Friday, November 14, 2008

ஆயுசுக்கும் வரமாட்டன்..!

ப்பனைகளைக் கலைத்து விடு, களைந்து விட்டு மனதின் உண்மையான குரலில் பேச முயலும் போது தான், கவிதையின் மொழி நமது அடித்தளத்தை நமக்கே காட்டுகின்றது. 'நான் இத்தனை எளியனா..?' என்பது நமக்கு சற்று அதிர்ச்சி கொடுத்தாலும், உலகமெல்லாம் சுற்றினாலும் நமது வேர்கள் இன்னும் அறுபடவில்லை என்ற ஒரு நிம்மதி பிறக்கின்றது.

இதோ மனதின் ஒரு நேரடிக் கவிதை..!

13.Nov.2005.

காஞ்சு போன கருவேல முள்ளுக,
காரம் போட்டு கன்னி சொன்ன சொல்லுக,
கண்ணுக்குள்ள குத்துது, நெஞ்சுக்குள்ள நிக்குது!
குலை வரைக்கும் நொழஞ்சு, கடைசி வரைக்கும் கொல்லுது!

பச்சைப் பசும் பாறை போல வழுக்குது,
பகல்வேசம் போட்டு, நல்லாத் தான் நடிக்குது,
பர்சாக் கொடுத்திருச்சு, பதுக்கி வெச்ச ஒரு நெனப்பு,
தரிசாப் போயிடுச்சு, ஒதுக்கி வெச்ச ஒரு மனசு.!

எரு போட்டு, ஒரம் போட்டு, வளத்து வத்தேன்,
எதமான நெனப்புகள் எடுத்துச் சொல்லி நெனச்சு வந்தேன்,
எடுத்துச் சொல்லயில, எடுத்தெறிஞ்சு வீசயில, இருந்த
எடம் தெரியாம போயிடுச்சு, எதயும் தாங்கற எம் மனசு.!

நேத்து வரைக்கும் நெனக்கலயே, நெஞ்சுக்குள்ள தோணலியே,
பாத்து வெச்ச சிரிப்பெல்லாம் பஞ்சாப் போகுமின்னு,
காத்தடிச்சு கலஞ்சு போன கருமேகக் கூட்டம்போல,
சேத்து வெச்ச கனவெல்லாம், செதறி செதறிப் போனதம்மா.!

உருப் போட்டு, உருப் போட்டு, உம் முகத்தைப் பதிச்சு வெச்சேன்,
கருப் போல, கருப் போல, கவனமாத் தான் காத்து வெச்சேன்,
தெருவோரம் போகயில, தெறிச்சு விழுந்த சேறு போல,
ஒரு வார்த்த கேட்கயில, ஒதறிப் போச்சு, என் உசிரு.!

ஆனப் பசி கொண்ட என் வீடு அடுப்புக்குள்ள,
பூன வந்து தூங்குதம்மா, புழுவெல்லாம் ஊறுதம்மா!
வானம் பாத்த பூமி போல, வறண்டு போன கெணறு போல,
ஊனமாகிப் போனேனம்மா, உருப்படாம ஆனேனம்மா.!

பக்கமிருந்தும் பாத்துக்கல, பாத்திருந்தும் பேசவில்ல,
திக்கித் திக்கிச் சொன்ன வார்த்தை, தீயா பதிலை,
துக்கத்தோடு கேட்டுக்கறேன், தூரமாப் போயிக்கறன்,
அக்கம்பக்கம் நகந்திடறன், ஆயுசுக்கும் வரமாட்டன்..!

***

வாய்க்கா வரப்போரம்...

வெறுமைக் கணங்களை நிரப்பும் தமிழ்த் துளிகள்.

அசத்திப்புட்ட புள்ள...!

போறவளே பொன்னுத்தாயி...!

2 comments:

thamizhparavai said...

எளிய தமிழில் சோகச்சுவைப் பாடல்.நன்று வசந்த்.
பாடுவதற்கேற்ற சந்தத்தில் அமைந்திருக்கிறது.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

கிராமத்துச் சந்தப் பாடல் எனில் அது நமது மனதுக்கு நெருக்கமாக இருக்கும் என்பது தான் இப்பாடல்களின் ஆசுவாசத் தன்மைக்கு காரணம்.