
படபடக்கும் காற்றின் அலைகள் ஓய்ந்து , ஒரு வேட்டை நாயைப் போல் கவ்விக் கொள்ளும் வேகத்தோடு பாய்ந்து வந்து கொண்டிருக்கின்றது இரவின் மாயப் பிடி.
ஈரத்துளிகளால் நிரம்பியிருந்த ஜில்லிட்டுப் போயிருந்த பாதைகளில் நடந்து வருகிறேன். பனிக்காலம் துவங்கி விட்டதை உணர்த்தும் வாடைக்காற்று வீசத் தொடங்கி இருந்தது. இரவின் மெல்லிய அணைப்புக்குள் அடங்கிக் கொள்ளும் பூக்கள் நடுங்கிக் கொள்ளத் தொடங்கின.
உடலோடு இறுக்கிக் கொள்ளும் உடைகள் அணிந்து குளிரிலிருந்து என்னைக் காத்துக் கொள்கிறேன். விரைந்து வீட்டிற்குச் செல்ல வேண்டும். காத்துக் கொண்டிருப்பாள் அவள்.
ஏரிக்கரையின் நுனிகளில் கட்டப்பட்டிருக்கும் கம்பி வலைகளை ஒட்டிய பாதையில் நடக்கிறேன். வழியெங்கும் நட்டு வைத்த மரங்களின் தலையசைப்பிற்குத் தாளம் போட்டுக் கொண்டிருந்தன நீரின் அலைகள்.
மெளனத்தின் போர்வையைப் போர்த்திக் கொண்டு காணக் கூடாதென்ற நினைவோடு எண்ணிக் கொண்டே சென்றேன், கடந்து செல்லும் மரங்களை..! நிறுத்த முடியவில்லை, நிற்க வேண்டும் என்ற எண்ணத்தை..!
அதே மரம்..!
எனக்குள் விசிறி அடித்த எண்ணங்களை உதறப் பார்க்கிறேன். உத்றிய பின்னும் ஒட்டிக் கொள்ளும் மழைத்துளி போல் கட்டிக் கொள்கின்றது என்னையே..!
அவன் நினைவுகளை அள்ளிப் போடுகிறது எனக்குள்!
போரின் களங்களுக்குள் போய் வருகிறேன் என்று விட்டு, தொலை தூர பூமியில் தொலைந்து போனவன். குறி பார்த்து சுடுபவன் என்று என் கண்களில் பூத்திருந்த வெட்கத்தை வைத்து அறிந்து, அள்ளிச் சென்றனர் அவனை! எரியீட்டி போல் பாய்ந்து வந்த செய்திகளின் பின்னே எட்டிப் பார்த்த கொடூர செய்தியின் கனம் தாங்க முடியாமல் இருந்தது.
இந்த மரத்தின் நிழலில் தன்னை மறைத்துக் கொண்டு, என்னை அழைத்துக் கொண்டு ஆத்மாவின் ஈரத்தை இதழ் வழி உறிந்து சென்றான். முன்பொரு பனிக்காலத்தின் குளிரில் எரிக்க விறகு கொண்டு கதகதப்பாக்கி, இக்காலத்தில் புகையாகிப் போனான்.
இன்னும் எதிர்பார்ப்பது ஏன் என்ற கேள்விக்கு விடை இன்றி, குளிர்க்காற்றின் வருகைக்குப் பின்னான் வந்து நிற்பான் என்று எட்டிப் பார்ப்பதிலேயே கழிகிறது காலம்...!
3 comments:
wow...nice picture!!
:)
அன்பு மல்லிகை...
/*
wow...nice picture!!
*/
இந்த படத்துக்கு இன்னும் நல்லா எழுதணும்னு தான் நெனச்சேன்... ஆனா இவ்ளோ தான் எழுத வந்திச்சு... ;-((
பரவாயில்லை...கவலைப்படாதீங்க வசந்த்...வரப்போ எழுதிக்கலாம்...:)))))
Post a Comment