Thursday, January 31, 2008

கண்ணுகளால் அர்ச்சன, மெளனங்ஙளால் கீர்த்தனம்...



ந்த இரவின் கால்கள் ஏன் இத்தனை மெதுவாக நடக்கின்றன? உன்னையும், உன்னை இதயத்தில் சுமக்கின்ற என்னையும் இரு கைகளில் ஏந்திக் கொண்டு, அலைகின்ற எண்ணங்களை அடக்கி விட்ட இந்த இரவு இனி ஏன் செல்ல வேண்டும் இத்தனை மெதுவாய்?

புழுதிக் காற்றில் நிழலாடும் சருகின் மேல் அமர்ந்த எறும்பைப் போல் எங்கெங்கோ நினைவுகள் செல்லும்.

பனித்துளிகளை தொலைத்து விடாத சின்னஞ் சிறு இலைகளைப் புரட்டி எடுக்கிறது குளிர்க்காற்று.

மினுக் மினுக்கென்று மின்னிக் கொண்டேயிருக்கின்ற மீன்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற என் கண்களுக்கு திரையிடுகிறது ஜன்னலின் மென்னாடை. பொலிவான குளிரொளி மெல்லப் புகுந்து விடுகிறது, அப்படியும்!

பிரிவின் நிமித்தம் பூக்கும் சில பூக்கள், என் தோட்டத்திலும் இப்போது!

விடை பெற்றுக் கொள்ளாத விரல்களைத் தேடி வீணையின் நரம்புகள் அலைபாய்கின்றன. அந்த நாதத்தில் நனைகின்ற பொழுதுகளில் கண்கள் கரைகின்றன.

தொலைவுக் கோயிலின் மஞ்சள் விளக்கொளிகள் நினைவூட்டும், ஒரு தங்க நிறத்தின் தரிசனம் தந்த பரவசத்தை..!

கனத்த மெளனத்திற்குப் பின் மொழிகின்ற வார்த்தைகள் தரும் தாங்க முடியாத இனிமைக்குப் பயந்தே பிரிவின் பகல் பொழுதில் கண்கள் மூடிக் கொள்ள பிரியப்படுகிறேன்.

நேரத்தின் முட்கள் குத்திக் கிழிக்கத் தொடங்கும் நேரம், நீ ஒரு மயிற்பீலி போல் தடவிச் செல்லும் போது, வடுக்களின் வாழ்விலும் வசந்தம் வீசும்.

ஒரு புன்னகை போதும் என்று நினைப்பதற்குள், பூத்து விடுகின்றது 'இன்னும் கொஞ்ச நேரம்' என்ற எண்ணம்.

இரயிலின் கரும்புகை சொல்லிச் செல்கின்றது, சில காலம் பொழுது விடிவதேயில்லை உனக்கு என்று.

அலையாடிய கடற்கரையோரமாய் நடந்து செல்கையில், என் பாத விரல்களோடு படிந்து வரும் மற்றுமொரு இணை.

மஞ்சள் பூக்கள் பூத்திடும் மாலை நேரம் முழுதும் தனிமையின் விரல்களை இறுக்கமாய்ப் பிடித்துக் கொள்கிறேன். விரட்டுவதற்கு இத் தனிமையும் இல்லையென்றால், பின் எதனை விரட்டி விட்டு ஆதுரமாய் உன் மடியில் என்னை அமர்த்திக் கொள்வாய்?

பொழுது புலர்ந்திடும் இன்றொரு இரவைத் தாண்டிய பின். மற்றுமொரு நாட்கள் செல்லும் பயணத்தின் தோள்களைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறேன், முதுகில் மூட்டையாய் நம் நினைவுகளைச் சுமந்து கொண்டு....!

2 comments:

Anonymous said...

வசந்த்,

தலைப்பில் வர எழுத்துப்பிழைய கவனிக்கலையா??

இல்ல தூக்கத்தில் எழுதியதா?? :)

///கனத்த மெளனத்திற்குப் பின் மொழிகின்ற வார்த்தைகள் தரும் தாங்க முடியாத இனிமைக்குப் பயந்தே பிரிவின் பகல் பொழுதில் கண்கள் மூடிக் கொள்ள பிரியப்படுகிறேன்.///

வாவ்வ்...ரொம்ப அழகா இருக்கு இந்த வரிகள்...:)

ஆனா இந்தப் படம் என்னவோ பொருந்தாத மாதிரி இருக்கு... ;)


மல்லிகை...

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை... நன்றி.
/*
தலைப்பில் வர எழுத்துப்பிழைய கவனிக்கலையா??
*/

தாங்கள்

http://kaalapayani.blogspot.com/2008/01/blog-post_31.html

இப்பதிவில் உள்ள மலை நாட்டுப் பாஅடலைக் கேட்கவில்லையென்று நினைக்கிறேன். அதில் வரும் வரிகள் இவை. மலையாளமுங்கோ...

/*ஆனா இந்தப் படம் என்னவோ பொருந்தாத மாதிரி இருக்கு... ;)
*/

இது ஒரு குடிமக்களுக்காக இப்படி பயணம் வந்த இராணி ஒருவரின் படம்.