ஏரியாவே களேபரமாய் இருந்தது.
அரையிருட்டில் ஆங்காங்கே மட்டும் வெளிச்சம் பாய்ந்து கொண்டிருந்தது. சுற்றிலும் துருப் பிடித்த அரிவாள்களும், கத்திகளும் சிதறிக் கிடந்தன. துரு என்றால் சாதாரண துரு இல்லை, சிவப்புத் துரு.
அவன் அவற்றைக் காதலுடன் பார்த்தான்.
"பார்த்தீங்களா.. இதெல்லாம் யூஸ் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. இதெல்லாம் விட்டுட்டு நான் வேற வழியில நல்லவனா போகலாம்னு பாக்கறேன். நீங்க விட மாட்டேங்கறீங்க.."
குழைவாகச் சிரித்தார் அவர்.
"தம்பி அப்படியெல்லாம் அவசரப்பட்டு முடிவெடுத்திடக் கூடாது. உங்களை நம்பித் தான் இருக்கேன்..."
"விட மாட்டீங்க போல.." சிரித்தபடி தன் மோவாயைத் தடவிக் கொண்டான். மொர மொரவென நீட்டிக் கொண்டிருந்த சில நாள் தாடி உள்ளங்கையில் உரசிச் சென்றது.
"அப்ப அங்கயே கட் பண்ணலாம்.."
"அங்கயா தம்பி... அங்க கட் பண்ணினா ஆபாசமா இருக்காது..?"
"ஆபாசமா தான் இருக்கும். ஆனா அது தான் சரியான இடம். இது வரைக்கும் யாரும் கட் பண்ணாத எடம் அது. கூட்டமா பாக்கறவனுக்கெல்லாம் வலிக்கணும். அப்படி இருந்தா தான் உங்கள மாதிரி தேவை இருக்கறவங்க எல்லாம் நாளைக்கு என்னைத் தேடி வருவாங்க.."
"புரியுது தம்பி... இருந்தாலும் அந்த எடம் தான்..."
அவன் கண்களில் சிவப்பு ஏற ஆரம்பித்தது.
"இந்த மாதிரி கொலை எத்தனை பணியிருக்கேன். நீங்க சும்மா பேசாதீங்க. உங்களுக்கு வேலை ஆகணுமா வேண்டாமா..? இல்லைனா வேற ஆளு பாத்துக்குங்க. 'வண்ணாரப் பேட்டை வடிவேலு', 'தண்டையார்பேட்டை தனபாலு', 'பெசன்ட் நகர் பெருமாளு' இதுங்களுக்கெல்லாம் இப்படி எதிர்பாராத எடத்துல கட் பாண்ணினதுல தான் எல்லார்க்கும் என்னைப் பத்தி தெரிஞ்சது. உங்களைப் பொறுத்த வரை நான் சொன்ன எடத்துல தான் கட் பண்ணுவேன்... அப்புறம் உங்க இஷ்டம்.."
"தம்பி கோவிச்சுக்கப்படாது.. நீங்க சொன்ன எடத்துல கட் பண்ணினா, நாளைக்குப் பிரச்னை வரும் போது, நான் மாட்டிக்குவேன். இப்ப எல்லாம் அவ்வளவு சுலபமா கொலைகள் பண்ணிட முடியறதில்லை. நாம கஷ்டப்பட்டு வேலை முடிச்சுத் தர்றோம்.அதை வெட்டித் தள்ளறதுக்காக ரூம்ல கையில கத்தி, கத்திரிகோலோட இருக்காங்க. அதான் பாக்கறேன்.."
"அதெல்லாம் உங்க கவலை.. என்னோட வேலை கொடுக்கற காசுகு கதையை முடிக்கறது தான். அதுக்கப்புறம் உங்க பாடு. என் இஷ்டப்படி தான் நான் வெட்டுவேன். இல்லைனா என் ப்ளானை மாத்த வேண்டி வரும். பரவாயில்லையா..?"
"சரி தம்பி. நீங்க உங்க இஷ்டத்துக்கு எங்க வேணும்னாலும் கட் பண்ணுங்க.. படத்தை மட்டும் சீக்கிரம் முடிச்சுக் குடுத்கிடுங்க. அப்ப நான் வர்றேன்.."
தயாரிப்பாளர் விடை பெற்றவுடன், இளம் இயக்குனன் மகுடன் சிந்திக்கலானான்.
'அங்க கட் பண்ணினா ஜனங்க ஏத்துவாக்கங்களா..?'
No comments:
Post a Comment