Monday, January 28, 2008
கடைசி மனிதனின் குரல்.
மெல்ல நிமிர்ந்து பார்த்தேன்.
தலைக்கு மேல் வெண்ணிலா. பிரம்மாண்டமாய்... மிகப் பிரம்மாண்டமாய்... ஜொலித்துக் கொண்டிருந்தது. அமைதியாக வீசிக் கொண்டிருந்தது காற்று. கால்களின் இடுக்குகளில் நுழைந்துப் பாயும் ஓடை போல் இன்றி, பாய்ந்து கொண்டிருந்தது மென் காற்று.
கரிய வானம் இன்னும் கைக்குள் அள்ள முடியாத இருளைப் பூசிக் கொண்டு பிரபஞ்சமெங்கும் வியாபித்திருந்தது. குத்தி வைத்த குண்டூசியின் தலை நுனிகள் போல் எங்கோ தொலைவில்.. மிகத் தொலைவில் தெரிந்தன இரு விண்மீன்கள்.
ஓங்கார நாதம் தெளிவாக... மிகத் தெளிவாகக் கேட்டுக் கொண்டேயிருந்தது.
காற்றின் தாள லயத்திற்குத் தகுந்த ஜதியோடு அசைந்து கொண்டேயிருந்தது நீரோடை. ஈரத்தில் நனைந்த அதன் படலங்கள் போர்த்திக் கொண்ட நீரின் கரை என்னைச் சூழ்ந்து கொண்டே வந்தது.
யாருமற்ற தனிமையின் அழுத்தமான போர்வை என்னை மூடிக் கொண்டே வந்தது. நீரின் சகதிகள் சூழ்ந்த மண் மேடுகளின் சேறு என்னை விழுங்கிக் கொள்ள பெரும் திறந்த வாயோடு விரைந்து வருகிறது.
கனத்த மெளனத்தின் வலுவான கரங்கள் ஐயோ.. என்னைப் பிடித்து நெருக்குகின்றன. முட்டுகின்றது என் மூச்சு... பேயாக வீசத் தொடங்குகிறது பெருங்காற்று... புரட்டிப் புரட்டிப் போடுகின்றது.
ஆளுயர அலைகள் உற்பத்தியாகி என் மேல் விழுகின்றன.
திறந்திருக்கும் நெடுங்கதவு என நினைத்து எதிர்த்திசையில் ஓட... அங்கே திறந்திருக்கிறது பிரபஞ்சம்.
தன் இரு கைகளால் என்னை அள்ளிக் கொள்ள, பெரும் கண்களில் இரத்த ஆறு பாயக் காத்திருக்கிறது.
அப்படியே புதைகிறேன்.. சிவந்த கொழ..கொழவென குழைந்து போயிருந்த நிலத்தின் கண்கள் திறந்து கொண்டு பீச்சி அடிக்கின்றது கருநீர்.
மனிதனின் பேராசையில் அழிந்து போன நிலத்தின் மேலிருந்த கடைசி.. மிகக் கடைசி, மனிதனின் உடல் பெரும் இரைச்சலோடு பிரபஞ்சத்தால் உறியப்பட்டு உண்ணப்படுகிறது.
என் கைகளின் விரலிடுக்குகளில் சிக்கியது விதைகளின் உடைகளைக் கிழித்துக் கொண்டு புத்தம் புதிய உயிராய் முளைக்கின்ற ஒரு செடி..!
பேரமைதியோடு கண்களை மூடிய கருஞ்சேறு நுழையுமுன், ஆழ்ந்து இழுக்கிறேன், அழிந்து போன பூமியின் கடைசி ஆக்ஸிஜன்...!
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment