Monday, January 28, 2008

போரின் பாற்பட்டு அழிந்த...



விரைவாக காட்சிகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன.

மண்ணில் புதைந்து போனது ஒரு பெரும் நகரம். எரியீட்டிகளும், வாள் பாறைகளும் உரசிக் கொண்ட பெரும் தீப்பந்தங்களின் எச்சிற்பட்டு அழிந்து போனது ஒரு நகரம். போரின் கோர முகத்தின் கடைவாயில் இருந்து கசிந்து கொண்டே இருக்கின்றது பசித்துப் பசித்துப் புசித்த மானிடர்களின் கருஞ்சிவப்புக் குருதி.

இருளின் நீள நகங்கள் கிழித்துப் போட்ட நிலத்தின் பெருங்கோடுகளின் ஆழங்களில் வீழ்ந்து கிடக்கின்றன உருட்டிப் போட்ட தலைகள்.

காற்றின் வீச்சில் கலந்து அடிக்கின்றது நகரத்தின் இல்லாமையின் கடும் நாற்றம்.

பற்றியெரிந்த பெரு நெருப்பின் கோரப் பற்களில் கிழிபட்டுத் தொங்குகிறது புராதனத்தின் பட்டாடையைப் போர்த்தியிருந்த பெண்களின் மென்னுடலின் கை, கால்கள்.

சாம்பலின் பொசுங்கிய பூக்கள் பூத்திருந்த தரையின் மேலெல்லாம் புரண்டு கிடக்கின்றன நாளெல்லாம் போர் போர் என்றே புறப்பட்டுச் சென்ற ஆறடிக் குவியல்கள்.

எரிகின்ற நெருப்பின் ஏப்பம் எல்லாம் புகையாய்ப் பெருகி வருகின்ற பூமியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றது, இறப்பின் கொடுங்கைகளில் இறங்கிய பெருங் குருதி.

வல்லூறுகளும், கழுகுகளும் வட்டமிட, கருங் கூந்தல் போல் சுருண்டிருந்த வானெங்கும் புள்ளிகளாய் இரத்தச் சிதறல்கள்.

மிச்சமில்லாதது ஒரு உயிரும் என்ற பேருண்மை நிலையில் கொம்பு உடைந்த சிலைகளின் நுனிகளில் தோய்ந்திருக்கின்றது காய்ந்து போன கரு நிற உயிரின் மிச்சம்....!

No comments: