Sunday, January 27, 2008

போகச் சொல் உன் இதயத்தை..!



பொழுதே போக மாட்டேன் என்கிறது என்றேன்.

காட்டினான் உன்னை. 'போகச் சொல் உன் இதயத்தை' என்றான். சொல்லும் முன்னே நகர்ந்து சென்று விட்டது. ஒரு நாளின் இரவில் விழத் துவங்கினேன், காதலின் பொன் வலையில்!

என்ன செய்வது என்று கேட்டேன். உன் அருகில் சென்று பேசு என்றான்.

ஏதோ பெயர் சொல்லி உன் அருகில் வந்தேன். சொன்ன பெயரை மறந்து போனேன். ஏதேதோ பேசச் சொன்னான். வார்த்தைகளின் வரி வடிவம், வாய்க்குள் வடிவம் கொள்ளும் முன் என் வசமிழந்து நகர்ந்து சென்றன.

பரிதாபமாக அவனைப் பார்த்தேன். சிரித்துக் கொண்டான் என்பதை அவன் கண்களின் வர்ணங்கள் காட்டின.

மொழிக உன் காதலை என்றான். எப்படி என்றேன். மொழிகள் வேறாயினும், விழிகள் வழி மொழிக அன்பை என்றான்.

சொல்லத் துவங்கு முன், நனையத் தொடங்கினேன், உன் கேள்விப் பார்வையில்!

ஏதேதோ பேசினேன். பேசியதும், கேட்டதும், சொன்னதும், மொழிந்ததும், பொழிந்ததும், அவ்வப்போது வழிந்ததும்.... எட்டி நின்று பார்த்துக் கொண்டிருந்தான், கள்ளன்.

தலையில் அடித்துக் கொண்டான்.

வேறு வழியின்றி உன் இதயத்துக்குள்ளும் பாய்ச்சினான், காதலெனும் பேருணர்வை...!

உன் மென் புன்னகைக்குள் நீ என்னை புதைத்துக் கொண்டாய் என்பதில் புரிந்து கொண்டேன், பொன் வலையில் சிக்கிக் கொண்ட ஒரு வெண் புறா என்று..!

சிரித்தபடி கையசைத்துப் பறந்து சென்றான், அந்த மாயன்...!

No comments: