Wednesday, January 30, 2008

Matrixல் மன்னாரு...!



ச்சை பச்சையாய் வார்த்தைகள் விழுந்து கொண்டிருந்தன.

மெதுவாய், மிக மெதுவாய்... ஊதுபர்த்தி பற்ற வைத்து விட்டு பூஜையறையை சாத்தி விட்டு, சிறிது நேரம் கழித்து கதவைத் திறந்து பார்த்தால்.. ஒரு புகைப் படலம் போல் , ஒரு மேக மண்டலம் போல் அறையைச் சுற்றிக் கொண்டிருக்குமே.. அத்தனை மெதுவாக அவன் மேல் விழுந்து கொண்டிருந்தன.

கண் விழித்துப் பார்த்தான்.

இருளின் கரும் இருட்டில் அவன் மட்டும் தனியாக..! துளியளவும் வெளிச்சம் இல்லாத, பிரபஞ்சத்தின் எந்த மூலை என்று தெரியாத அளவிற்கு கருப்பின் பிரம்மாண்டமான வாய்க்குள் அவன் இருந்தான்.

மின்மினிப் பூச்சிகள் இளம் பச்சை நிறத்தில் மினுமினுத்துக் கொண்டு பேர் தெரியாத பச்சைப் புதர்களின் இலைகளில் இளைப்பாறுமே, அது போல், அந்த இருட்டின் போர்வையில் குத்திய தூண்டில் முட்களாய் அந்த பச்சை எழுத்துக்கள் அவனைச் சூழ்ந்து விழுந்து கொண்டிருந்தன.

சில எழுத்துக்கள் அவனைத் தொட்டு அப்படியே வழுக்கிச் சென்றன. சில அவனது உடலுக்குள் மெல்ல ஊசியின் வலுவோடும், தீவிரத்தோடும் ஊடுறுவின. சில அவனது காது மடல்களின் எல்லைகளில் தடவி, அப்படியே உள் நுழைந்தன.

சில அவனைக் கேளாமலேயே அவன் உடலைக் குத்தத் தொடங்கின. அவற்றை உதறித் தள்ளி விட்டு ஓடத் துவங்கினான்.

துரத்தல் தொடங்கியது. துப்பாக்கியில் இருந்து புறப்படும் தோட்டாக்கள் போல் ஒரே சீராக அவனைத் துரத்தத் தொடங்கின.

ஓடிக் கொண்டேயிருந்தவன் கால் இடறிக் கீழே விழுந்தான்.

"லே மன்னாரு...! காலங்காத்தால என்னடா கெனவு! எந்திரிச்சு தொளிலுக்குப் போடா வெண்ண..! கெனா காணறான். சோத்துக்கே வளியக் காணோம். சொத்துக்கு சண்ட போட்டானாம். இந்தக் கதெயால்ல இருக்கு. நேத்து தான் புயல் சின்னம் போயிருக்கு. கருவாடெல்லாம் காஞ்சி போயிருக்கு. துன்றதுக்கு வூட்ல ஒண்ணும் இல்ல. சேட்டாண்ட அண்டா, குண்டா எல்லாம் அடகு வெச்சாச்சு. இன்னும் அடகு வெக்க வூட்ல பாத்தரம் பண்டம் இல்ல. உங்கப்பன் கடலோட போனவன், என்னயும் இஸ்துகினு போயிருக்கலாம். கசுமாலம், உன்ன குடுத்துட்டு போனான். எனக்கு கா வவுறு கஞ்சி ஊத்துவான்னு பாத்தா, உனக்கு நானில்ல வடிச்சுக் கொட்ட வேண்டியிருக்கு..! நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன். ஒறக்கத்த பாரு..! எலே..! வெக்கங் கெட்ட...."

பச்சை பச்சையாய் வார்த்தைகள் விழுந்து கொண்டேயிருந்தன.

4 comments:

Anonymous said...

ungal ezhuthukkal ennai kattipodugindrana...nandraaga rasithukkondirukkiraen...
ungal blog'I paarkka nerndhadil mikka magizchi adaigeran naan....

இரா. வசந்த குமார். said...

ஐயா நீர் யார் எவர்னே தெரியல.. இருந்தாலும் இப்படி பாராட்டி எழுதி இருக்கீங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.. உங்களுக்கு ரொம்ப நன்றிங்கோ....

sathya said...

gr8 sci fiction stories

இரா. வசந்த குமார். said...

Dear Sathya...

Very much Thanks to u....