டி வரைந்தெடுத்த பொட்டுச் செம்பொன் ஒளி சிதறும் எழில் சிலையென, நீ ஒசிந்து நிற்கும் கோலமதில், கிளை விட்டெழுந்த சிற்றிலை சுழன்று சுழன்று காற்றில் கிறுக்கும் முடியாப் பெருங்காவியம் தீராமல் எழுதுகிறேன்.

பகலும் இருண்மையுமாய் நாளுமிரவுமாய் வெயிலும் குளிருமாய் மழையும் காற்றுமாய் எழுதலும் அடங்கலுமாய்க் காலம் பெருக்கெடுத்துப் போகின்றது. தேவி, ஒளி நிறைக் கலம் ஒன்றை ஏந்தி செம்பூ பூத்த கொத்தொன்றைச் சூடி, அனல் பட்டு ஆடை அணிந்து வலக்கால் எடுத்து வைக்க நுழைவழைப்பு இது! சிறுமனக்குளம் கலங்க அலைகள் தளும்ப நீராடி மூழ்கிக் கரையவா!


Sunday, May 20, 2018

நீலாம்பல் நெடுமலர்.37.


சாய்ந்தாடும் மன ஊஞ்சல்.

ரு பார்வை விதைந்தது உள். ஓராயிரம் கிளைகளுடன் வானோக்கி விரிகின்றது பூமரம் ஒன்று. வேர் முதல் கிளை நுனிக் கொழுந்து வரை தேன் துளிகள் சொட்டும் இந்த இனிப்பு மரத்தைச் சொற்களால் அள்ள முடியுமா என்ன? வழியில் கடந்து செல்கையில் மெல்லிய இலைகள் குவிந்து குவிந்து மலரென ஆவது போல் செம்பூவிதழ் குவித்து காற்றைத் தீண்டும் விரல்களால் ஏதோ ஒரு இசை மீட்டி தூரம் செல்கிறாய். நீ விட்டு வைத்த நிழலுருவம் என்னைக் கட்டிக் கொண்டு அதிலிருந்து அகலாதிரு என்கிறது.

ப்ரேமையின் பொன் முகில் ஒன்று என் வனத்தின் மீது மிதந்து நிற்கிறது. வானை அண்ணாந்து பார்த்து பொழியும் நேரம் கணிக்க, புருவங்கள் மேல் கை வைத்து நோக்குகிறேன். செந்தீ எரிவது போல், காலை நதிக் கரைசல் போல், கனிந்த சுளை மேனி போல் என் ஆகாயம் முழுதும் ஜொலிக்கின்ற மேக மென்மையே, என்று என்மேல் பொழிந்து என்னையும் பொன்னாக்குவாய்?

தினம் நூறு முறை அலகுகள் கோர்த்து உரசிக் கொள்ளும் இப்பறவைகள் இப்பிறவியின் மிச்ச கணங்களில் பகிர மறந்த முத்தங்களை எத்தனை பிறவிகளில் எப்படிக் கொடுத்து தீர்க்கும்? இறகுகளில் கோதிக் கொண்டும், மணி விழிகளால் உலகுறிஞ்சியும், பஞ்சுப் பொதி போன்ற கையளவு மென் மேனியை எப்படிக் கொண்டு செல்லும் அங்கு?

கல் தேர் காலம் காலமாக நின்று கொண்டிருக்கின்றது. அதில் நின்று பவனி வரும் அம்மன் போல் நீ இடை ஒசிந்து இரு விழி நிமிர்ந்து சொல் ஒன்று தத்தளிக்கும் உதடுகளை இறுக்கி நிற்கிறாய். அத்தேர் இழுத்து வீதியுலா வரும் வெறும் பக்தன் போல், மேலே பார்த்து வணங்குகிறேன்.

உதிரி மல்லி போல் சொற்களைக் கோர்த்துக் கோர்த்து ஒரு பாடல் மாலை செய்கிறேன். அவை வாடிப் போகும் முன் எடுத்து அணிந்து கொள்ள மாட்டாயா? அவை ஒவ்வொன்றும் எழுப்பும் மணம், கூம்பித் தீண்டும் மென்னுடல் சிலிர்க்க, தேவி, சிகையெடுத்து கழுத்தில் சூடிக் கொள். நிழலும் அறியட்டும் நிஜம் கொள்ளும் நிறங்கள் என்ன வென்று.

பொன்னாரம் ஒன்றைச் செய்வித்து பூங்கழுத்தில் அணிவித்துப் பித்தாக்கச் செய்யும் மென் புன்னகையைத் தவழ விடுகிறாய். ஆரம் பொலிவிழந்தது. ஆகாயம் பூ நிறைந்தது.

மதுரமலரென கவிமொழி ஒவ்வொரு சொல்லிலும் சொன்ன பின் வர்ணவிற்களால் திசைகள் நனைந்தன. வேனிற்கால மழை என ஒவ்வொரு எதிர்பார்ப்பிலும் குளிர்விக்கிறாய். விதை தீண்டும் ஈரமாய் ஒவ்வொரு பார்வையும் முளைக்க வைக்கிறாய். மேட்டு நிலம் தேடி ஊரும் சிற்றெறும்பாய் வெள்ளக் காலத்தில் தத்தளிக்க வைக்கும் வாசத்தில் திணறடிக்கிறாய். யக்‌ஷியாய் என்னைப் பிணைந்து ஒவ்வொரு குருதிக்குழாயையும் உறிஞ்சி உயிரள்ளிக் குடிக்கிறாய். சாயங்கால வெயில் போல் வெம்மையில் எம்மைக் காயும் தீண்டல் செய்கிறாய்.

Thursday, May 17, 2018

நீலாம்பல் நெடுமலர்.36.


ந்த மழைக்குப் பின் வரப்போகும் குளிருக்கு இதமாக இந்த கணப்புக்கு அருகில் அமர்ந்து நாம் இருவரும் என்ன செய்வது? நூல் கண்டுகளைப் பிரித்துப் பிரித்து இரவில் ஒளிந்து கொள்ள ஒரே ஒரு குளிர்ப் போர்வையை நெய்வோமா? பாதி படித்து மடித்து வைத்த அந்த இரவின் புத்தகத்தை மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து படிப்போமா? இரவின் வானம் நிரம்பித் தளும்பும் அத்தனை நட்சத்திரங்களின் வெண்ணொளி பொழியும் அந்தக் கூரைக் கண்ணாடித் தடுப்பின் கீழ் அமர்ந்து ஆடைகளற்று நனைவோமா?

ரோஜாப் பூக்கள் மலர்ந்து நிரம்பியிருக்கும் இந்த அறைக்குள் உன் வாசம் மட்டும் காலைச் சுற்றும் நாய்க்குட்டி போல் சுற்றிக் கொண்டிருக்கின்றது. ரகசியமான ஒரு சொல் போல் அந்த மூச்சுக்காற்று என் காதோரம் ஒலிக்கும் அந்த கணங்கள் மட்டும் நிரம்பிய இந்த இரவில், நீ மூடி வைத்த மற்றுமொரு அறையைத் திறக்கிறாய். பழுத்துக் கனிந்த முன்னூறாண்டு பழைய மதுக்குப்பி போல் ஒரு இனிக்கும் முத்தம் ஒன்றை இடும் போது, நேற்றைப் போல் இந்த நிமிடமும் கனவென கரைந்து நிகழ்கின்றது.

வனம் இதன் நடுவில் குளிர்ந்திருக்கும் மரக்கூரையின் கீழ், நீல விளக்கொளி நடுங்கும் பின்னிரவில், காட்டுக்குருவிகள் சில்லிடும் ஓசை மட்டுமே எழும்பிக் கொண்டிருக்கும் ஈர நேரத்தில், இந்த கண்ணாடி ஜன்னலின் பின்னே பசுமை ஒரு பேரருவி போல் நிற்பதாய்க் காட்டிச் சரிந்து கொண்டிருக்க, மெழுகின் ஒளி மட்டும் இத்தனிமையின் சுவர்களில் வண்ணம் தீட்டிக் கொண்டிருக்க, தொலைந்து போவதன் தணுமையை எவ்வரிகளால் எழுதுவது?

சாரல் மழை மட்டும் மிஞ்சிப் பெய்து கொண்டிருக்க, அந்தி ஒளி மட்டும் அங்கே பூத்திருக்க, இரவு ஒரு நதி போல மென்மையாக வந்தணைக்கின்ற ஆகாயத்தின் பொன் கூடைக்குள் கோழிக்குஞ்சுகள் போல் அலகுகளால் கோதிக் கோதி, மென்மயிர்ப்பிசிறுகள் வர்ணக் குழைசல் காட்ட, பயறு விழிகளால் முட்டி முட்டி இள வெம்மை தீட்டிக் கொண்டு கூட்டிக் கொண்டு அலகிலா நெடுங்காலம் யுகங்கள் போல் நீண்டு சென்று கொண்டேயிருக்கின்றன.

எரிந்தெரிந்து அணைந்து விட்டு மடிப்பு மடிப்பாக சரிந்திருக்கும் மெழுகு விளக்குகள் மெளனித்திருக்கையில், பனி வந்து அப்பிக் கொண்ட கூரை மீது அமர்ந்து சேவல் கூவுகையில், கிழக்கின் வாசலுக்கு தினம் வரும் தேவன் வந்து கதவைத் தட்டுகையில், இலைகளில் இறுகிக் கட்டிய உறைபனி உருகிச் சொட்டுகையில்,  ஜன்னல் திரைகளில் மெல்லிய வெயில் ஊடுறுவிச் சிவக்கையில், ஓரிரவு கரைந்து வழிந்து சென்று விட்டதை உணர்ந்து எழுகிறோம்.

Saturday, April 21, 2018

நீலாம்பல் நெடுமலர்.35.

தீராப்பிறை.

சிறு இதழ் பிரித்து உள்நுழையும் பொன்வண்டு தேமதுரத்துளிகளை அள்ளித் திளைத்துக் கொண்டிருக்கையில் மலரின் இதழ்கள் மெல்ல சுருண்டு அதை உள்ளே சிறைபிடித்துக் கொள்ளும். இனித்து இனித்து மரணிக்கின்ற வண்டு, மலர் காய்த்துக் கனியாகி முழுக்கச் சுவையாகுகையில் மிதக்கின்ற மணமாகவும் வழிகின்றாக செழுஞ்சாறாகவும் திகட்டுவது உள் அமிழ்ந்து கரைந்த வண்டின் அமுதமே அல்லவா?

தேவி, நீங்கா இரு கழல்களாகவும் தூங்கா இரு விழிகளாகவும் தீரா இரு கலங்களாகவும் குன்றா அருள் கரங்களாகவும் நீ நின்றிருக்க, என் உளமின்றி வேறிடம் இருக்கின்றதா உனக்கு? செருக்கடித்து ஆணவ மலம் நிரம்பி துயர்க் குளமாய்த் தேங்கி நின்று புழுத்து சீழ்ப்புண்ணென நாறும் என் மனதில் நீ கால் பதிக்கவும் ஒரு செந்தாமரை அங்கே உதிக்காமலா போய் விடும்? மண் தொடாத சிவந்த உள்ளங்கால்கள் முத்துக்கள் கோர்த்த மணிச்சரங்கள் சப்திக்க இரு பாதங்களை எடுத்து வைத்து நீ அகம் புகும் அக்கணத்தில், அம்மலர் விரிந்து ஆயிரம் தசகோடி இதழ்களால் பூத்து குவிந்து, நிறைந்த அழுக்குகளை அள்ளி அகற்றித் தள்ளி விடாதா?

ஆடல் சலங்கைப் பரல்கள் தெறிக்கத் தெறிக்க விரல் மகுடமென விளைந்த கூர் நகங்கள் குத்திக் கிழித்து குருதி பொங்கிக் கொப்பளித்து உன் பாதங்களைச் செம்மை நிறம் பூசிக் கொள்ளச் செய்யும் ஆடற்களமென அமைய என் அகங்காரமின்றி வேறிடம் உனக்கேது? ஒன்றில் வாளும் ஒன்றில் சூலமும் ஒன்றில் முள் சாட்டையும் ஒன்றில் வேலுமாக நாற்கரங்களில் கொல்லாயுதங்கள் ஏந்தி, கீறி வெட்டிக் குத்திக் குதறிக் கிளறித் தாண்டவமாட, பராசக்தி உனக்கு, இறுகிக் கெட்டித்தட்டிப் போய் பாறையென ஆகி உலர்ந்து வறண்டு கிடக்கும் கடுவீச்செழும் இருண்ட என் ஆழ்மனம் போதாதா?

செந்நெருப்புச் சுடர் எண் திசைகளிலும் காய்ச்சும் உன் விழித்தீ சுட்டுப் பொசுக்க, செவ்வுழவு செய்து புரட்டிப் போட்டு ருத்ரவிழிப்பு கொள்ள ஆழ்ந்துறங்கிக் கனவுகளிலும் சோம்பல் களிப்பிலும் சுருண்டு செயலின்மையின் செம்மதுவில் ஊறிக் குருதியெங்கும் போதையும் நரம்புகளெங்கும் அலட்சியமும் ஊற்றுப் பெருக்கி ஓடும் இத்தேகம் போல் உகந்த நிலம் எங்கு கிடைக்கும் உனக்கு?

வந்து நில்; வந்து அமர்; வந்து எரி; வந்து அணை; வா.

தேவி, வீணை கொண்டு வருக. நாதம் எழுப்பி எரிந்து கரியும் உள்ளைக் குளுமை செய்க. வெண் மலர் ஏந்தி வருக. சுகந்தம் கரையும் காற்றாய் சுவாசத்தை நிரப்புக. சிம்மம் ஏறி வருக. பிடரி பறக்கும் திசைகள் அதிரும் அதன் பெரும் பிளிறலால் யுக யுக உறக்கம் கலைந்து, கூர் அகிர்களால் பேரறை வாங்கி இப்பேதைமை கலைந்து அழிக்க. குழலேந்தி வருக. மூங்கில் கம்பாய் இவ்வீண் உடலை ஆக்குக.

அரம்பையராய் வருக. அழகியராய் வருக. அன்னையராய் வருக. குழவிகளாய் வருக. ஆனந்தப்பேரொலி எழுப்பும் பெருஞ்சங்கம் ஊதி நடமிடும் பெரு மண்டபமாய் இப்பிறவியை நிரப்புக.

Tuesday, April 17, 2018

கிருஷ்ணபானு..!

1.
காயத்தில் பொன்னிறத் திரவம் நிரம்பியிருந்த கண்ணாடிச் சாடியை யாரோ கைதவறி உடைத்து விட்டார்கள். அது செங்குழம்புத் தீற்றல்களை அள்ளிப் பூசிக் கொண்டு ஆதவனை மேற்கு மலைகளுக்குப் பின்னால் அனுப்பிக் கொண்டிருந்தது. மாலை நேரக் காற்று அந்த தூரத்து முகடுகளைக் கடந்து பின்னர் பசும் செழுமைகளை உடைய மலை மேனிகளைத் தழுவிக் கிழக்கில் வேகமாய் நகர்கையில் யமுனை மேல் நுரைகளைக் கிளப்பிச் சென்றது.

நீலத்திரை மீது விழுந்த செஞ்சாந்துக் கோடுகளை நனைத்து நகர்ந்தது நதி. செந்தூரத் துளிகளாக நீர்க்குமிழ்கள் கரைகளில் தெறித்தன. நாணல் செடிகள் சுகமாய்த் தலையாட்டின. அவற்றின் பஞ்சுச் சிறகுத் துகள்கள் காற்றில் இறங்கி இறங்கி அலைகள் மேல் அமர்ந்து, குட்டிக் குட்டிப் படகுகள் போல் தாவித் தாவி மிதந்தன.

ஆயர்பாடிக்குத் திரும்பி விட்ட ஆயர்கள், தத்தம் இல்லத்தில் தூய்மைப்படுத்திக்கொண்டு, மற்றுமொரு முறை பட்டியில் கட்டிய பசுக்களைச் சென்று பார்த்து விட்டு ஊர்மன்றுக்கு வந்தமர்ந்தனர். ஆய்ச்சியர் இல்லத்துப் பணிகளை நிறைவு செய்து விட்டு, பலகாரங்களையும் சிற்றுண்டிகளையும் எடுத்துக் கொண்டு மன்றுக்குப் பின் அமைத்திருந்த குடில்களுக்குள் வந்தமைந்தனர். சிறு பிள்ளைகள், பெரியோர் எண்ணியிருக்க முடியா ஆலமரத்துக் கிளைகள் மேலும் மனைச் சாளரத்திட்டுக்கள் மேலும் அமர்ந்திருந்தனர்.

மன்றின் மையத்தில் மண்ணில் திளைத்து விண்ணில் கிளைத்திருந்த பேராலமரம் ஆயிரம் திசைகளிலும் நா நீட்டிய ஆதிசேடன் போல் வியாபித்திருந்தது. பல்லாயிரம் பறவைகளும் சிலகோடி சிற்றுயிர்களும் புழங்கி வந்த அப்பெரு நகரின் மேலே தூரத்துச் சந்திரன் தெரியத் தொடங்கினான். துளித்துளியாய் சொட்டிய மீன்கள் கருமை கொஞ்சம் கொஞ்சமாய் எட்டிப்பார்த்த ஆகாயம் முகிலின்றி நீலமாய் நிறைந்திருந்தது.

ஆலத்தின் கீழே நின்றிருந்த சூதன் பாடத் தொடங்கினான்.

“விண்ணெழுந்த பாலாழிக்கு வணக்கம். ஆழியில் உறங்கும் நீலவண்ணனுக்கு வணக்கம். அவன் புறத்தமர்ந்த திருமகளுக்கு வணக்கம். அவன் உந்தியுதித்த நான்முகனுக்கு, அவன் உடனுறை வேதவல்லிக்கு, அவள் நாவெழும் சொல்லுக்கு, சொல் காக்கும் மலைமகளுக்கு, அவளுக்கு இடம் தந்த குளிர்மலை நாதனுக்கு, அவனமர்ந்து கற்பித்த ஆசிரியர்களுக்கு, அவனுக்கே சொல்லளித்த அழகனுக்கு, அந்த வேலனுக்குக் கன்னி தந்த வேழனுக்கு, வேழனுடன் விளையாடிய குறுமுனிக்கு, குறுமுனி ஆக்கியளித்த செம்மொழிக்கு வணக்கம்.” என்று வாழ்த்தி வணங்கினான்.

“ஆ புரக்கும் ஆன்றோரே! அவர் மனை புரக்கும் அன்னபூரணியரே! மனை நிரப்பும் இளையோரே! கேளீர்! மேற்குக் கரையிலே எழுந்து வந்து இன்று நான்கு திசைகளின் செல்வமெல்லாம் சென்று சேரும் பெருநகரைக் கண்டு வந்தவன் சொல் கேளீர்! காடுகளில் கன்று மேய்த்தவன், அங்கே நகர்மன்று நின்று மேய்ப்பதைப் பார்த்து வந்தவன் பகிர்வதைக் கேளீர்! துவாரகை எனும் பேர் கொண்ட அப்புது நகரம் திரண்டு வரும் வெண்ணெய் போல் அவன் இதழ்களுக்கு முன் காத்திருப்பதை உணர்ந்து வந்தவன் உரை கேளீர்!” குழுமியிருந்த அனைவரும் அமைதி கொள்ள, சூதன் குரல் மணி எழுந்த முதலொலி போல் ஒலித்தது.

”தென்னகத்தைச் சேர்ந்த சூதன் நான். சொல் ஒன்றை மட்டும் ஊன்றிக் கொண்டு அன்னை தவம் செய்யும் முக்கடல் முனையிலிருந்து கிளம்பி அலை முழங்கும் மாமதுரை வழியாக வனங்கள் பூத்திருக்கும் திருவிட நிலங்களைக் கடந்து எல்லை காணவியலா நீர் பெருகி ஓடும் பேராறுகளில் நீந்தி மேற்குக் கடலைச் சென்றடைந்தேன். புதுநிலம் தேடிச் சென்றடையும் பசுக்களைப் போல, புதுச் சொற்களைத் தேடி நானடைந்த நிலம் அது. மண்ணில் வேரோடிய தொல் நகரங்களையும் அந்நகர் அமர்ந்த அரசர்களையும் சொல்லிச் சொல்லித் தீர்ந்த குவளையைப் புதிதாய் நிரப்பப் புது நகரம் தேடினேன். அன்றில்லாதது, இன்றிருப்பது. இனி என்றும் எம் குரலில் இருக்க வேண்டும் என்ற பேரவா ஒன்றால், அலையும் குயில்கள் நாங்கள். தென் நிலமெங்கும் துவாரகை என்ற ஒன்றைப் பற்றிய பேச்சுலாவுவதே என் ஆர்வத்தைத் தூண்டியது. கண்டதை விட காணாததன் மேல் நாம் போர்த்திக் கொள்ளும் கற்பனைகள் தீராதவை. அங்கே பொன்னால் செய்த தூண்களில் தான் சாய்ந்திருப்பர் காவலர் என்றார் ஒருவர். முத்தெடுத்துப் புள் ஓட்டுவர் என்றார் இன்னொருவர். வைரக்கற்களால் சிறுவர்கள் கோடிழுத்து விளையாடுவர் என்றார் மற்றொருவர். கண்டவர், கண்டவரைக் கண்டவர், காற்றில் ஏறி வந்ததைக் கைக்கொண்டவர் என்று சொன்னவர்களைக் கேட்டு, நேரில் நானே சென்றறிகிறேன் என்று கிளம்பிச் சென்றேன். ஆயர்களே! நான் கேட்டதைச் சிறு புழுவாக்கினால் கண்டது பெருவேழம்..!”

2.
தூரத்தில் தெரிந்த துவாரகையின் வரவேற்பு வளைவைக் கண்டதும் சரபன் உடலில் பரபரப்பு ஏறியது. தென்னகக் காடுகளில் அவன் இணைந்து கொண்ட வணிகக் குழுவின் தலைவரிடம் அதை சுட்டிக் காட்டினான். குழுவில் இருந்த சில இளையோரும் அதைக் கண்டு விட்டிருந்தனர். அவர் புன்னகைத்து “ஆம்..! அது துவாரகையின் அழைப்புக் குரல். ஒவ்வொரு முறை வரும் போதும் அதைக் காண்கையில் நெருங்கி விட்டோம் என்ற நிறைவு வந்து சேர்கிறது.” என்றார். சரபன் அந்த வளைவையே நோக்கிக் கொண்டிருந்தான். அது வானிலிருந்து வைக்கப்பட்ட ஒரு பகடைக்காயாகத் தெரிந்தது. மூடவே முடியாத வாய். அதற்குள் மனிதர்களும் அவர்கள் விரட்டி வரும் அவர்களை விரட்டி வரும் செல்வக்குவைகளும் அக்னிக்குண்டத்திற்குள் சென்று கொண்டேயிருக்கும் அவிப்பொருட்கள் போல சென்று கொண்டேயிருப்பர் என்று மதுரையில் ஒரு சூதன் சொன்ன சொல்லை எண்ணிக் கொண்டான்.

”இனி நாம் நம் வழியில் நம்மைப் போன்ற வணிகக் குழுக்களையும் பார்க்கத் துவங்குவோம். தனித்து வந்த பின்பு புதிய முகங்களைப் பார்ப்பதென்பது ஓர் இனிமை” என்றார் தலைவர். இளையோன் ஒருவன் “அதில் பெண்களும் இருக்க நேரிடலாம்..” என்றான். சிலர் நகைத்தனர். தலைவர் “மாட்டார்கள். ஏனெனில் நம்மைப் போன்ற வணிகக் குழுவினர் மட்டுமே இத்தனை தொலைவில் வருவர். கூட பெண்களையும் அழைத்து வருவதென்பது அனைவருக்கும் சிரமம். மங்கையர் வீடுகளில் மட்டுமே இருக்க நாம் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்குச் செல்வதற்காக ஈட்ட அலைந்து கொண்டேயிருப்போம். அதுவே நம் வாழ்வு..”என்றார்.

நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த எறும்புகள் இழுத்துச் சென்ற புழு போன்ற பாதையில் முதலில் அவர்கள் ஒரு வணிகர் சத்திரத்தை அடைந்தனர். மேலே கருடக்கொடி மென் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. கொண்டு வந்திருந்த குதிரைகளைப் பின்புறம் தேங்கியிருந்த சுனையில் நீரருந்த விட்டு விட்டு, புரவியர்கள் உள்ளே புகுந்தனர். இன்னீரும் இஞ்சி போட்டுக் காய்ச்சிய மோரும் குடித்த பின்பு விழி குளிர்ந்த சரபன் முன்பே அங்கிருந்தவர்களைப் பார்த்தான். நகரில் வணிகம் முடித்துக் கிளம்பியவர்கள் ஒரு புறமும் நகருக்குச் செல்ல வேண்டியவர்கள் ஒருபுறமுமாக அமர்ந்திருந்தனர். அப்படி இருந்த ஒரு குழுவில் ஒருவன் மெளனமாக அமர்ந்து கொண்டிருக்க, பிறர் அனைவரும் தேங்கிய நீரில் பெய்யும் மழை எழுப்பும் சப்தம் போல் இடைவெளியின்றி பேசிக் கொண்டிருந்தனர். மெளனன் மீசை நுனியில் படிந்த மோர்ப்பிசிறுகள் காற்றில் அசைய தரையை நோக்கிக் கொண்டிருந்தான். சரபன் அவன் அணிந்திருந்த மஞ்சள் மேலாடையைக் கொண்டு அவன் ஒரு சூதன் என்றுணர்ந்தான். அவன் அருகில் சென்று அமர்ந்தான்.

“சொல்தேவி அருள் திகழட்டும்” என்றான்.

நிமிர்ந்த அவன் சரபனைக் கண்டு புன்னகைத்து “ஆம். அவள் அருள் திருமகளின் தேரில் அமர்ந்து திசை தேரட்டும்” என்றான்.

சரபன் “சூதரே! என் பெயர் சரபன். தென்னகத்தில் இருந்து வருகிறேன். நீங்கள் நகர் நீங்கிக் கொண்டிருக்கிறீர்கள் போலும்!” என்றான்.

“ஆம்..! கிளை விட்டுக் கிளை தாவும் குயில் போல ஒரு குழுவுடன் நகர் வந்தேன். இதோ, இக்குழுவுடன் நகர் நீங்குகிறேன். கண்டதையெல்லாம் சொல்லில் நிரப்பிக் கொண்டு, வர்ணம் பூசி அதைப் பொன்னாக்கிக் கூழாக்கித் திடம் பெற்றேன். சொல் சேர்த்தல், சொல் கோர்த்தல், உண்டி நிறைத்து பண்டி பெருத்தல் என்று இருந்தேன். இந்நகர் கொடுத்ததையெல்லாம் அதற்கே திருப்பிக் கொடுத்து விட்டு இப்போது மிஞ்சும் சொற்களை மட்டும் ஈட்டிக் கொண்டு அடுத்த நகர் போகிறேன்..!” என்றான்.

“நகர் விட்டு நகர் செல்லுதல் நம் போன்ற சூதருக்கு வாழ்வு. அதில் துயர் கொள்ள ஏதுமில்லை. ஒட்டிய ஆற்று மணலைத் தட்டி விட்டு எழுதல் போல. ஆனால் உம்மில் இன்னும் ஏதோ இருக்கின்றது. காலைப் பொன்னொளியில் மின்னும் இலைக்கு அடியே கருமை நிழல் போல. அதை இங்கு எவரும் உணரவில்லை என்பதாலேயே நீர் உறும் துயரம் இன்னும் இறுகியிருக்கின்றது என்பதை அறிகிறேன். என்னிடம் சொல்லலாமே?” என்று கேட்டான் சரபன்.

கண்களில் ஓடிய செவ்வரி நீரில் பளபளக்க அவன் துவாரகையை நோக்கி கை நீட்டினான். “இந்நகரம் பொன்னகரம். இங்கே பெருங்கடல் அலையோசை கேளா நொடியில்லை. அவ்வோசைக்கு நிகராகப் பெருங்குடியினரும் பேரழகியரும் பைந்தளிர்ப் பிள்ளைகளும் இரைச்சல் எழுப்புவர். அந்த செவி நிறைக்கும் சப்தங்களுக்கு அடியில் நான் கண்டது ஒரு அமைதி. பெரும் அழிவிற்குப் பின் மட்டுமே பிறந்து வருகின்ற நிசப்தம். அதை நான் கண்டு கொண்டேன். அதன் பின் நான் கண்டதெல்லாம் கேட்டதெல்லாம் அந்த செவியடைக்கும் மெளனத்திற்கு மேலுறை இட்ட ஒலிகளையே. ஒரு நாள் அந்த உறையைக் கிழித்துக் கொண்டு அது மேலெழும். படமெடுத்து நின்றாடும் அரசநாகத்தின் சினம் போல. அது நிகழும் என்பதை உறுதியாக உணர்ந்தேன். உடனே நகர் நீங்கினேன். யாரிடமும் சொல்ல முடியாது. ஆழிக்கு மேல் அலையடிக்கும் பெருங்காற்றுடன் விளையாடும் நீர்த்திவாலைகள் போல் இவர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆழியின் அடியில் கீழே நிறைந்திருக்கும் சப்தமின்மையை மேலே யாரும் கேளார். நீரும் சூதரே. நீர் நகர் நுழைந்ததும் அறிவீர் பேரொலிகளையும் பெரு மகிழ்வுகளையும் அவற்றின் கீழே பாதாளத்தில் நெளிந்து கொண்டிருக்கும் அமைதியையும். நலம் திகழட்டும்.” என்று சொல்லி விட்டு மீண்டும் அவன் தலை கவிழ்ந்தான். சரபன் திகைத்து அமர்ந்திருந்தான்.

“சூதரே வருகிறீரா?” என்று கேட்டபடி அருகில் வந்தான் இளையவன்.

“ஆம்..” என்று சொல்லிவிட்டு அந்தச் சூதனை வணங்கி விட்டு கிளம்பினான் சரபன்.

கோட்டை வாயிலுக்கு முன்பு வண்டிப்பாதைகளில் வணிகர் வண்டிகள் நிரையாக நின்றிருந்தன. அந்நிரையில் சேர்ந்து கொண்ட வணிகர் குழுவிடம் இருந்து சரபன் விடைபெற்றுக் கொண்டான். மூத்தவர் “சூதரே! சொல் ஒன்றை மட்டும் கொண்டு இங்கு நுழைகிறீர். அதற்கு ஈடாக நீர் புகழையும் பொன்னையும் மட்டுமே பெறுவீராக!” என்று வாழ்த்தினார். சரபன் வணங்கி விட்டு, கோட்டைக் காவலரிடம் சென்றான்.

“நான் தென்னகத்திலிருந்து வந்திருக்கும் சூதன். பெயர் சரபன். மேற்கின் மகுடமாகத் திகழும் இந்நகர் கண்டு அதைச் சொல்லில் வடித்து பாரதமெங்கும் நட்டு வைக்க விரும்பி வந்துள்ளேன்.” என்றான்.

தலைமைக் காவலர் அவனை வணங்கி கோட்டைக்கதவின் திட்டி வாசலைத் திறந்து விட்டான். சரபன் அவனை வணங்கி விட்டு, துவாரகையின் உள்ளே நுழைந்தான்.

Friday, April 06, 2018

ப்ரஸன்ன வதனாம்...!



வானம் கழுவியது போல் விரிந்திருந்தது. கீழ்த் திசையின் முடுக்குகளில் இருந்து வெண்ணொளிக் கீற்றுகள் விசிறியடிக்கத் தொடங்கின. நீரலைகள் நிரம்பித் தள்ளாடும் பெரும் ஒரு நீளப் புடவையாய் மினுக்கியது யமுனா நதி.அதன் மேனியெங்கும் விடியல் இன்னும் பூக்கத் தொடங்கியிராத விண்ணின் நீலக் கரைசல் பிம்பங்கள் மிதந்தன. நிலவொன்று தனியே தன் பாட்டுக்கு ஊஞ்சலாய்த் தொங்கியது. பின்னும், நிரம்பிய நட்சத்திரங்கள் மினுக்கிக் கொண்டே இருந்த காற்றில் குளிர் கலந்திருந்தது.

மரங்களின், கிளைகளின், இலைகளின், நரம்புகளின் மேல் இரவு தடவிக் கொண்டிருந்த தாலாட்டின் மயக்கத்தில் உறங்கிக் கிடந்த பனிப் படலங்கள் சோம்பல் முறித்தன. விளிம்புகளில் நிறைந்திருந்த ஈரங்கள் சுருண்டு, உருண்டு ஒன்று சேர்ந்து, ஒற்றைத் துளியாகி, சூரியனின் பெரும் உறிஞ்சலுக்கு ஏங்கத் தொடங்கின.

சின்னச் சின்னக் குருவிகளும், பறவைகளும், புள்ளினங்களும் பெரும் உற்சாகத்தோடு வாரித் தெறித்த அரிசிமணிகளாய் வானில் ஏகிச் சீழ்க்கையடித்துப் பறந்தன. பனித்துளி சுமக்கும் பூக்களின் அடியில் ஒட்டியிருந்த பூச்சிகள் 'கீச்சு..கீச்சென' கூறிக் கொண்டே சுற்றத் தொடங்கின. எறும்புகள் தமக்குள் ஏதோ சொல்லிக் கொண்டே வரிசை தவறாமல் எங்கோ விரைந்தன. புறாக்கள் தத்தம் சிம்மாசன இறக்கைகளை விரித்து, அலகால் விட்டு விட்டுக் கோதின. 'ட்ரூச்சு...ட்ரூச்சு..' என எழுப்பிக் கொண்டு மைனாக்கள் நதி மேல் பறந்தன. காக்கைகள் மெல்ல குதித்து, நடந்து, கரையோர அலைகளில் தலை முழுக்கிச் சிலிர்த்தன.

துளிக் கண்கள் திறந்து பார்த்த கூட்டிலிருந்த குஞ்சுகள், இன்னும் தாயின் மென் சூட்டுக்குள் பதுங்கிக் கொண்டன. தனித்த குயில் மட்டும் தன் கண்ணாடிக் குரலில் மெதுவாகக் கூவத் துவங்கியதும், கூடவே மற்றொரு மதுரக் குழல் இசையும் சேர்ந்திசைக்கத் தொடங்கியது.

அந்த சுகந்த குழல் நாதம் எழும்பிய புல்லாங்குழல் பொன்னால் செய்யப்பட்டிருந்தது. அதன் ஒவ்வொரு துளையின் கீழும் ஒரு முத்துப் பரல் ஆடியது. அதன் முனையில் ஒரு வைரமாலை பூட்டப்பட்டிருந்தது. அதனைத் தடவித் தடவி மென்மையான பூவிசை கொடுத்த விரல்கள் யாருடையவை..? அந்த விரல்கள் விளைந்திருந்த கைகளில் தங்கச் சாந்தைப் பூசியது யார்..? அந்த விரல்களின் ஒவ்வொரு கோடுகளும் பதிந்த பின் குழல் பொன்னானதா இல்லை குழலின் குரலைத் தடவி அவன் உள்ளங்கைகள் மின்னுகின்றனவா..? யாரவன்..?

முதலில் ஒரு மயில் இறகுக் கொத்து தெரிகின்றது. அதன் நீலக் கண் ஏன் இத்தனை உல்லாசமாய்க் காற்றில் ஆடுகின்றது..? அதன் ஒவ்வொரு பிசிறுகளும் அத்தனை தன்மையாய் தன் சின்னஞ்சிறு இழைகளும் குற்குறுக்க, எத்தனை கம்பீரமாய் அமர்ந்திருக்கின்றது. பன்னிரு கை இறைவன் ஏறும் மயில் ஒன்று தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளித்தது போல் அல்லவா இருக்கின்றது..? அது தன் ஒற்றைக் காலால் நிற்கின்ற மகுடம் மட்டும் என்னவாம்..?

மரகதமும், மஞ்சள் பொன் வண்ணமும், செம்பவளமும், ரூபமும், இடையில் பாயும் வெள்ளி நரம்புகளும், தொட்டுத் தொட்டுக் கோர்த்த மணிமாலைகளும் கொண்ட இந்த க்ரீடம், இரவிலும் ஜ்வலிக்கும் சந்திரகாந்தக் கல்லால் செய்யப்பட்டதா..?

இந்த சிகை அலங்காரம் தான் எத்தகையது..? பிரபஞ்சத்தின் ஒளி புக முடியாத ஆழ்ந்த கரு மடிப்புகள் போல் அல்லவா சுருண்டிருக்கின்றன..?

இந்த இரு செவி அழகைத் தான் என்னவென்று சொல்வேன்..? மழை வந்து முடிந்த பின் மலை மடிப்புகளின் எல்லாம் ஏதோ புத்துணர்ச்சித் துகள்கள் படர்ந்திருக்குமே...! அது போல் அல்லவா குளிர்ந்திருக்கின்றன. அந்த தோடுகள்...!! அவை செய்த பாக்கியம் தான் என்ன..! இந்த காந்த இசையைக் கேட்பதற்கேற்ப ஆடி ஆடி மயக்கம் கொண்டு கிளர்கின்றன அல்லவா..?

இது என்ன...!! இரு பெரும் களிறுகள் மதர்த்துப் போய் ஒன்றையொன்று எதிர்த்துக் கிளர்ந்து நிற்கின்றனவே..! ஓ..!! அவை இவன் புருவங்களா..!!

காலையில் கதிரவன் வரும் முன் வெள்ளிக் கரங்கள் திசையெங்கும் பாயும். அது போல் இவன் இமைகளில் துளித் துளி முடிக் குட்டிகள் முளைத்திருக்கின்றனவே..!! மேலும், கீழும் இமைகள் ஒன்றையொன்று கவ்வும் போது, அந்த கண்களை அல்லவா மறைத்து விடுகின்றன.!

கண்கள்..!! அவன் கண்கள்...!!!

கட்டித் தேனை கெட்டி செய்து ஒட்டி வைத்து செய்தவையோ..? இல்லை, மொட்டு வைத்த மொத்தப் பூக்களையும் கொட்டி வைத்து நெய்தவையோ..? இல்லை, எட்டி நிற்கும் பட்டுப் பூச்சிகளை நட்டு வைத்து நார் எடுத்துப் பெய்தவையோ..? கன்னல் கரும்பு கொய்து, மின்னல் வெப்பம் பாய்ச்சி, முன்னம் செய்த மதுரசமோ..? இல்லை, பன்னீர்த் துளி கரைத்து, தாழம்பூ நறுக்கி, சுகந்தம் பரவிய பரவசமோ..?

வெண்ணெய் பூசிய கன்னங்களோ அவை இல்லை, கோபியர் கொடுத்த முத்தங்களால் கனிந்த அன்னம் கள்ளோ..?

அந்த நாசியை ஏது சொல்குவேன்..?

செவ்விதழ்களை என்ன சொல்வேன்..? அந்தி மாலை நிறம் என்றா..? ஆதவன் தெறிக்கும் சுவை என்றா..? அழகு தளும்பித் தளும்பி உருக்கும் அதரங்களை என்ன சொல்வேன்..?




prasanna vadanaaM saubhaagyadaaM bhaagyadaaM
hastaabhyaaM abhayapradaaM maNigaNair-
naanaavidhair-bhuushhitaaM

(who is of smiling face, bestower of all fortunes,
whose hands are ready to rescue anyone from fear,
who is adorned by various ornaments with precious stones)

Puer natus est nobis,
et filius datus est nobis:
cujus emperium super humerum...

For to us a child is born,
to us a son is given:
and the government will be upon his shoulder..
Some day you came
And I knew you were the one
You were the rain, you were the sun

But I needed both, cause I needed you
You were the one
I was dreaming of all my life
When it is dark you are my light
But don't forget
Who's always our guide
It is the child in us

*

ப்ரசன்ன வதனாம் செளபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யாம் அபயப்ரதாம் மணிகநைர்
நானாவிதைர் பூஷிதாம்

(புன்னகைக்கின்ற முகம் யாருடையதோ,
யார் அதிர்ஷ்டத்தை வாரி வழங்குபவரோ,
யாருடைய கரங்கள் எந்த பயத்திலிருந்தும்
நம்மைக் காக்கத் தயாராக இருப்பதுவோ,
யார் உயர்ந்த ஆபரணங்களை அணிந்தவரோ...)

நமக்கு ஒரு குழந்தை பிறந்தான்;
மகனாக கொடுக்கப்பட்டான்.
சாம்ராஜ்யம் அவன் தோள்களில் கொடுக்கப்படும்.

ஒரு நாள் நீ வந்தாய்.
நீதான் அவன் என்று அறிந்தேன்.
மழையும் நீயே! மாகதிரும் நீயே!
எனக்கு இரண்டும் வேண்டும்,
ஏனெனில் எனக்கு நீ வேண்டும்.

நீதான் அவன்.

என் வாழ்நாள் முழுதும்
கனா கண்டு கொண்டிருந்தேன்.
இருளாக இருக்கும் போது,
நீயே என் வெளிச்சமாக வருவாய்.

ஆனால், மறந்து விடாதே!
நம் வழிகாட்டி எப்போதும் யாரெனில்
நமக்குள்ளிருக்கும் குழந்தையே..!!

***

ஆல்பம் :: எனிக்மா.

பாடல் :: The Child in Us(நமக்குள்ளிருக்கும் குழந்தை.)

இசை :: Michael Cretu

அப்புறம் என்ன ஆச்சு?



ளிங்கு வனத்தின் மேல் பாய்ந்த ஒளி வெள்ளம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது ஆயர்பாடி.

இன்னும் உக்கிரம் கொள்ளாத சூரியனின் பார்வைகள் தீண்டும் பகுதிகளில் எல்லாம் வெம்மையில் பூத்துக் கொண்டிருந்தது வெயில். கொத்தாய்ச் சிரித்துக் கொண்டிருந்த பச்சை இலைகளைப் பிரித்துக் கொண்டு பாய்ந்து கொண்டிருந்தது பகல் ஒளி. வெள்ளிக் காசுகள் தூவிய போர்வையாய் அசைந்து, அசைந்து ஓடிக் கொண்டிருந்தது யமுனை நதி.

ஆவினங்களை ஓட்டியபடி அருகின் வனம் புகுந்திருந்த நாயகர்களின் வீரக் கதைகளைப் பேசிக் கொண்டு யமுனையின் குளிர்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது கோகுலத்தின் கன்னிப் பெண்களின் குழாம்.

கவனம். இது கன்னியர்களின் அந்தரங்கங்கள் அலசப்படும் இடம். நமக்கு, இங்கே என்ன வேலை? வாருங்கள். நாம் ஊருக்குள் செல்வோம்.

அடடே, அங்கே ஒரே கூட்டமாய் இருக்கின்றதே? என்னவாய் இருக்கும்? வாருங்கள். சென்று பார்ப்போம்.

நானா, உங்களை அழைக்கிறேன்? நம்மையெல்லாம் அழைப்பது ஒரு நாதம். கள்ளினும் பெரும் போதையில் நம்மை ஆழ்த்தும் இந்த குழலோசையின் நாயகன், வேறு யாராய் இருக்க முடியும்? அந்த மாயவனே தான்.

தேன் சொரியும் மலரைச் சுற்றிலும் மது மயக்கத்தில் மனம் கிறங்கிய வண்டுகள் இருப்பது அதிசயமா என்ன? பச்சைப் பசிய மரங்கள் நிரம்பிய காடுகளில் மேகங்கள் தங்கி இளைப்பாறுவதும், களைப்பாறுவதும் இயல்பானதே அல்லவா? இந்த மதுசூதனின் மாயக் கரங்கள் மூடித் திறந்து விளையாடும் புல்லாங்குழலின் இனிய இசையில் மன அமைதியுறாத மானிடர் தாம் உண்டோ?

நாமும் அந்தக் குழுவில் இணைகிறோம்.

யாரென்ன , எவரென்ன , குலமென்ன, கோத்திரமென்ன, இனமென்ன, இவனென்ன என்றெல்லாம் பார்த்தா கதிர் ஒளி தருகின்றது? நதி நீர் தருகின்றது? அது போல், யாரெல்லாம் இங்கே உள்ளார்கள்?

வாழ்வின் கடைசிப் படிகளில் படுத்திருக்கும் கிழவர் முதல், முதல் படிக்கட்டில் முழந்தாள் பதித்திருக்கும் பச்சை மண் வரை இவனது குழல் நாதத்தில் மயங்கி இருக்கிறார்களே!

அல்லி மலர்கள் இதழ் கூம்பியிருந்தாலும், நிலவின் ஒளி அதனைத் தட்டித் தட்டி எழுப்புவதில்லையா? தாமரை வெட்கத்தால் தலை கவிழ்ந்திருந்தாலும், கதிரொளி அந்த சிவந்த முகத்தைக் கரங்களால் அள்ளி முத்தமிட இட செந்தாமரை முகம் இன்னும் சிவந்து பரவசம் கொள்ளுவதில்லையா?

இந்த மாயவனின் மனம் கவரும் குழலின் ஓசையில் நாமும் கலந்து நிற்கிறோம்.

ஆ..! இது என்ன எல்லோரும் கலைந்து ஓடுகிறார்களே!~ யாரத்கு, வருவது?

கையில் கழியோடு யசோதை வருகிறாள்.

"கண்ணா..! இது என்ன , எப்போது நீ இங்கே வந்தாய்? உன்னை சமையலறையில் அல்லவா கட்டிப் போட்டேன்! அடே, மாயப் பயலே? என்னையா ஏமாற்றி விட்டு வந்தாய்! இந்த வெயிலைப் பார்த்தாயா? நெல் மணிகளை வெளியே கொட்டி வைத்தால், நிமிடக் கணக்கிலே அரிசியாய்ப் பொறிந்து போகுமே! இந்த சூட்டில் நீ நிற்கலாமா? நாளை உன்னை மணக்கப் போகும் மகராசி வந்து உன்னை கருப்பாக வளர்த்து விட்டேன் என்று குறை கூறுவாளே! அதற்காகவா நீ திட்டம் போட்டு பகலெல்லாம் வெயிலின் சூட்டையேல்லாம் உன் மேனியோடு தாங்கிக் கொண்டு வருகிறாய்? வா. வீட்டுக்கு! உனக்குப் பிடித்த வெண்ணெய்ப் பலகாரங்கள் செய்து வைத்திருக்கிறேன். இன்னும் நமது தொழுவத்தில் பிறந்த கன்றுக்கும் தராமல் சீம்பாலில் இனிப்புகள் செய்து வைத்திருக்கிறேன். வா, மனைக்கு..! அடே பயல்களா! நீங்கள் விளையாட என் மாணிக்கம் தான் கிடைத்தானா? இரவெல்லாம் இந்தப் பெண்கள் அள்ளிக் கொண்டு போய் கொஞ்சித் தீர்க்கிறார்கள். அவர்களது முத்தங்களையெல்லாம் வாங்கிக் கொண்டு சிவந்த சிறுவனாக வருகிறான். பகலில் நீங்கள் வந்து கூட்டிக் கொண்டு போய் வெயிலில் விளையாடி அவனைக் கருநிறத்துக் கண்மணியாக மாற்றி அனுப்புகிறீர்கள். என் செல்வத்தின் உடல் தான் என்னாவது? இனிமேல் மனைப் பக்கம் வாருங்கள். உங்களையும் இவனுடன் சேர்த்து உரலோடு கட்டிப் போடுகிறேன். பிறகு எங்கும் நகரவியலாது. உங்கள் தாயார்கள் வந்து தயை கூறக் கேட்டாலும் அனுப்ப மாட்டேன். ஆமாம். கண்ணா! இனிமேல் வெளியே வந்து விளையாட மட்டேன் என்று உறுதி கூறு? எங்கே சொல்லு..! அது என்ன வாயில் அடைத்துக் கொண்டு இருக்கிறாய்? எங்கே காட்டு? ஆ.. காட்டு..! ஆ..!"

ஆஹா! இந்த அம்மையின் அன்பையும், ஆதுரமான பேச்சையும் வேறெங்கே காண முடியும்? நாமும் கண்ணனின் லீலையைப் பர்ப்போம்.

புல்லாங்குழலிற்கு உயிர் கொடுத்து உற்சாக உணர்வூட்டும் அந்த செவ்விதழ்களைத் திறந்து காட்டுகிறான். ஆஹா! ஆங்கே காண்பது தான் என்ன!

பிரபஞ்சத்தை அல்லவா காட்டுகிறான். அவன் இங்கே காட்டியதால், பிரபஞ்சத்திலேயே ஒன்றும் இல்லாமல் பஞ்சம் ஆனது போல் உள்ளதே! அவை தான் இங்கேயே உள்ளதே.!

ஏ.. மனமோகனா! அழகிய மணவாளா! மகா பிரபு! உன் கருணையின் வெள்ளத்தையும், மஹாமாயாவின் லீலைகளையும் உன் அன்னை யசோதையே தாங்கிக் கொள்ளவியலாமல் மயங்கி விழுகிறாளே! நாங்கள் என் செய்வோம்?

Thursday, April 05, 2018

கண்ணன் - எம் தலைவியின் காதலன்.



நுரையொதுங்கும் வழியோரம் நாணல்கள் நனையும்;
நதிக்குளிரில் மணற்பொடிகள் நறுமுகிலாய்ப் புனையும்;
கரைபதுங்கும் சிறுநண்டு கால்பதித்து நடக்கும்;
கதிரழகின் கரமள்ளி யமுனாநீர் மினுக்கும்;
தரைகிழித்து மணலெழும்பும் தானியக்கூர் போலே
தண்ணீர்மே லாடைமேல் தாவும்மென் மீன்கள்;
குறையொழிக்கும் மழைசினைக்கும் மண்வாசம் அன்ன
மாசறுபொன் மங்கையராய் கோகுலத்தில் நாங்கள். (1)

ஆடல்வல் லாளொருத்தி; அணிந்த ஆடை
அவனிதொடாச் சுழன்றாட ஆகா என்போம்;
பாடல்நல் லாளொருத்தி; பாகாய் ஓட
பளிங்குத்தேன் எனக்கேட்டுச் செவியால் உண்போம்;
தேடல்தள் ளாளொருத்தி; தெளிந்து கற்றுத்
தீந்தமிழில் சொற்கண்டு தேங்கற் கண்டு;
மூடல்கொள் ளாளொருத்தி; திருவாய் ஓயா
முடியாத பேச்சுப்பெண் யானும் உண்டு. (2)

ஊடல்கொள் வோஞ்சில்நாள்; உம்மென் றூகூம்
என்றிருந்துப் பின்சேர்ந்து 'எல்லே' யென்று
கூடல்கொள் வோம்பல்நாள்; குதித்து நீந்திக்
குளமெனில் சேறுழப்ப, நதியோ நாணும்;
வாடல்தாங் கோமெம்முள் வருத்தம் மேவும்
வஞ்சியைத்தேற் றித்தளும்பும் கண்ணீர் மாதைச்
சாடல்செய் யோம்;கோபம் கொள்ளும் போது
சரண்புகுவோம் சரிசெய்வாள் தலைவி ராதை. (3)


(ராதைப் புகழ்)



பொற்கட்டித் தன்வண்ணம் பெறக்கேட்கும் அவளை;
பொழிலந்தி மஞ்சள்வான் புறங்காட்டும் எழிலை;
புற்கட்டில் பனிசேர்ந்த புத்துணர்வில் இளமை;
புதிதான விடிகாலைப் பார்வைகள் குளுமை;
விற்கட்டில் ஈரம்பை விடுத்தாற்போல் விழிகள்;
விளையாடும் குழலாடும் விழுமருவிக் கூந்தல்;
சொற்கட்டிச் சொலுந்திறனைச் சொந்தமென் போரிவள்
சொர்ணெழிலைச் சொலப்புகுமின் செந்தமிழும் சேந்தல். (4)

பூச்சொரிவாள்; புல்நடப்பாள்; புத்தாடை கட்டிடப்
புல்லரிப்பாள்; புலர்பொழுதில் பிள்ளைக்குப் பின்பால்
பீய்ச்சிடுவாள்; தோழியரெம் மோடிணைந்தா டிநதிப்
பாய்ந்திடுவாள்; நீந்திடுவாள்; நில்லாவிண் தேரொளிப்
பூச்சிடுவாள்; புன்னகையால் பண்ணிசைப்பாள்; புதுமலர்
பார்த்திட்டால் போதுமடி! பிள்ளையொன்றின் நினைவதை
மூச்சிடுவாள்; பேச்சிடுவாள்; பேதமையில் பித்தாக
மூழ்கிடுவாள்; மூர்ச்சிடுவாள்; மூளும் நினைவதை. (5)


(கண்ணன் புகழ்)



பைந்தார் அணிமார் பவழத் திருவணி
நைந்தார் துயர்த்தீர் யதுகுல - மைந்தா
ரிடையொரு மைநிறப் பெய்தார் மழைநீ
ருடைமின் னலுமவன் மேனி.

மயிலிற கின்கால் மகுடம தின்மேல்
எயில்வலு காண்மின் நுதலில் - பயில்சீர்
எழிலொளி தீண்டி எழுமது தண்கூர்
விழிகளை மீட்டும் முகம்.

முன்னொரு ராவில் மதியொளி மாந்திட
மண்ணுறு பாடியில் மங்கையர் - முன்னிரு
கைகொப்பி மாயவன் கண்ணிறை கண்ணனை
மெய்யொப்பிப் பாடினோம் கும்மி.

(கும்மிப்பாட்டு)
(தன்னன நாதினம் தன்னானே - தன்ன தன்னன நாதினம் தன்னானே...)
(எ.டு.: செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே..)


மங்கைய ரெல்லோரும் வாருங்கடி - அன்புத்
தங்கைய ரெல்லோரும் வாருங்கடி - வந்து
எங்கையில் உங்கையைச் சேருங்கடி - கும்மி
அடித்து அடித்துப் பாடுங்கடி (மங்கை..)

நந்த குமாரனின் ஒய்யாரத்தை - அந்த
நாகத்தைக் கொன்ற நாயகனை - அவன்
சிந்தை குளிர வாழ்த்துங்கடி - நல்ல
சீனி வார்த்தையில் வாழ்த்துங்கடி..! (மங்கை..)

முத்துக்களை அள்ளி சேர்த்தபின்னே - வெள்ளை
முல்லைப்பூ மாலையில் கோர்த்தபின்னே - அந்த
ரத்தின ராசனின் தோள்களிலே - ராச
லீலையின் போது சூட்டுங்கடி..! (மங்கை..)

மேகத்தைப் போலக் கருத்தவனே - வெள்ளி
மீன்களை அள்ளிப் பதித்தவனே - எங்கள்
மோகத்தைத் தொட்டுப் படித்தவனே - கொங்கை
மேலெல்லாம் முத்தங் கொடுத்தவனே..! (மங்கை...)




***

பொருள்::

சேந்தல் - சுருக்கம்
பைந்தார் - இனிய பூமாலை
எயில் - கோட்டை
நுதல் - நெற்றி
தண்மை - குளிர்மை
மாந்திட - குடித்திட


***

Picture Courtesy :: http://www.salagram.net/Newsletter-Shastra227.html,

http://www.lordkrishna.com/Lord_Krishna_1.jpg, http://www.salemhistory.net/images/art_river_scene.jpg

நீலாம்பல் நெடுமலர்.34.

