Sunday, January 27, 2008
தொலையாது ஈரம்.
ஒற்றைத் துளிகளாய்ச் சேகரித்து நிரப்பி வைத்துள்ளேன் ஓர் இரத்தத் தொட்டியை, வா வந்து குளித்து விட்டுப் போ..!
கூந்தலில் செருகிக் கொள்ள, சிறகின்றித் தவிக்கிறாயாமே... சொட்டச் சொட்ட நனைகின்றதே இந்த நிலவின் பனியில் ஒரு குரல், நினைவில்லையா உனக்கு..?
நெடுந்தூரம் சென்று தொலைத்து விட்டு வர ஒரு விளக்கின்றி இருக்கிறாயாம், எடுத்துக் கொள் அணைகின்ற நிலையில் மினுக்கும் ஒளியை என் கண்களில் இருந்து..!
விடியலுக்கு முன் இணைந்திருந்த நகங்களின் கூர்மை கிழித்த தசைகளைக் கொண்டு வந்து தருகின்றேன், எனக்குத் திருப்பித் தர முடியுமா, உடைந்து போன இதயத் துணுக்குகளை...?
விரலசைத்து நீ தெளிக்கும் விடைபெறலுக்குச் சிதறிய கோலப் புள்ளிகளாய் கழிந்தன என் நாட்கள்..!
மாலையில் இருந்து முனகிச் செல்லும் மணமாய் உன்னிடமிருந்து என் காதல் விலகிச் சென்றிடினும், மலராய் இருப்பது உன் இயல்பு..!
தூவானம் நின்றிடினும் தொலையாது ஈரம்..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment