Tuesday, January 29, 2008

பாசம்.

"ன்னண்ணே வர வர தண்ணிய வாயிலயே வெக்க முடியல..."

"என்ன பண்றது தம்பி.. தண்ணியில என்னென்னவோ கலக்கறாங்க.. அட.. குடிக்க தான் முடியலனு பார்த்தா, கருமம் குளிக்க கூட முடியல.. ஒடம்பெல்லாம் செதில் செதிலா வருது.. தண்ணி வரத்தும் அப்பப்போ கம்மியாயிடுது. நாமளும் பரம்பரை, பரம்பரையா இந்த வாய்க்கா தண்ணிய நம்பியே வாழ்ந்துட்டோம். இந்த வயசான காலத்துல வேற எடம் போகறதுக்கும் முடியல..."

"ஆமா.. உங்க பையன் எங்க.. கொஞ்ச நாளா கண்ணுலயே படல.. அசலூரு எங்கயாவது போயிருக்காப்லயா..?"

"அட.. நீ வேற.. எளந்தாரிப் பசங்க எல்லாம் ஒண்ணு சேந்து ஒரு முடிவுக்கு வந்திருக்காங்களாம். தலமுற, தலமுறயா நம்ம பாட்டன், பூட்டன் காலத்தில இருந்து நாம வாழ்ந்திட்டு இருக்கற இந்த ஊரும், மண்ணும், தண்ணியும் போறாதாம் அவிங்களுக்கு.. வேற ஊரு பாக்கப் போறோம்னு கெளம்பிட்டாங்க.. இந்தக் காலத்துல எது நம்ம பேச்சக் கேக்குது...?"

"அப்பிடி எந்த ஊருக்குப் போகறாகளாம்..?"

"ஏதோ பட்டணம் போய் பொழக்கிறாகளாம். மெட்ராஸுனு சொன்னாங்க..என்னையும் கூப்பிட்டாங்க. நான் முடியவே முடியாதுனு சொல்லிட்டேன். நீயே சொல்லு. இந்த ஊர விட்டு போக நமக்கு மனசு வருமா? அடடா.. எத்தன நடந்திருக்கு இங்க..? அந்தக் காலத்து ஜமீன் வூட்டு பொண்ணு.. அப்படியே லட்டு மத்திரி இல்ல இருக்கும். ஊரே நேர்ல கூட பாக்க முடியாது. எவனாவது நிமிந்து பாத்தான்னு தெரிஞ்சா கூட கண்ண நோண்டிருவானுங்க..அந்த ஜமீன் காரனுங்க.. அப்படியும், நாம தான தெகிரியமா, அவ ஆத்துல குளிக்கும் போது ஒளிஞ்சிருந்து பாத்தோம்.. நம்மள ஏதாவது பண்ண முடிஞ்சுதா... அப்புறம் ஒவ்வொரு ஊர்த் திருவிழாவுக்கும் சாமி சிலை கடைசியா நம்ம ஊட்டுக்குள்ள இல்ல வரும்.. இப்படி பெருமையா வாழ்ந்த மண்ண விட்டுட்டு எப்படி போறது...?"

"பழய கதையெல்லாம் வுடுங்கண்ணே..மெட்ராஸுல எங்க போய் இருக்கப் போறாங்களாம் அந்தப் பசங்க..?"

"உனக்கு கூட இப்பல்லாம் பழய கத கேக்கறது சலிச்சுப் போயிருச்சு இல்ல.. இருக்கட்டும். கூவம்னு ஒரு ஆறு ஓடுதாம். அங்க ஒரு ஓரமா பட்டறையப் போட்டு பொழச்சிக்கறோம்னு சொல்லிப் போயிருக்காங்க..."

"அம்புட்டு தூரம் எப்படி போவாகளாம்.."

"அந்தக் கொடுமையை ஏன் கேக்கற..? இந்த வாய்க்கா வழியா போய், ஆத்தோட போனா, கடலூர் போவாகளாம். அப்புறம் அப்படியே கடலோரம் போற மாதிரியே வழி இருக்காம். அந்த வழியா போவாகளாம்..."

"அட.. ஏண்ணே கண் கலங்கறீங்க..? புள்ளங்க எல்லாம் நல்லபடியா வாழுமுங்கண்ணே. நீங்க கவலப்படாதீங்க"

"இருந்தாலும் அவ்ளோ தூரம் தனியா போகறாங்களேனு நெனச்சா தான் கண்ணுல தண்ணி வருது. வழியில எங்கயும் ஏதும் ஆயிரக் கூடாதேனு... நமக்கு மேல இருந்து ஒருத்தன் தூண்டி போட்டுக்கிட்டே இருப்பான். அவன் கிட்டயிருந்து அதுங்க பத்திரமா போய்ச் சேரணுமேனு கவல தான்.. கண்ணுல தண்ணி தான். ஆனா, அவங்களுக்கு நாம அழுதா எப்படி தெரியும். 'தண்ணியில மீனு அழுதா கண்ணீரு கரையில தெரியுமா'னு பாட்டு மட்டும் பாடிட்டு போயிடறானுங்க.. சரி விடு, நாம நம்ம பொழப்ப பார்ப்போம். அங்க ஏதோ பச்சயாத் தெரியுது பாரு. பாசம்னு நெனக்கிறேன்.. வா போய் சாப்பிடலாம்..."

1 comment:

Anonymous said...

அடே மீனுங்கதான் இப்படி பேசுச்சா நான் ஏமாந்துட்டேன் . என்னயே ரெண்டு முறை பட்டிக்க வெச்சிட்டியே.பேஷ் , பேஷ் ரொம்ப நன்னாருக்கு