பொற்சுடரொளிர் சிறகு.

ரும்பட்டு போர்த்திய நள்ளிரவில் குத்தி வைத்த கூர்நுனிகள் வெண்ணொளி சிமிட்டிக் கொண்டு பனித்துளிகளை இறக்கிக் கொண்டிருக்கின்றன. காற்றில் குளிர் பரவுகின்றது. சாம்பல் மேகங்கள் எங்கோ விரைகின்றன. தார்ச்சாலைகள் செம்மஞ்சள் நீரால் கழுவப்படுகின்றன. வால்களுக்குள் நாசி புதைத்து தெருநாய்கள் உறங்குகின்றன. நாற்சுவர்களுக்குள் சிறுபூச்சிகள் சுற்றியலைய துணைக்கு சில நினைவுகளுடன் என் விழிகள் சேரா ஈரிமைகளுக்கிடையே விழித்துள்ளன.

முன்னொரு நாள் பின்மாலையில் ஒரு சாலையோரம் மழை நின்று தேங்கியிருந்த சிறு நீர்த்தேக்கத்தில் கண்ட முகம் ஒன்று. செங்குங்குமம் சிறு தீற்றலோடு நீறு பூத்த நுதல். கொஞ்சமே கொஞ்சமே கூர் மழுங்கிய மூக்கினடியில் நடந்து வந்த வேர்வைப்படலம். அடிவான் சிவப்பில் ஈரிதழ்த்தாமரை. வரைந்து முடித்த பின் களைத்துச் சரிந்த தூரிகைப் பிசிறாய் இரு சுருள்முடிகள் செவிகளொட்டி.

சிறுகுளத்தின் எதிரெதிர்ப் புறங்களில் இருவரும். யார் இடம் விட்டு யார் விலகுதல் என்ற நொடிக்காலம் யுகமாய் விரிந்தது. தலைக்கு மேல் பச்சைக்குருவிகள் மிச்சத்துளிகளை நம் மேல் சிந்தின. தரைச்சேற்றில் சிறு புழுவொன்று தலை வளைத்து உடல் நெளித்துப் பழுப்புப் பாதையொன்றை உண்டாக்கியது. மேல்வானின் விளிம்பில் கூடுதிரும்பும் பறவைகள் இனிய ராகமெழுப்பி வானை நிறைத்தன.  பொன் முகில்கள் பூத்திருந்தன. பின்னின்ற வாகன ஒலி கனவைக் கலைக்க திசைகளில் விலகினோம்.

மற்றுமிரு நாளின் மதியப்பொழுது.

நகரின் மையப்பூங்காவில் கூட்டம் குறைவு. குளிர் ஊற்றிய வெயிலின் போதைக்கு பூக்களெல்லாம் சுருண்டு உறங்கின. இலைச்சுருள்களுக்கிடையில் மென் நூல் போல் ஒளிக்கற்றை உள் நுழைந்து தரை தீண்டியது. கற்சுவர்களுக்கு வெளியே எரிநீர் ஊட்டும் உயிரில் கரும்புகை உமிழும் பொன்னகரம். பேராலமரத்தினடி ஒரு களைப்புத்தாங்கிக் காலியில் அமர்ந்திருந்தேன். வானை எண்ணி, புவியை எண்ணி, நாளை எண்ணி. வெண் பருத்திக் கொத்து பூத்தாற்போல் ஒரு நாய்க்குட்டியைக் கையள்ளி நடந்து வந்தாய், ஒற்றைப் பாதையில். மென் ஆரஞ்சு மேலாடை. பூமார் மறையிடைவெளி மிகச் சிறிது காட்டிக் காய்ச்சல் தருவிக்கும் மையத்தில் மஞ்சள் பூவலங்காரம். சந்தனக்காற்று போன்ற மறையாடை. வெண் பால் போன்ற கால்நுனி வரை மறைக்கும் கீழாடை. நகம் மட்டும் காட்டும் காலணிகள். இளஞ்சிவப்புக் கன்னங்கள்.

பேடைச் சிறகுக்குவியும் வெண்மணிச் சொற்களைத் தேக்கி வைத்து களைப்புக்காலியிடத்து அம்முனையில் அமர்ந்தாய். கையில் புரண்ட நாய்க்குட்டி என்னைப் பார்த்து செல்லமாய்ச் சீறியது. சீறல் சிணுங்கலாக மெல்ல முகம் தடவினாய். தடவி நாய் மகிழ்வுகொள்ள கைநழுவி பச்சைகளில் விழுந்து எழுந்து உடல் நெளித்து, கண்டுகொண்ட சிறு பூச்சியொன்றைக் கவ்வும் முயற்சியில் களிக்கத் தொடங்கியது. தனித்தமர்ந்த உன்னைத் தாவியணைக்கும் கண்கள் கொண்டருந்தினேன்.

பகல் வந்த தேவதை. பருவம் குமிழ்க்கும் பூந்தளிர். மின்னல் பதித்த மீன்விழி. மிதந்து வந்த மோனலிஸ ஓவியம். மிருதுவாய்த் தலை கோதும் மிளிர்விரல்கள். பின்மதியச் சோம்பலுக்கு மருந்து புகட்ட வந்த மலர் மருத்துவச்சி. கூடணையும் குயில்நிழல். சீரணிந்த செந்தழல். செழுங்கனி சுமந்திளைத்த வழுவிடை கிளர்ந்த கிளிக்குஞ்சு. பொற்தேர் பவனி வரும் ரதித்துளி.

”என்ன சொன்னீர்கள்..?” என்று கேட்டாய்.

“என்ன..?” என்றேன் திடுக்கிட்டு. மனச் சொற்கள் மண் நிகழ்ந்து விட்டனவா என்ன?

“எனைப் பார்த்து ரதி என்றீர்..” என்றாய்.

“பொய் சொல்ல விரும்பவில்லை. அழகிய முகில் ஒளித்த நிலவென வந்த உங்களை ரதி என்று குறைத்தே சொன்னேன்..” என்றேன். தைரியத்தின் சாறு சோறாக அன்றி சிறு தூறலாக மேல் விழுந்ததன்று.

செய்தாயா இல்லையா என்றறியக்கூடாத வகையில் ஒரு புன்னகை செய்தாயா? இதழ்க்கோட்டி எனைக்கோட்டி ஆக்கினாய். செங்கழுத்து புல்புல் போல் ஒரு கூர்க்குரல் கொடுத்தாய். செடி மலர்த்தி தனைத் தளர்த்திய அப்பூங்குட்டி சிற்றலை எழுந்தெழுந்து அணைவது போல் தாவித்தாவி வந்தடைந்தது உன்னை. கையேந்தும் தாமரை போல் அள்ளிக்கொண்டாய் அதை. எழுந்து நடந்தாய்; எனைக் கடந்தாய். சற்று தூரம் சென்றதும் திரும்பிப்பார்ப்பாய் என்று எதிர்பார்த்த என்னை ஏமாற்றவில்லை நீ.

ரதிகள் மட்டுமே செய்யக்கூடிய ஒன்றைச் செய்தாய். இரு செவ்விதழ்கள் குவித்து சிறு இடைவெளி கொண்டு கண்களை மூடி காற்றில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டாய்; அவ்வீர முத்தத்தைச் சுமந்து வந்த பூங்காவின் அத்தென்றல் காற்று என்னை அடைவதற்குள் யுக யுகங்கள் கழிந்திருந்தன.

அம்மாலை அத்தனை இனிப்பானது; அவ்விரவு அத்தனை கனவுகளாலானது.

Saturday, March 31, 2018

அணை தீண்டும் மதில்.


பேரறியா வனங்களின் மேல் எங்கெங்கெங்கிருந்தோ வந்து குழுமியிருந்த கருமுகில் கூட்டங்கள் நாளென்றும் இரவென்றும் பெய்து குளிர்ந்த மண்ணில் ஊறிய நீர்த்துளிகள் ஒன்றிணைந்தன. தாமே உருவாக்கிய பாதைகளில் ஒன்றோடொன்று இணைந்திணைந்து துளிகள் கோடுகளாயின; கோடுகள் ஓடைகளாயின; சிற்றோடைகள் சிற்றாறுகளாயின; சிற்றாறுகள் அருவிகளாயின; பேரருவிகள் நதிகளாயின; நதிகள் சேர்ந்து சேர்ந்து பேராறாகின; பேராற்றைத் தேக்கி வைத்த மதில்களாலான அணையை கணந்தோறும் முட்டி மோதித் தத்தளிக்கின்றது பெரு நீர் வெள்ளம்.

கரைகளை மீறத்துடிக்கும் பேரார்வம். ஈர மண்ணைக் குழைத்த ஓரங்களில் நாணல் செடிகள் பூத்து நிறைத்த வெண் படலம். அலைந்தும் குழிந்தும் தழைந்தும் குவிந்தும் தடுமாறும் மேல் தளத்திற்குக் கீழே நீலம் கரைந்த அடியாழம். பெரு முதலைகளும், ஐந்தடக்கல் போலும் ஆமைகளும், முள்ளென்றேயான மீன்களும் நீந்தும் ஆளறியா உலகு. தங்கமீன்களும் தவளைகளும் நஞ்சில்லா சிறு பாம்புகளும் விளையாடுதல் கண்டு நீந்த நனைதலுக்கு இறங்குவோர் கவ்வப்படுவர்.

அசட்டு தைரியத்தாலும் ஆர்வத்தாலும் தரை தொடாக் கால் கொண்டு உள் நுழைவோர் மேல் முதலில் சிறு பல் படும்; ஏதோ ஒரு செடி என்ற நினைவில் தள்ளி விடுவர். சற்றே கூரான நகங்கள் தோலெல்லாம் கீறிச் செல்லும். புதுக்குருதித் துளிகள் துளிர்த்து உடனே கரையும். எரிச்சலில் ஈரம் மேவும்.

மஞ்சு பொழியும் முன் மயில் நவிலும்; நதி நுரைக்கும் முன் கரை நாணல் நாணும்; வான் நிறையும் முன் புள் அறியும்; கண் காணும் முன் மனம் உணரும். தேன் தடவிய அம்பின் நுனி கூராய்க் கொல்லும் திசைகள் ஆயிரம்.

மேலே விரி ஆகாயநீலம்.. கீழே நீரீரம். இருள் நதி நிறைக்கும் ஒளிப்பூச்சிகள் மிதக்கும் வழியில் விழிகள்.

Pic :: https://fineartamerica.com/featured/black-and-white-erotic-stefan-kuhn.html

இன்றும் இனியும்.

திரி மல்லி இதழ்கள்.

ரை மேல் விரிந்த மலரொன்று வான் நிறைந்த கதிரை விரும்புகின்றது. மஞ்சள் இதழ்களால் சூழ்ந்த செம்மையத்தில் துகள்களாய்ச் சேர்த்திருந்த மகரந்தப் பொட்டுகளை மேல் காட்டி வெங்கதிருக்குக் காத்திருக்கின்றது. வண்டொன்று வந்து துளிர்த்திருக்கும் சிறு தேன் துளிகளைச் சுவைத்து கொண்டு செல்கின்றது.

கூந்தலில் வாடிய மலரள்ளி உதிர்த்த  பின்னும் உன் காலடிகள் என் இல்லத்தில் படாதது ஏன்? கோடை கால நீல வானம் போல் தெளிவாக என் படுக்கை துல்லியமாக அமைந்தது. இறைத்திறைத்துக் கேணி பால் வற்றிய பசு அகிடுகள் போல் இளைத்து வருகின்றது. இரவில் எழும் தீராக் கொலுசொலியை சுவர்ப்பல்லியும் கேட்டுக் கொண்டிருக்கின்றது. குளிரில் நனையும் தென்னங்கீற்று அசைவொழிந்து சரிந்து சிறிதாக ஒட்டியுள்ளது.

ண்டபின் எழுந்த மொழியில் சொல்லில்லை; தேடிக் கொண்டு வந்த சொல்லில் எழுத்தில்லை; மீட்டு எடுத்து மீட்டிப் பார்க்கையில் எழுத்தில் உயிரில்லை; உயிரென்று முன் அமர்ந்த முழுதுயிர்ப் பதுமையே, நிழல் சுரக்கும் மலர்க்கொடியே, வாழி நீ!

தீம்பாவைத் தேனூறப் பூத்த மலைச்சாரல் நதியென்று ஆனது போல், வயதுகளில் நீ வாரிக் கொணர்ந்த வனப்பையெல்லாம் மூடி மறைத்து எங்கு கொண்டு செல்கிறாய்?

காளை கட்டிக் கதிரறுத்துக் கலம் நிறைத்தல் போல் சிந்தும் புன்னகையை, ஆனை கட்டிப் போரடித்து அடுக்கும் தாழிகளில் நிரப்பி என் கைகளில் சேர்ப்பதென்று?

நீலச்செவ்வரி ஓடும் கூந்தல் சரிவுகளில் மின்னும் கதிரழகெல்லாம் நின் பார்வை என்றறியாது இக்கவி எழுதுவது தான் என்ன?

பூனையொன்று இரவில் மென் பாதங்கள் வைத்து நுழைந்து உருட்டிய குடுவைத்தயிர் போல் எத்தடம் எப்படி வைத்து மனதுள் நுழைந்து உறங்கும் இளமையை வைத்து விளையாடும் உன் குரூரம் தான் என்ன?

பெருமழை பெய்து கொண்டிருக்கும் பொழுதில் கரும்பாறைகள் நிறைந்து கால் சறுக்கி பாதாளம் நோக்கி விரைகையில், கைப்பிடித்த ஒற்றை வேர் உன் விழிமொழி என்றாவதறிவாயா நீ?

ஊசியிலைக் காட்டில் இலைகளில் தங்கும் பனி மென் சூட்டுக்குக் காட்டும் பல் வர்ணங்கள்,
இரவின் கதகதப்புக் கூட்டுத் தீ,
புகைபோக்கி வாய் திறந்து வெளியாகும் கரும்புகை காற்றுடன் கலத்தல்,
பழுப்புக் குதிரை வால்நுனி மேலமரும் சிறுவண்டு,
போரழித்த சுடலையில் எரியும் கனவுகளின் மணம்,
தோளணைத்த நாகம் தீண்டத் திளைக்கும் நஞ்சுச் சுவை,
கள்நுரைத்த கலத்து விளிம்பில் போதையில் மல்லாந்த பூச்சி,
சிறகடித்து வான் அளக்கும் சின்னஞ்சிறு குருவி கொத்தித்தின்னும் புழு,
நீயடி!

இளமயில் இருப்பு, இருகுயில் தவிப்பு, இணையமர் வனப்பு, இறுகுதல் உவப்பு!

தினைகதிர் தலை தாழ்த்தி மண் காணல் போல், உனைஎதிர் பார்த்து மயக்கம்.

னமெழக் கொள்ளும் காலத்தை விட, வனத்தில் தழலெழக் கொள்ளும் நொடிகள் மீக்குறைவு. அலையெழுகையில் பசிய இலையென்றோ, மரித்த சருகென்றோ, தேன் கலம் மலரென்றோ, செழுங்கனியென்றோ காண்பதில்லை. மூட்டிவிடும் சிறுபொறி எங்கிருந்து துளிர்க்கும் என்றறியாவகை எழுகின்றது ஒரு கரம்.

மலைமுகட்டில் ஒரு மலர் மலர்ந்தது. தனித்தது; தவிர்த்தது. மஞ்சள் இதழ்கள் சுற்றிக் குவிந்த மையத்தில் மகரந்தத் தூள் நிறை கடமையொன்றைச் சுமந்து, காலடிக்கீழ் உறைந்த நகரைப் பார்த்தவாறு, அச்சிறுமலர் தன் தேன் உண்ணும் அவ்வொற்றை வண்டிற்கென சிறு இலைகளைக் குவித்துத் தவம் செய்யலாயிற்று.

மாயவேளை ஒன்றில், மழை பெற்று முடித்த முன் மாலையில் தூரத்து வானவில்லின் விரைந்த பாதையில் விளைந்தது புதுவர்ணம் ஒன்று. கதிர்க்கரம் தொட்டு ஈரத்துடன் சூடிக்கொண்ட அப்புதுநிறம் மெல்லமெல்ல ஒரு துளியாகி கீழ் விடுத்து, கலந்தது.

லரென என் மனதில் பூத்தாய்
மணமென என்னுள் மணந்தாய்!
அழகே! அமுதே!
விலகி விலகிச் செல்லும் விந்தையே!
மதுபொழி எழிலே!
மதுமர மதுரமே! மதுகரமே!
சொற்கள் அறியாது திகைப்பின்
திசையில் அமிழ்த்தப்படுகிறேன்!

ண்டூறும் நதிக்கரை மணலில் யார் பெயரை எழுதிச் சென்றன கால்கள்? யார் பெயரைக் கலைத்துச் சென்றது காற்று? பொன்மாலை வெயிலில் இலைகள் மேல் தங்கப்பூச்சு பூசிய ஒளிக்கதிர்கள் எங்கிருந்து எங்கு செல்கின்றன? எவரிடமிருந்து எவற்றைக் கொண்டு செல்கின்றன? பசிய ஈரம் படர்ந்த மரம் மேல் வழுக்காமல் விழாமல் நெளிந்து செல்கின்ற புழுவொன்று, அடர் கானகத்தின் ஆயிரம் கோடி ஜீவன்களின் மிதிபடாமல் விழிபடாமல் இன்னும் உயிர்த்திருக்கின்ற பேரதிசயம்.

கருங்குயில் குரல் தீண்டும் செவிகள் இல்லா வெளியில் ஒற்றை நினைவோடு நடந்து செல்கிறேன். வானெங்கும் தூய நீலம். மேகங்களற்ற வெட்டவெளி. துல்லியமான பகல், தலைக்கு மேல் பூத்திருக்கின்றது. ஜ்வலிக்கும் கதிர்வட்டங்கள் பெருமர இடைவெளிகளுக்குள் புகுந்து புகுந்து மாயாஜால வர்ணங்கள் காட்டுகின்றன. பாதைகளில் சருகுகள் அல்லது சருகுகளை ஒதுக்க உருவாகும் பாதை. பாறை பிளக்கும் பெரும் பெரும் வேர்கள் கட்டியணைத்துப் பின்னிப் பிணைந்து நாகசல்லாபம் செய்யும் பிரம்மாண்ட காமவெளி.